மகள் இறந்த ஐந்து வருடங்களில் கண்டா பிஸேவின் கோபம் அவரை திடமாக பேச வைத்திருக்கிறது. “என் குழந்தை வறுமையால் இறந்தாள்,” என்கிறார் கண்டா. அவரின் மகள் மோகினி பிஸே 2016ம் ஆண்டின் ஜனவரி 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இறந்தபோது மோகினிக்கு 18 வயது. 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். “12ம் வகுப்புக்கு மேல் அவளை படிக்க வைக்க வசதி இல்லை. எனவே திருமணம் செய்து கொடுக்க வரன் தேட ஆரம்பித்தோம்,” என்கிறார் 42 வயது கண்டா. மகாராஷ்டிராவின் லதூர் மாவட்டத்திலுள்ள வகோலி கிராமத்தை சேர்ந்தவர்.
திருமணம் என்றால் செலவு. கண்டாவும் அவரது கணவரான 45 வயது பாண்டுரங்கும் கவலைப்பட்டனர். “என்னுடைய கணவரும் நானும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்க்கிறோம். மோகினியின் திருமணத்துக்கு தேவையான பணத்தை சேர்க்க முடியாது என நினைத்தோம். அச்சமயத்தில் வரதட்சணை 1 லட்சம் ரூபாயாக இருந்தது.”
ஏற்கனவே 5 சதவிகித வட்டிக்கு ஒரு வட்டிக்கடையில் வாங்கிய 2.5 லட்சம் கடனுக்கு மாதந்தோறும் இருவரும் பணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். 2013ம் ஆண்டு மூத்த மகள் அஸ்வினிக்கு நடந்த திருமணத்துக்காக வாங்கப்பட்ட கடன் அது. மோகினியின் திருமணத்துக்கு நிலத்தை விற்பதை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை. நிலம் 2 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டது.
பிஸே வகோலியில் இருக்கும் அவர்களது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யவில்லை. “நீராதாரம் கிடையாது. எங்கள் பகுதியில் எப்போதும் பஞ்சம்தான்,” என்கிறார் கண்டா. 2016ம் ஆண்டில் பிறரின் நிலங்களில் வேலை பார்த்து கண்டா 150 ரூபாயும் பாண்டுரங்க் 300 ரூபாயும் நாட்கூலியாக சம்பாதித்தனர். இருவரும் மாதத்துக்கு 2000 முதல் 2400 ரூபாய் வரை சம்பாதித்தனர்.



