"தாலுக்கு வெளியில் இருந்து வரும் தொழிலாளர்கள் மிதக்கும் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டால், நீரில் மூழ்கிவிடுவோமோ எனக் கவலைப்படுகிறார்கள்!" என்று முகமது மக்பூல் மட்டூ சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய வேலைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை விட 200 ரூபாய் அதிகப்படுத்தி, நாளொன்றுக்கு 700 ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதாகச் சொல்கிறார் ஸ்ரீநகர் தால் ஏரியின் மோதி மொஹல்லா குர்த் பகுதியில் உள்ள 47 வயது விவசாயி. ஊதியச் செலவைக் குறைக்க, "நானும் என் மனைவி தஸ்லீமாவும் பிற வேலைகள் இருந்தாலும் தினமும் [இந்த வேலைக்கு] வருகிறோம்" என்று கூறுகிறார்.
முகமது மக்பூல் மட்டூ தனது 7.5 ஏக்கர் மிதக்கும் தோட்டத்திற்குச் செல்ல ஒரு படகைப் பயன்படுத்துகிறார். அங்கு அவர் சிவப்பு முள்ளங்கி மற்றும் சீமைப் பரட்டைக் கீரைப் போன்ற பல்வேறு காய்கறிகளை ஆண்டு முழுவதும் பயிரிடுகிறார். குளிர்காலத்தில் கூட அவர் அதைச் செய்கிறார், வெப்பநிலை -11 ° C ஆகக் குறையும் போது, அவர் படகு செலுத்த ஏரியின் பனிக்கட்டி மேற்பரப்பை உடைக்க வேண்டும். "இந்த வர்த்தகம் இப்போதெல்லாம் எங்களுக்கு போதுமான பணத்தை கொடுப்பதில்லை. ஆனாலும் நான் இதைச் செய்கிறேன். ஏனென்றால் என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான்,” என்று அவர் கூறுகிறார்.
18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் தால் ஏரி அதன் படகுகள், படகு சவாரிகள், பழங்கால மேப்பிள் மரங்கள் நிறைந்த சார் சினார் தீவு மற்றும் ஏரியின் எல்லையில் இருக்கும் முகலாய காலத் தோட்டங்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஸ்ரீநகரின் முதன்மையான சுற்றுலாத்தலம் இது.
மிதக்கும் வீடுகள் மற்றும் மிதக்கும் தோட்டங்கள் ஏரியில் அமைந்துள்ளன. இது சுமார் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இயற்கை நீர்த்தடத்தின் ஒரு பகுதியாகும். மிதக்கும் தோட்டங்களில் இரண்டு வகை உண்டு. ராத் மற்றும் டெம்ப். ராத் என்பது விவசாயிகள் தங்களின் கைகளால் நெய்த மிதக்கும் தோட்டமாகும். அவர்கள் இரண்டு வகையான இழைகளை ஒன்றாக நெய்கிறார்கள்: பெச் (டைபா அங்குஸ்டாட்டா) மற்றும் நர்காசா (பிராக்மிட்ஸ் ஆஸ்ட்ராலிஸ்). நெய்த பாய் போன்ற அமைப்பு ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு முதல் மூன்று மடங்கு வரை அளவிட முடியும். 3-4 ஆண்டுகள் ஏரியில் காய்ந்திருந்தாலும், சாகுபடிக்கு பயன்படுத்த முடியும். காய்ந்தவுடன், சேற்றால் பாய் பூசப்பட்டு, காய்கறிகள் வளர்க்க ஏற்றதாக மாறும். விவசாயிகள் ராதையை ஏரியின் பல்வேறு பகுதிகளுக்கு நகர்த்துகின்றனர்.
டெம்ப் என்பது ஏரியின் கரைகளிலும் கரைகளிலும் காணப்படும் சதுப்பு நிலமாகும். இது மிதக்கவும் செய்யும். ஆனால் இடம் மாற்ற முடியாது.















