டெல்லி ஜிடி கர்னால் பைபாசில் நம் கண் முன்னால் நடந்த சம்பவங்கள் சற்று விசித்திரமானது.
ஒரு டிராக்டர் குழுவினர் டெல்லி நோக்கியும் – மற்றொரு குழுவினர் டெல்லியிலிருந்து சிங்குவிற்கும் சென்றனர். இருதரப்பும் நெடுஞ்சாலையில் சந்தித்துக் கொண்டன. இதனால் சிறிது குழப்பமும் நிலவியது. தங்கள் தலைவர்களின் அழைப்பின்பேரில் ஒரு குழு டெல்லியிலிருந்து திரும்பியது. காவல்துறையினரிடம் ஒப்புதல் பெற்ற வழிதடத்திற்கு மாறாக வேறு பாதையில் நகரத்திற்குள் நுழைவதற்கு தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தவறாக கருதி சிலர் தலைநகருக்குச் சென்றனர்.
நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காசிப்பூர், சில்லா, மேவாட் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து தன்னிச்சையான குடியரசு தின அணிவகுப்பை நடத்தினர். ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள ஷாஜஹான்பூரிலும் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் குறிக்கும் வகையில் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அனைத்திந்திய கிசான் சபாவின் மாபெரும் அணிவகுப்பு குடியரசு தினத்தில் இதுவரை இல்லாத புகழ்மிக்க குடிமக்கள் அணிவகுப்பாக இருந்தது.
பெருந்திரளான, அமைதியான, ஒழுங்கான, முற்றிலும் தலைமையற்ற செயலாக இருந்தது. எளிய குடிமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சேர்ந்து குடியரசை மீட்டுருவாக்கும் முயற்சியாக இது இருந்தது. லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்ற - இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த இணையற்ற முயற்சியிலிருந்து ஊடகத்தை திசை திருப்பும் வகையில் சிறு குழு ஈடுபட்டது. டெல்லியில் நடக்கும் கண்கவர் நிகழ்வை மாற்றும் செயல் அது. டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைச் (எஸ்கேஎம்) சேர்ந்த 35 விவசாய சங்கங்கள், திட்டமிட்ட பாதையை மீறி டெல்லிக்குள் நுழைந்த இக்குழுவின் வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ளன. “விவசாயிகளின் அமைதியான, வலிமையான போராட்டத்தை முறியடிக்கும் நோக்கில் செய்யப்பட்ட சூழ்ச்சி” என்று இச்செயலை எஸ்கேஎம் கண்டித்துள்ளது.


















