கையிலிருந்த காலை ஃபில்டர் காபியை கீழே வைத்துவிட்டு “அடக் கடவுளே!” என அவள் அலறினாள். தொலைபேசியை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு, அலுவலக மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்த கணவருக்கு வாசித்துக் காட்டினாள். “மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் ஏறி 16 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் - நீங்கள் இதை பார்த்தீர்களா? என்ன நடந்து கொண்டிருக்கிறது?” ஒரு நிமிடத்தில் மனம் மரத்துப் போனது. செய்தியை சில மிடறுகளில் படிக்கும் வகையில் காபியின் சூடு ஆறியிருந்தது. “கடவுளே… எத்தனை பேர்? எங்கே இருந்து இவர்கள் வந்தார்கள்?” அவளுடைய குரலில் இருந்த ஆச்சரியம் முன்பை விட சற்று தணிந்திருந்தது.
“ஒரு பாதி உமாரியாவில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். போன டிசம்பர் மாதம் நாம் சென்ற இடம்தானே அது, மனு?” சுற்றுலாவை பற்றி சொன்னதும் அவன் சில கணங்களுக்கு அவளை பார்த்து “ஆம்” என சொன்னவன் மீண்டும் தன் மின்னஞ்சல்களுக்குள் புதைய சில கணங்கள் ஆனது. “பந்தர்வ்கர் தேசியப் பூங்கா. மத்தியப்பிரதேசத்தின் பின் தங்கிய மாவட்டங்களுள் ஒன்றில் இருக்கிறது. அங்கிருந்து இவர்கள் ஜல்னாவுக்கு வேலை தேடி வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் தண்டவாளத்தில் போய் தூங்குவார்களா? என்ன ஒரு முட்டாள்தனம்?”
“அது எவ்வளவு அழகாக இருந்தது,” என்றவள் வேறு கிரகத்தில் இருப்பதை போலிருந்தாள். “ஷேஷ் ஷைய்யாவை ஞாபகம் இருக்கிறதா? அற்புதமான விஷ்ணுவின் சிலையும் அதை சுற்றியிருந்த பசுமையான காடுகளும். இந்த ஊரடங்கு முடிந்ததும் நாம் மீண்டும் அங்கொரு தடவை செல்ல வேண்டும்…”
யார்?
அவர்களை நாடு கடத்தியவர்கள் யார்?
அவர்களை வெளியேற்றி கதவு அடைத்தவர் யார்?
ஊர் ஊராக அவர்களை அலையவிட்டவர் யார்?
அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்தவர் யார்?
சாலைகளில் தடுப்புகளை போட்டவர் யார்?
வீட்டோடு அவர்களை முடக்கியவர் யார்?
மறந்த கனவுகளை அவர்களுக்கு
திரும்ப தந்தவர் யார்?
அவர்களின் அடிவயிற்றுப் பசியுடன்
பெருமூச்சையும் சேர்த்துக் கொடுத்தவர் யார்?
அவர்களின் வறண்ட கழுத்துகளில்
ஈரம் கனிந்த நினைவைக் கொடுத்து திணறடித்தவர் யார்?
வீடு, முற்றம், கிராமம்,
நிலத்தின் ஓரம் மற்றும்
குழந்தைகளின் இனிய குரல்கள்
எல்லாவற்றையும் காய்ந்த ரொட்டிகளுடனும்
மிளகாய் சட்னியுடனும் சேர்ந்து பொட்டலம் கட்டியவர் யார்?
ஒவ்வொரு கவளத்தையும்
சோம்பிய நம்பிக்கைகளால் நிரப்பியவர் யார்?
தண்டவாளத் தூக்கம்தான்
கிராமத்திவோரக் காடுகளைத் தூண்டி
அதை செய்திருக்கும் நிச்சயமாக.
கனவுகள் பொதிந்த
பட்டுப் படுக்கைகளை பின் யார்
அவர்களுக்கு அங்கு கொடுத்திருப்பார்?
பந்தவ்கரின் 16 சகோதரர்கள்
கல்லாய் கிடக்கும் சாபத்தை
பின் எவர் விட்டிருப்பார்?
ஒன்றல்ல இரண்டல்ல
பதினாறு விஷ்ணுகளையும் ஷைஷ்னாகில்
தூங்கியிருக்க பின் யார் செய்திருப்பார்?
வேறு யார் சிவப்பு சந்திரகங்காவை
பெருவிரல்களிலிருந்து சிந்த விட்டிருப்பார்?
தண்டவாளத்தில் வேறு யார்
செருப்புகளை விட்டுச் சென்றிருப்பார்?
கடவுள்கள் நம்மை தண்டிப்பார்கள்.
பாதி தின்று மிச்சமிருக்கும்
ரொட்டிகளை தண்டவாளத்தில்
பின் யார் விட்டுச் சென்றிருப்பார்?
யார்?
எழுத்தாளர் எழுதிய குஜராத்தி கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
குரல்: சுதன்வா தேஷ்பாண்டே ஜன நாட்டிய மஞ்ச்சில் நடிகராகவும் இயக்குநராகவும் இருப்பவர். LeftWord Books-ன் ஆசிரியராகவும் இருக்கிறார்.
குறிப்பு:
மராத்தி தினசரியான லோக்மத்தில்
குறிப்பிடப்பட்டிருந்த இறந்த தொழிலாளர்களின் பெயர்கள்:
1. தன்சிங் கோண்
2. நிர்வேஷ் சிங் கோண்ட்
3. புத்தராஜ் சிங் கோண்ட்
4. அச்செலை சிங்
5. ரபெந்திர சிங் கோண்ட்.
6. சுரேஷ் சிங் கவுல்
7. ராஜ்பொராம் பரஸ் சிங்
8. தர்மேந்திர சிங்க் கோண்ட்
9. விரேந்திர சிங்க் சைன்சிங்
10. பிரதீப் சிங் கோண்ட்
11. சந்தோஷ் நபிட்
12. ப்ரிஜேஷ் பெயதின்
13. முனிம்சிங் ஷிவ்ரதன் சிங்
14. ஷ்ரிதயாள் சிங்
15. நேம்ஷா சிங்
16. தீபக் சிங்
தமிழில்: ராஜசங்கீதன்