”சில நேரங்களில் ஒரு பெண் என்னை தொடர்பு கொள்வார் அல்லது அவரது ஆண் உறவினரை இரவில் ஆணுறை பாக்கெட் வாங்க என் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்,” என்கிறார் கலாவதி சோனி. பின்னிரவு நேரங்களாக இருந்தாலும் இந்த 54 வயது ‘கிடங்கு அக்கா’ கவலைப்படுவதில்லை. பெண்களின் அத்தியாவசியங்களை அவர்தான் திகாரி கிராமத்தில் வழங்குகிறார். “இரவில் கூட என்னை அணுகலாம்,” என்கிறார் அவர் உத்தரப்பிரதேசக் கிராமத்திலிருக்கும் அவரின் சிறுவீட்டு வராண்டாவில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து  நகைச்சுவையாக. “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை,” என தன் வேலையைப் பற்றி சொல்கிறார் கலாவதி.

கிராமத்தில் செயல்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் கூறிய ‘கிடங்கு அக்கா’ என்கிற வார்த்தைக் கொடுத்த ஆர்வத்தில் நாங்கள் அவரின் வீட்டுக்குச் சென்றோம். “ஏய்.. போய் அந்தப் பையை எடுத்து வா,” என கலாவதி அவரின் பேரனை அழைக்கிறார். நொடிகளில் அச்சிறுவன் இரண்டு மாடிக் கட்டடத்துக்குள்ளிருந்து புடைத்திருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையுடன் ஓடி வருகிறான். பல ஆணுறைகள், சானிடரி நாப்கின்கள், கருத்தடை மாத்திரைகள், நீர்ச்சத்து திரவப் பாக்கெட்டுகள் பையிலிருந்து வெளியே விழுகின்றன. அவற்றை அவர், கயிற்றுக்கட்டிலில் பார்வைக்கு வைப்பது போல் வரிசையாக அடுக்குகிறார்.

“இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல,” என அவர் அலட்சியமாக சொல்கிறார். “முதலில் நான் வீடு சம்பந்தப்பட்ட சிறு விஷயங்களைப் பேசுவேன். அவர்களின் குடும்பச் சூழல், மாமியார் மீதான புகார்கள், குழந்தைகள் பற்றிக் கொஞ்சம் போன்ற விஷயங்களை நாங்கள் பேசுவோம். நான் நன்றாகப் பேசக் கூடியவள். மெல்ல இந்த உரையாடல்களின் மூலம் எல்லா பெண்களும் ஒரே பிரச்சினைகளைதான் எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளலாமே என தொடங்கினேன். அவ்வளவுதான்,” என்கிறார் திகாரி கிராமத்தின் ‘கிடங்கு அக்கா’வாக அவர் எப்படி ஆனார் என்பதைப் பற்றி.

‘கிடங்கு அக்கா’ என்ற பெயர், சுகாதார முறைகளுக்கான அத்தியாவசியங்களைப் பெண்களுக்கு வழங்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பெயர். ஆனால் கலாவதி அங்கன்வாடி ஊழியரோ சுகாதார செயற்பாட்டாளரோ இல்லை. அவர்கள்தான் கிராமங்களின் கிடங்குகள் நடத்துபவர்களாக இருப்பவர்கள். உரிமமற்ற மருத்துவப் பயிற்சியாளரும் அவர் இல்லை. அடிப்படையான இனவிருத்தி சுகாதாரத்துக்கு தேவைப்படும் எல்லா விஷயங்களையும் அவர் வாங்கி வைத்திருப்பார். பெண்களின் இனவிருத்தி மற்றும் பாலுறவு பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களுடன் பேசுவார்.

Kalavati Soni, wearing the floral printed sari, with ASHA worker Vinita Soni to her right
PHOTO • Anubha Bhonsle
Some of the typical items that an ASHA carries to distribute – condoms, contraceptive pills, ORS sachets, iron supplements – are also found in Kalavati's bag
PHOTO • Anubha Bhonsle

இடது: பூப்பொறித்த சேலை அணிந்திருப்பவர் கலாவதி சோனி. அவரின் வலப்பக்கம் இருப்பவர் சுகாதார செயற்பாட்டாளரான வினிதா சோனி. வலது: வழக்கமாக சுகாதாரச் செயற்பாட்டாளர் வைத்திருக்கும் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், ஓஆர்எஸ் பானங்கள், இரும்புச்சத்து மருந்துகள் ஆகியவை கலாவதியின் பையில் இருக்கின்றன

