“நமக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடிவதற்குக் காரணம் எது தெரியுமா? அரசியல் சாசனம்.” அவருடைய நடமாடும் புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வாடிக்கையாளரிடம் அரசியல் சாசனப் புத்தகத்தைத் தூக்கிக் காட்டி இப்படிச் சொல்கிறார் அவர். சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்ட கோட்காவோன் கிராமத்து கண்காட்சியிலுள்ள அவரது கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலேயே அடர்த்தியானது அரசியல் சாசனப் புத்தகம்தான். அவரின் ஜொராதாப்ரி கிராமத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் வாரச்சந்தை அது.
எழுதவோ படிக்கவோ தெரியாத ராம்பியாரி, கடைக்கு வரும் அனைவரிடமும் அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அவரைப் போலவே வாடிக்கையாளர்களும் அப்பகுதியின் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களே. புத்தகம் விற்பவர் அரசியல் சாசனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்தான் முனைப்பாக இருந்தார்.
ஒவ்வொருவரும் தம் வீட்டில் வைத்து உரிமைகளையும் கடமைகளையும் கற்றுக் கொள்ள வேண்டிய ”ஒரே புனித நூல்” அதுதான் என ராம்பியாரி சொல்கிறார். “பழங்குடி மற்றும் தலித்களாகிய நமக்கு இட ஒதுக்கீட்டை (உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்) அரசியல்சாசனமும் அதன் ஐந்தாம் ஆறாம் பிரிவுகளும்தான் (பழங்குடிச் சமூகங்கள் பாதுகாப்பு) தருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்கிறார் அவர், சந்தைக்கு பிரதானமாக காய்கறி, மளிகை முதலியவற்றை வாங்க வந்திருக்கும் கோட்காவோன் மக்களிடம்.
ராம்பியாரி கவாச்சிக்கு 50 வயதிருக்கலாம். சட்டீஸ்கரின் பெரிய பழங்குடிச் சமூகமான கோண்ட் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் மூன்றிலொரு பங்கு மக்கள் பட்டியல் பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர் விற்கும் பெரும்பாலான புத்தகங்கள் இந்தி மொழியில் இருக்கின்றன. கோண்டி மொழியிலும் ஆங்கில மொழியிலும் கூட சில புத்தகங்களை அவர் வைத்திருக்கிறார். யாரேனும் ஒரு புத்தகத்தை எடுத்தால் ராம்பியாரி அதன் உள்ளடக்கத்தை விளக்குகிறார். கிட்டத்தட்ட சிறு புத்தக விளக்கவுரை போல் அது தொனிக்கிறது.







