மூடுவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. ஆனாலும் முதல் தளத்தில் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கிறது. அருகே இருந்த குடிசையிலும் யாரும் இல்லை. வெறும் நாற்காலிகளும் மேஜைகளும் பெஞ்சும் மருந்துகளுக்கான அட்டைகளும் கிடந்தன. ஒரு பழைய பெயர் பலகையும் கிடந்தது. மூடப்பட்ட அறையை கொண்டிருந்த அக்கட்டடத்தின் நுழைவாயிலில் புதிய பெயர் பலகை இருந்தது. ‘அரசு புதிய வகை ஆரம்ப சுகாதார நிலையம், ஷப்ரி மொகல்லா, தல், ஸ்ரீநகர்’.
இங்கிருந்து ஒரு பத்து நிமிட படகு பயணத்தில் நசிர் அகமது பட்டின் மருத்துவ மையத்துக்கு சென்றுவிட முடியும். அந்த மையம் எப்போதும் திறந்திருக்கும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு குளிரான பிற்பகலில் கடைசி வாடிக்கையாளரை (மாலையில் மீண்டும் வந்து நிறைய பேரை சந்திப்பார்) சிறிய மரத்தாலான கடையில் அவர் சந்தித்துக் கொண்டிருந்தார். ஊசி செலுத்துவதற்கென உள்ளே ஒரு தடுப்பு அறையும் இருக்கிறது. வெளியே இருக்கும் பெயர்ப்பலகையில், ‘பட் மருந்து விற்பனையாளர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
60 வயது ஹஃபீசா தர் பெஞ்சில் அமர்ந்து காத்திருக்கிறார். நசீர் மருத்துவரை படகில் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அவரின் வசிப்பிடம் 10 நிமிட படகு பயணத் தொலைவில் இருக்கிறது. “என்னுடைய மாமியார் சர்க்கரை நோய்க்கான சில ஊசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அதிக வயது என்பதால் நசீர் அய்யாவே கனிவுடன் வந்து ஊசி போட்டு விடுவார்,” என்கிறார் அவர் நசீரை வாழ்த்தியபடி. “மருத்துவர் அங்கு (ஆரம்ப சுகாதார நிலையம்) இருப்பதில்லை,” என்கிறார் விவசாயியாக இருக்கும் தர். அவருடைய கணவரும் ஒரு விவசாயிதான். தல் ஏரியில் படகும் ஓட்டுகிறார். “அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மட்டும் கொடுப்பார்கள். பிற்பகல் நான்கு மணிக்கு மேல் அங்கு யாரும் இருப்பதில்லை.”
ஏரியின் தீவுகளில் வாழும் மக்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை பார்த்த ஞாபகமே இல்லை. அதற்கு ஆகஸ்ட் 2019ல் தொடங்கி தொடர்ச்சியான ஊரடங்குகளும் ஒரு காரணம். “சில ஆண்டுகளுக்கு முன் வரை நன்றாக வேலை செய்த ஒரு மருத்துவர் அங்கு இருந்தார். ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2019லிருந்து அங்கு யாரையும் நாங்கள் பார்க்கவில்லை,” என்கிறார் 40 வயது முகமது ரஃபீக். சுற்றுலா புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். “அவர்கள் (ஊழியர்கள்) தொடர்ந்து வருவதில்லை. வந்தாலும் முழு வேலை நேரத்துக்கு இருப்பதில்லை.”
‘புதிய வகை ஆரம்ப சுகாதா நிலையங்கள்’ (கஷ்மீரின் மேம்படுத்தப்பட்ட மையங்கள்) எல்லாமும், ஸ்ரீநகரின் தலைமை மருத்துவ அதிகாரியின் துணை திட்ட இயக்குநர் அலுவலகத்தின்படி, மருத்துவ அதிகாரியாக ஒரு மருத்துவரையும் ஒரு மருந்ந்து விற்பனையாளரையும் ஒரு பெண் ஊழியரையும் ஒரு செவிலியரையும் கொண்டிருக்க வேண்டும். சுகாதார சேவைத்துறை அவர்களை நியமிக்க வேண்டும்.