“இந்த 15 வருடகாலப் பணியில் சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக உழைப்பதையும் அதிகமாக சோர்வடைவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவர்களில் ஒருவர் இரும்புச்சத்து மாத்திரைகளை ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொடுக்கச் செல்ல முடியாதபோது, என்னிடம் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னேன். எவ்வளவு மாத்திரை போட வேண்டும் என்பதை அப்பெண்ணுக்கு புரிய வைத்து உறுதி செய்கிறேன் என அவரிடம் கூறினேன். அப்படித்தான் இது எல்லாமும் தொடங்கியது,” என்னும் கலாவதிக்கு, கிராமப் பெண்களுக்கு உதவும் வேலை தொடங்கிய நாள் உறுதியாகத் தெரியவில்லை.

இளம் மணப்பெண்கள் தொடங்கி குடும்பத்தின் மூத்த பெண்கள் வரை எல்லா தலைமுறைப் பெண்களின் நம்பிக்கைப் பெற்றிருக்கும் அவர், முக்கியமான நெருக்கமான இடத்தை நிறைத்திருக்கிறார். என் மனதில் பற்பலக் கேள்விகள் தொடர்ந்து தோன்றின: இச்சை மற்றும் திருப்தி ஆகியவற்றைப் பற்றி பெண்கள் எப்படி பேசுவார்கள், அவர்தம் கணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள், கர்ப்பம், கருத்தடை முதலிய விஷயங்களை எப்படிப் பேசுவார்கள்? வெட்கப்படுவார்களா, தயங்குவார்களா, வெளிப்படையாக இருப்பார்களா? எங்கு இந்த உரையாடல்கள் நடக்கும்? அப்பெண்கள் தோழமை கொள்ளவும் ஆறுதல் தேடவும் அவர்தம் உடல்களைப் பற்றிய தகவல்கள் பெறவும் தேவையான வெளியை அவர்களிடம் கலாவதி எப்படி உருவாக்குகிறார்?

“பத்து வருடங்களுக்கு முன், இவற்றைப் பற்றிப் பேச நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது,” என்கிறார் அவர். வீட்டிலிருந்து மூத்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) குழந்தைப் பிறப்புக்கான இடைவெளி, கருத்தடை அல்லது பேரக் குழந்தைகள் முதலிய உரையாடல்களை ஆதரிக்கவில்லை. ‘இவள் நம் மருமகளைக் கெடுக்க வந்திருக்கிறாள்’ எனச் சொல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இளம் மணப்பெண்களிடம் அதிக விழிப்புணர்வு இருக்கிறது. ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆணுறை அவர்களுக்குத் தேவைப்படுமா என கேட்கிறார்கள்,” என்கிறார் கலாவதி. அவரின் இயல்பான உரையாடல் இனப்பெருக்க உரிமைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தேநீர் அருந்தும்போது நட்புடன் வேடிக்கையாகப் பேசும்போது, கலாவதி சிறு சிறு தகவல்களைக் கொடுக்கிறார். “ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமெனில் குழந்தைப் பிறப்புகளுக்கு இடையில் மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டுமென அவர்களிடம் சொல்வேன்,” என்கிறார் அவர்.

“மாமியார்களும் முன்னேறிவிட்டார்கள்,” என புன்னகைக்கும் அவர், பிப்ரவரி 2020-ல் இறந்துபோன அவரின் மாமியாரை நினைத்துக் கொள்கிறார். முதன்முறையாக இந்த விஷயங்களை வீட்டில் வாங்கி வைக்க அவர் தொடங்கியபோது ஆணுறைகளையும் மாத்திரைகளையும் மறைத்து வைப்பார். அவரது வேலையை அவரின் மாமியார் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற மக்களின் படுக்கையறை விவகாரங்களைப் பேசுவதும் அவர்களின் திட்டங்களில் தலையிடுவதும் தேவையற்ற வேலை என அவர் நினைத்தார். ஆனால் அவரின் இறுதி வருடங்களில் அவர் கலாவதியை ஆதரித்தார்.

