ஜூன் மாதத்தையும், அதைத் தொடர்ந்து வரப்போகும் மழைக்காலத்தையும் நினைத்து அஞ்சுகிறார் விவசாயி சுனந்தா சூபே. ‘மோட்டே கோகல்கே’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள் இந்தக் காலக்கட்டத்தில்தான் அவரது ஒரு ஏக்கர் விளைநிலத்தை நாசமாக்கும்.
“நெல், சோயா மொச்சை, நிலக்கடலை, கருப்பு காராமணி, சிவப்புக் காராமணி என எதை சாகுபடி செய்தாலும் அவற்றை இந்த நத்தைகள் உண்ணும்,” என்கிறார் அவர். மா, சப்போட்டா, பப்பாளி, கொய்யா என எந்தப் பழவகையும் அவற்றிடம் இருந்து தப்பிக்க முடியாது. “பல்லாயிரக்கணக்கான நத்தைகள் வரும்,” என்கிறார் இந்த 42 வயது விவசாயி.
மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியான மகாதேவ் கோலி சமுதாயத்தை சேர்ந்தவரான சுனந்தா, சாஸ்கமான் அணைக்கு அருகே தனது தாயோடும் சகோதரனோடும் வசிக்கிறார். அணையின் ஒருபுறம் இவரது வீடும், மறுபுறம் இவரது வயலும் உள்ளன. எனவே அரைமணி நேரம் படகு வலித்தால்தான் வீட்டிலிருந்து நிலத்துக்கோ, நிலத்தில் இருந்து வீட்டுக்கோ செல்ல முடியும்.
ஆப்பிரிக்கப் பெருநத்தைகள் (Achatina fulica) இந்தியாவில் பெருவேகத்தில் வளரும் உயிரினமாக உள்ளன என்கிறது குளோபல் இன்வேசிவ் ஸ்பீஷிஸ் டேட்டாபேஸ். இந்தியாவில் பலவிதமான பயிர்களை உண்டு வாழும் ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள், ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் திவய் மலையின் அடிவாரத்தில் உள்ள வயல்களை ஆக்கிரமிக்கும். சமயத்தில் அவை சில மாதங்களுக்குக் கூட இருக்கும். 2022 இறுதியில் இந்த செய்தியாளரிடம் பேசிய சுனந்தா கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் பிரச்சனையை சந்திப்பதாக கூறினார்.












