“முதலில் சமையலறையில் தான் தொடங்கியது,” என்கிறார் 2023, ஜனவரி 3ஆம் தேதி ஏற்பட்ட அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகர வாசியான அஜித் ராகவ்.
37 வயது ஜீப் ஓட்டுநரான அவர் தனது வீட்டின் சமையலறையில் முதலில் ஏற்பட்ட பிளவு பிற இடங்களிலும் பரவியதாக சொல்கிறார். அவரது எளிமையான இரண்டு அடுக்கு வீட்டில் குறைவான வெடிப்புள்ள ஒற்றை அறையை தற்காலிக சமையலறையாக மாற்றியுள்ளார். எட்டுப் பேர் கொண்ட அக்குடும்பத்திற்கு திடீரென தங்க இடமின்றி போய்விட்டது.
“மூத்த மகள்களான 12 வயது ஐஸ்வர்யா, 9 வயது ஷிருஷ்டியை என் மூத்த சகோதரி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்,” என்கிறார் ராகவ். ராகவ் அவரது மனைவி கவுரி தேவி, ஆறு வயது மகள் ஆயிஷா, அவரது வயதான இரண்டு அத்தைகள் ஆகியோர் அங்கு தங்கி உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். மாலையில் அருகில் உள்ள நகரின் சன்ஸ்கிரித் மகாவித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புக்கு உறங்கச் செல்கின்றனர். 25-30 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இங்கு இப்படி தங்கியுள்ளனர்.
ஜனவரி 21, 2023 அன்று சமோலி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படிஜோஷிமாத்திலுள்ள ஒன்பது வார்டுகளிலுள்ள 181 கட்டடங்கள் வாழப் பாதுகாப்பற்றவை. 863 கட்டடங்கள் விரிசல்களைகொண்டிருந்தன. பகுதியிலுள்ள வீடுகளின் விரிசல்களை பாரிக்கு ராகவ் காட்டுகிறார். “இங்கிருக்கும் ஒவ்வொரு வீடும் ஜோஷிமாத்தின் கதைதான்,” என்கிறார் அவர் கட்டுப்படுத்தப்படாத வளர்ச்சித் திட்டங்கள்தாம் இச்சூழலுக்கு காரணம் எனக் குறிப்பிட்டு.
ஜோஷிமாத் கட்டடங்களின் கூரைகளிலும் சுவர்களிலும் தரைகளிலும் பிளவுகள் ஜனவரி 3, 2023லிருந்து உருவாகத் தொடங்கியதாக ராகவ் கூறுகிறார். சில நாட்களிலேயே தீவிர நெருக்கடியை நிலைமை தொட்டது. அதே நேரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) நேஷனல் ரிமோட் சென்சிங் செண்டர் (NRSC) ஜோஷிமாத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலங்களின் அளவு பற்றிய புகைப்படங்களை வெளியிட்டது: 2022 டிசம்பர் 2022 முடிவு தொடங்கி ஜனவரி 2023 தொடக்கம் வரை 5:4 செமீ. புகைப்படங்கள் தற்போது NRSC இணையதளத்தில் இல்லை.
ராகவ் வசிக்கும் சிங்தர் வார்டில் 151 கட்டடங்கள் விரிசல்களை கொண்டிருக்கிறது. 98 கட்டடங்கள் பாதுகாப்பற்ற பகுதியில் இருக்கின்றன. அவை யாவும் மாவட்ட அதிகாரிகளால் செஞ்சிலுவை வரையப்பட்டு, வாழவும் அருகே இருக்கவும் பாதுகாப்பற்றவை என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
















