2014 ஆம் ஆண்டில் ஆற்றல் மற்றும் வள நிறுவனம் (டெரி) மேற்கொண்ட மற்றொரு ஆய்வு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: " 1901 முதல் 2003 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் மழைப் பொழிவின் தரவு ஜூலை மாதத்தில் பெய்யும் பருவ மழை (மாநிலம் முழுவதும்) குறைந்து வருவதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழை அதிகரித்து வருகிறது என்றும் காட்டுகிறது... மேலும் பருவமழை காலத்தில் அதிகமான கனமழை பெய்யும் நிகழ்வுகளின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது, குறிப்பாக பருவமழை காலத்தின் முற்பகுதியில் (ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில்)", என்றும் குறிப்பிடுகிறது.
விதர்பாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவிற்கான பருவநிலை மாற்ற பாதிப்பு மற்றும் தகவமைப்புகளை மதிப்பிடுதல்: மஹாராஷ்டிரா மாநிலத்தின் பருவநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு செயல் திட்டம் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முக்கிய பாதிப்புகளாக "நீண்டகால வறட்சி மழைப் பொழிவு மாறுபாட்டின் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் மழையின் அளவு குறைதல்", ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
பந்தாரா, தீவிர மழைப்பொழிவு 14 முதல் 18 சதவீதம் வரை (அடிப்படையுடன் ஒப்பிடும்போது) அதிகரிக்கக்கூடிய மாவட்டங்களின் குழுவில் உள்ளது, மேலும் பருவமழை காலத்தில் வறண்ட நாட்களும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூர் பகுதியில் (பந்தாரா அமைந்துள்ள இடத்தில்) சராசரி ஆண்டு வெப்பநிலையான 27.19° யை விட 2030 ஆம் ஆண்டிற்குள் 1.18° முதல் 1.4° வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், 2050ஆம் ஆண்டிற்குள் 1.95° முதல் 2.2° வரை அதிகரிக்கக்கூடும் என்றும், மற்றும் 2070 ஆம் ஆண்டிற்குள் 2.88° முதல் 3.16° வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
பாரம்பரியமான நீர் நிலைகள் ஆறுகள் மற்றும் போதுமான மழைப் பொழிவினை முன்பு பெற்றதன் காரணமாக 'சிறந்த நீர்ப்பாசன' பிராந்தியமாக பந்தாரா இன்னும் அரசாங்க ஏடுகள் மற்றும் மாவட்டத் திட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் உண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பந்தாரா விவசாய அதிகாரிகள் கவனித்து இருக்கின்றனர். "மாவட்டத்தில் தாமதமாக பருவமழை பெய்யும் ஒரு நிலையான போக்கை நாங்கள் காண்கிறோம், இது விதைப்பு மற்றும் விளைச்சலை பாதிக்கிறது", என்று பந்தாராவில் உள்ள மண்டல விவசாய கண்காணிப்பு அதிகாரியான மிலிந்த் லாட் கூறுகிறார். நாங்கள் 60 முதல் 65 மழை நாட்களை கொண்டிருந்தோம் ஆனால் அது கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கு 40 முதல் 45 நாட்களாக குறைந்துவிட்டது. "பந்தாராவின் சில வட்டங்களில் - சுமார் 20 வருவாய் கிராமங்களில் - ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆறு அல்லது ஏழு நாட்களே இந்த ஆண்டு மழை பெய்திருக்கிறது என்று அவர் கண்டறிந்துள்ளார்.
"பருவமழை தாமதமாகி விட்டால் ஒருவரால் நல்ல தரமான அரிசியை விளைவிக்க முடியாது", என்று லாட் கூறுகிறார். "21 நாட்களுக்கு பிறகு நாற்றங்காலில் உள்ள பயிர்கள் வயலில் நடவு செய்யப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவில் உற்பத்தி திறன் குறையும்", என்றும் அவர் கூறுகிறார்.
நாற்றங்காலில் விதைத்த நாற்றுகளை எடுத்து வயலில் மறுநடவு செய்வதற்கு பதிலாக மீண்டும் பாரம்பரிய முறையில் விதைகளை விதைக்கும் முறை - நேரடியாக மண்ணில் விதைகளை விதைத்தல் - படிப்படியாக இம்மாவட்டத்தில் திரும்புகிறது. ஆனால் மறு நடவு முறையைப் போலல்லாமல் குறைந்த அளவு முளைப்புத்திறனைக் கொண்டிருப்பதால் நேரடியாக விதைக்கும் முறையில் விளைச்சலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், முதல் மழை பெய்யவில்லை என்றாலும் நாற்றங்காலில் நாற்றுகள் வளராமல் முழு பயிரையும் இழப்பதற்கு பதிலாக நேரடியாக விதைக்கும் முறையில் விவசாயிகள் ஓரளவு இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும் என்று கூறினார்.