”தாத்தா, கிளம்பி வாங்க,” என தன்னா சிங்கின் பேரன் எப்போதும் தொலைபேசியில் கூறுவதுண்டு. “எப்படி நான் திரும்ப முடியும்? அவனுடைய எதிர்காலத்துக்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன்,” என்கிறார் சிங் அவரது கூடாரத்துக்கு அருகே ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்தபடி.
“ஒவ்வொரு முறை அவன் (என்னுடைய மகனின் 15 வயது மகன்) சொல்லும்போதும் அழ வேண்டுமென தோன்றும். பேரக்குழந்தைகளை யாரேனும் இப்படி விட்டுவிட்டு வருவார்களா? மகனையும் மகள்களையும் இதுபோல் யாரேனும் விட்டு வருவார்களா?” எனக் கேட்கிறார் கண்ணீரினூடே.
என்னக் காரணத்துக்காகவும் திரும்பிச் சென்றுவிடக் கூடாது என உறுதி பூண்டிருந்தார் தன்னா சிங். நவம்பர் 26, 2020 தொடங்கி, திக்ரி விவசாயப் போராட்டக் களத்தில்தான் அவர் இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு நவம்பர் 19, 2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுமென பிரதமர் சொன்ன பிறகும் கூட சிங் திரும்பிச் செல்வதாக இல்லை. சட்டங்கள் முறையாகத் திரும்பப் பெறப்படும் வரை திக்ரியில் தான் இருக்கப் போவதாகச் சொல்கிறார் மனைவியை இழந்த 70 வயது சிங். “இச்சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கு ஜனாதிபதி ஒப்புக் கொள்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த நாள் வருவதற்காகதான் எங்கள் வீட்டை விட்டு வந்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.
ஒரு வருடத்துக்கு முன் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டு தில்லிக்கு செல்ல முயன்று, அனுமதி மறுக்கப்பட்டு, தில்லியின் எல்லைகளான திக்ரி (மேற்கு தில்லி), சிங்கு (வடமேற்கு தில்லி) மற்றும் காசிப்பூர் (கிழக்கு) ஆகிய இடங்களிலேயே தங்கிவிட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளில் அவரும் ஒருவர்.
பஞ்சாபின் முக்ட்சார் மாவட்ட பங்க்சரி கிராமத்திலிருந்து சில விவசாயிகளுடன் ட்ராக்டரில் சிங் இங்குக் கிளம்பி வந்துவிட்டார். போராட்டக் களத்துக்கு அருகே எங்கேனும் ட்ராக்டர் நின்று கொண்டிருக்கும். கிராமத்தில் அவரது குடும்பம் எட்டு ஏக்கர் நிலத்தில் கோதுமையும் நெல்லும் விளைவிக்கிறது. “விவசாய நிலத்தின் பொறுப்பை என் மகனிடம் கொடுத்து விட்டு நான் இங்கு வந்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.