Kalavati fills an important and intimate space working with young brides and elders in Tikari
PHOTO • Labani Jangi

திகாரியின் இளம்பெண்கள் மற்றும் மூத்தவர்களிடம் பணிபுரிந்து முக்கியமான நெருக்கமான வெளியை நிரப்புகிறார் கலாவதி

”இது தேவையற்ற மோசமான வேலை என அவர் நினைத்தார். எனக்கு திருமணமான புதிதிலேயே அடுத்தடுத்து நான் குழந்தைகள் பெற்றேன். இரட்டை ஆண் குழந்தைகள் முதலில், பிறகொரு பெண் குழந்தை. விரைவிலேயே மூன்றாம் முறை கருவுற்றேன். நிறைய சிக்கல்களும் வலியும் பல நாட்களுக்கு இருந்தன. என்னால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி எனக்கு அறிவுரை வழங்க யாரேனும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எந்த உதவியும் இல்லை. மூன்றாம் குழந்தையை நான் இழந்தேன். அது எனக்கு ஆத்திரமூட்டியது,” என, அவரின் சேவைகளை எந்தக் கட்டணமும் பெறாமல் அளிப்பதற்கான காரணத்தை விவரிக்கிறார்.

அவரின் அணுகுமுறை, இனவிருத்தி உரிமைகள் மற்றும் சிக்கல்களை மருத்துவரீதியாக மட்டுமே அணுகும் பொதுச் சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியவற்றிலிருந்து வித்தியாசப்பட்டது. ஆனால் அவரின் பணி கொள்ள வேண்டியக் கட்டுப்பாடுகளையும் கலாவதி தெரிந்து வைத்திருக்கிறார். “ஒரு பெண் வலியிலிருந்தாலோ நெருக்கடியில் இருந்தாலோ, அவர்கள் என்னை அழைக்க மாட்டார்கள்,” என்கிறார் அவர். ஒரு சுகாதார ஊழியரிடமோ பொதுச் சுகாதார மையத்துக்கோ அவர்கள் செல்வார்கள்.

இப்போதெல்லாம் அவர் சுகாதார ஊழியர்களுடன் இணைந்து பணிபுரிகிறார். ஆணுறைகள், மாத்திரைகள் மற்றும் பிற அத்தியாவசியங்கள் விநியோகிக்க அவர் உதவுகிறார். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும், அவரின் வீட்டிலிருந்து 25 நிமிட நடை தூரத்தில் இருக்கும் பெத்துவாவின் சுகாதார மையத்துக்குச் சென்று கருத்தடைச் சாதனங்கள் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார். தேவைப்படுவோருக்குக் கொடுப்பார். சுகாதார மையத்துக்குக் கிராமத்துப் பெண்கள் செல்ல சிரமமாக இருக்கும் சூழல்களில் அவை உதவுகிறது. ஆணுறைகள் மற்றும் மாத்திரைகள் கேட்டு மக்கள் அவரிடம் வருகிறார்கள். “எப்போதும் அவை என் வீட்டில் இருக்கும். ஆனால் நானும் சென்று தேவைப்படுகையில் அவற்றை விநியோகிப்பேன்,” என்கிறார் கலாவதி.

சுகாதார மையத்திலிருந்து அவர் வாங்கும் மாத்திரைகள் இலவசம். ஆணுறைகளையும் சானிடரி நாப்கின்களையும் அவர் ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து வாங்குகிறார். அல்லது சொந்தக் காசில் உள்ளூர் மருந்தகத்தில் வாங்குகிறார்.

Women of family in Tikari speaking to ‘depot didi’ Kalavati Soni and ASHA worker Vinita Soni
PHOTO • Anubha Bhonsle
During the lockdowns in 2020, Kalavati used to meet women secretly and give them contraceptive pills like Mala-N and Saheli, and condoms as well
PHOTO • Anubha Bhonsle

இடது: திகாரியின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ‘கிடங்கு அக்கா’ கலாவதி சோனியிடமும்  சுகாதாரச் செயற்பாட்டாளர் வினிதா சோனியிடமும் பேசுகின்றனர் வலது: 2020ம் ஆண்டின் ஊரடங்கின்போது பெண்களை ரகசியமாக சந்தித்து கலாவதி கருத்தடை மாத்திரைகளையும் ஆணுறைகளையும் வழங்கினார்

