கன்னடம் பேசும், தெலுங்கில் படிக்கும் நாகண்ணா என்னும் நாகிரெட்டி, தமிழ்நாட்டில் வசிப்பவர். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் காலையில் ஓரு நாள் அவரைச் சந்திக்க சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. `பக்கத்துலதான்`, எனச் சொன்ன அவர் வீடு, நீர்நிறைந்த ஒரு ஏரியை அடுத்து ஒரு புளியமரம், அதையடுத்து யூகலிப்டஸ் மரக் காடு, ஒரு மாந்தோப்பு என அனைத்தையும் தாண்டி, ஒரு காவல் நாய், கத்திக் கொண்டிருக்கும் அதன் குட்டிகள், ஒரு மாட்டுத்தொழுவம் என்னும் சூழலில் மிக அருகில் இருந்தது.
இந்திய உழவர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தாண்டி, ராகி உற்பத்தியாளர் நாகண்ணாவுக்கு ஒரு கூடுதல் பிரச்சினை உண்டு. அந்தப் பிரச்சினையின் தீவிரத்தால், அவர் விளைவிக்கும் பயிரையே மாற்ற வேண்டி வந்தது. மொட்ட வால், மக்கனா மற்றும் கிரி என்னும் வலிமையான, பயங்கரமான உருவம் கொண்ட மூவர்தான் அவர் பிரச்சினைகளின் மூல காரணம்.
உழவர்கள் இந்த மூவர் தரும் பிரச்சினைகளை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. 4000-5000 கிலோ எடையுள்ள இவர்களை எப்படி லேசாக எடுத்துக் கொள்ள முடியும்.. உழவர்களின் பயிர்களைச் சூறையாடித் தின்ன வரும் இவர்கள் காட்டு யானைகள்.
நாம், தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறோம். நாகிரெட்டியின் ஊரான வத்ரா பாளையம் குக்கிராமம், தேன்கனிக்கோட்டை தாலூகாவில் உள்ளது. அவரது கிராமத்திலிருந்து வனப்பகுதி வெகு தூரமில்லை. துரதிருஷ்ட வசமாக யானைகளிடமிருந்தும் அதிக தூரமில்லை. நாம் அவர் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருக்கிறோம். நாகண்ணா என கிராமத்து மக்களால் அழைக்கப்படும் 86 வயது நாகிரெட்டி, சத்து மிகுந்த உணவுதானியமான ராகிப் பயிரை உற்பத்தி செய்பவர். வேளாண்மையில் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்தையும் – நல்ல, மோசமான, பல நேரங்களில் கொடுமையானவற்றையும் கண்டு, கடந்து வந்த சாட்சி இவர்.
`நான் இளவயசா இருக்கறப்ப, வருஷத்துல சில நாள், ராகிப் பயிர் வாசத்துக்கு ஆனை வரும்`
`இப்போ?`
`இப்போ பயிரு, பழங்களத் தின்னு பழகிடுச்சு.. அடிக்கடி வருது`.
இதன் காரணங்கள் இரண்டு என விளக்குகிறார் நாகண்ணா. `1990க்கப்பறம் காட்டுல யானை அதிகமாயிருச்சு.. காடு சுருங்கிப் போயிருச்சு.. அங்க தீனி கெடைக்கறதும் குறஞ்சு போயிருச்சு.. அதனால இங்கே வந்துருது.. நீங்க ஒரு ஓட்டலுக்குப் போயி, அங்க சாப்பாடு நல்லா இருந்தா, ஒங்க நண்பர்களுக்குச் சொல்லி, அவங்களும் போற மாதிரி, முதல்ல வந்த யானைகள் அவங்க நண்பர்களுக்குச் சொல்லிடுச்சுங்க`, எனப் பெருமூச்சுடன் சிரிக்கிறார். இந்த ஒப்பீடு அவருக்கு வேடிக்கையாகவும், எனக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
































