"அனைத்து 32 தொழிற்சங்கங்களும் நவ்ஜவான் [இளைஞர்களை] எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றன. யாரும் எந்த சேதத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். யாரும் மோத மாட்டார்கள். நமது இந்த போராட்டத்தை யாரும் கெடுக்கக்கூடாது, ”என்று ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டன. டெல்லி காவல்துறையினர் நமக்கு ஒதுக்கிய அதிகாரபூர்வ வழியை அனைவரும் பின்பற்றுவார்கள். இந்த உலகம் காண நாம் அமைதியாக அணிவகுத்துச் செல்வோம், ”என்று ஒரு டிராக்டரில் வைக்கப்பட்ட ஒலிபெருக்கியின் மீது தலைவர் கூறினார்.
ஜனவரி 26 ஆம் தேதி காலை 9:45 மணியளவில், முண்ட்கா தொழிற்துறை பகுதி மெட்ரோ நிலையத்தை கடந்து டிராக்டர்களின் படை நகர்ந்து கொண்டிருந்தபோது, ஒலிபெருக்கி உயிர் கொண்டது. தலைவர்களின் வேண்டுகோளை அனைவரையும் நிறுத்தி கேட்கும்படி தன்னார்வலர்கள் ஒரு மனித சங்கிலியை உருவாக்க முன்வந்தனர்.
மேற்கு டெல்லியில் உள்ள திக்ரியிலிருந்து காலை 9 மணிக்கு ‘கிசான் மஜ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ (விவசாய தொழிலாளர் ஒற்றுமை வாழ்க) ' கோஷங்களுக்கிடையில் பேரணி தொடங்கியது. இந்த டிராக்டர்களின் படை தவிர, பல போராட்டக்காரர்களும் தன்னார்வலர்களும் நடைப்பயணமாக அணிவகுத்துச் சென்றனர் - சிலர் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டனர், மற்றவர்கள் தங்கள் வேளாண் தொழிற்சங்கக் கொடிகளை ஏந்திச்சென்றனர். "நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால், காலில் பயணிப்பவர்களை டிராக்டர்களில் ஏறுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று ஒலிபெருக்கியில் பேசும் தலைவர் கூறினார். ஆனால் நடந்து சென்றவர்களில் பலர் நடைப்பயணத்தையே தொடர்ந்தனர்.
அவர்களின் படை சீராக முன்னேறும்போது, முண்ட்கா பகுதியில் வசிக்கும் பலரும் அவர்கள் செல்வதைப் பார்க்க நின்றனர்; சாலைகளின் ஓரங்களில் அல்லது பிரியாயத்தில் நின்று கொண்டுப் பார்த்தனர். பலரும் ஈடு இணையற்ற அணிவகுப்பை தங்கள் தொலைபேசிகளில் பதிவுச்செய்தனர், சிலர் கைக்காட்டினர்; மற்றவர்கள் ’தோல்’ இசைக்கருவியின் இசைக்கு நடனமாடினர்.
முண்ட்காவில் வசிப்பவர்களில் ஒருவர், 32 வயதான விஜய் ராணா. அவர் விவசாயிகள் அவரது இடத்தை கடந்தபோது, அவர்கள் மீது சாமந்தி இதழ்களை தூவ வந்திருந்தார். அவர் கேட்டார், "அரசியல்வாதிகளை மலர்களால் வரவேற்கும்போது, விவசாயிகளை ஏன் அப்படி வரவேற்கக்கூடாது?.” ராணா ஒர் விவசாயிதான், முண்ட்கா கிராமத்தில் 10 ஏக்கரில் கோதுமை, நெல் மற்றும் சுரைக்காய் பயிரிடுகிறார். "விவசாயிகள் வீரர்களுக்கு இணையானவர்கள்," என்று அவர் கூறினார். “இந்த நாட்டின் வீரர்கள் எல்லைகளை விட்டு வெளியேறினால், இந்த தேசத்தை யார் வேண்டுமானாலும் கைப்பற்றலாம். இதேபோல், விவசாயிகள் இல்லை என்றால், நாடு பட்டினி கிடக்கும்.”