2020ம் ஆண்டு வந்த ஊரடங்கு கால மாதங்கள் கலாவதிக்கு பெரும் சவாலாக இருந்தன. வீட்டை விட்டு வெளியே வரத் தடை இருந்த காலத்தில் கருத்தடை சாதனம் கேட்டு மட்டும் தினமும் ஐந்து அழைப்புகள் வந்தன. “ஆண்கள் வெளியே செல்லவில்லை. வேலை கிடையாது. கர்ப்பமாகி விடுவோமோ எனப் பெண்கள் பயந்தனர். பலர் கர்ப்பமடையவும் செய்தனர். அவர்களை நான் ரகசியமாக வெளியே வயல்களில் சந்தித்து, ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் என்னிடம் தீரும் வரை கொடுத்து வந்தேன்,” என்கிறார் கலாவதி. பெண்களுக்கும் இச்சைகள் இருக்கின்றன. “இன்ன நேரமென சொல்ல முடியாமல் எப்போது வேண்டுமானாலும் இச்சை தோன்றும்,” என்கிறார் அவர்.

“பார்த்துப் பார்த்து நான் கொடுக்க வேண்டியிருந்தது. தேவை அதிகரித்துக் கொண்டிருந்தது. என்னால் எதையும் வாங்கவும் முடியவில்லை. என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிந்து கர்ப்பம் தரிக்க விரும்பாத ஏழு பெண்கள் ஊரடங்கு நேரத்தில் கர்ப்பம் தரித்தனர். உங்களால் என்ன செய்ய முடியும்?,” என அவர் கேட்கிறார். நாட்டை ஊரடங்கில் போட்டபிறகு, அதிகாரிகள் பெண்களைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என அவர் நினைக்கிறார். “இத்தகைய விஷயங்களைப் பற்றியும் இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் யார் யோசிக்கப் போகிறார்?,” என்கிறார் கலாவதி.

இத்தனை வருடங்களில் பல வயதுகளைக் கொண்ட பெண்கள் தங்களின் வாழ்க்கைகள், லட்சியங்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றி கலாவதியிடம் பேசியிருக்கின்றனர். அவர்கள் அவரை நம்புகின்றனர். “ரகசியங்கள் மற்றும் கதைகள் கொண்ட கிடங்கையும் கொண்டவள் நான்,” எனச் சொல்லி சிரிக்கிறார் அவர்.

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

ਅਨੁਭਾ ਭੋਂਸਲੇ 2015 ਦੀ ਪਾਰੀ ਫੈਲੋ, ਇੱਕ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ, ਇੱਕ ਆਈਸੀਐਫਜੇ ਨਾਈਟ ਫੈਲੋ, ਅਤੇ ਮਨੀਪੁਰ ਦੇ ਮੁਸ਼ਕਲ ਇਤਿਹਾਸ ਅਤੇ ਆਰਮਡ ਫੋਰਸਿਜ਼ ਸਪੈਸ਼ਲ ਪਾਵਰਜ਼ ਐਕਟ ਦੇ ਪ੍ਰਭਾਵ ਬਾਰੇ ਇੱਕ ਕਿਤਾਬ 'ਮਾਂ, ਕਿੱਥੇ ਮੇਰਾ ਦੇਸ਼?' ਦੀ ਲੇਖਿਕਾ ਹਨ।

Other stories by Anubha Bhonsle
Illustrations : Labani Jangi

ਲਾਬਨੀ ਜਾਂਗੀ 2020 ਤੋਂ ਪਾਰੀ ਦੀ ਫੈਲੋ ਹਨ, ਉਹ ਵੈਸਟ ਬੰਗਾਲ ਦੇ ਨਾਦਿਆ ਜਿਲ੍ਹਾ ਤੋਂ ਹਨ ਅਤੇ ਸਵੈ-ਸਿੱਖਿਅਤ ਪੇਂਟਰ ਵੀ ਹਨ। ਉਹ ਸੈਂਟਰ ਫਾਰ ਸਟੱਡੀਜ ਇਨ ਸੋਸ਼ਲ ਸਾਇੰਸ, ਕੋਲਕਾਤਾ ਵਿੱਚ ਮਜ਼ਦੂਰ ਪ੍ਰਵਾਸ 'ਤੇ ਪੀਐੱਚਡੀ ਦੀ ਦਿਸ਼ਾ ਵਿੱਚ ਕੰਮ ਕਰ ਰਹੀ ਹਨ।

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan