ஜெயம்மா பெல்லியா, 35, இவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலிருக்கும் அனஞ்சிஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெனு குருபா ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர். மனிதர்களும், மிருகங்களும் வாழும் காட்டில் ஒருவர் மற்றொருவரால் கொல்லப்படக்கூடிய சாத்தியமிருக்கும் வாழ்க்கைக் குறித்த புகைப்படக் கட்டுரை இது. கடந்த ஆறு மாதங்களாக, இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு இடங்களில் பிரதானமாக விளங்கும் பாந்திப்பூர் தேசிய பூங்கா அருகில் வசிக்கும் ஜெயம்மா தன்னுடைய தினசரி வாழ்க்கையை புகைப்படங்களாக எடுத்தார். இவருடைய இந்த புகைப்படக் கட்டுரை வன விலங்குகளோடு சேர்ந்து வாழ்வது தொடர்பான மிகப் பெரிய கூட்டு புகைப்படத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். முதன்முதலாக அவர் கேமராவைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதும் இந்த சமயத்தில்தான். (a Fujifilm FinePix S8630).
வழக்கமாக கண்ணுக்குத் தெரியாத மனித – விலங்கு வாழ்க்கைக்கு இடையேயான ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கவியல் உறவை இவருடைய இந்த புகைப்படக்கட்டுரை முன்னிலைப்படுத்துகிறது. இக்கட்டுரை கிராமப்புற ஏழைமக்களின் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை பெருமளவு உதாசீனம் செய்யும் வனவிலங்குகளின் பராமரிப்புக்கென்று பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறைகளை மறைமுகமாக கேள்வி கேட்கிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தவிர்த்து, பறவைகளின் அழகான புகைப்படங்கள் பலவற்றையும் படம் பிடித்தார். “இந்த மாதிரி நல்ல படங்களை எடுக்க என்னால் கற்றுக் கொள்ள முடியும் என்பதையறிந்த என் குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர்,” என்று ஜெயம்மா கன்னடத்தில் கூறினார்.
அகழியில் பசுக்கள் : “ என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இந்த வனப்பசுக்களை [விவரிக்க முடியாத உள்ளூர் கால்நடை, இவை பெரும்பாலும் சாணம் போடும் பசுக்களாகவேக் கருதப்படும்] என்னுடைய சகோதரியும், நாத்தனாரும் மேய்வதற்காக புல்வெளிக்குக் கூட்டி செல்வார்கள். எங்களுடைய கிராமத்தை சென்றடைய நாங்கள் பாந்திப்பூர் பகுதியைக் கடக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு காட்டுக்குள் எங்களுடைய கன்றுக் குட்டிகளில் ஒன்றை ஒரு சிறுத்தைக் கொன்றுவிட்டது.”
வீட்டிற்குச் செல்லும் செம்மறியாடுகள் : “என்னுடைய சகோதரிகள் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புகையில் அடுப்பெறிக்க சேகரித்த விறகுகளையும் கூட சுமந்து வந்தனர். எங்களில் சிலருக்கு அரசாங்கத்திடமிருந்து இலவச எல்பிஜி (சமையல் வாயு) கிடைத்திருக்கிறது ஆனால் மற்றவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதைப் பெறுவதற்கு பணம் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.”
பெண்களும் ஆடுகளும்: “இந்த ஆடுகள் எல்லாம் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவை. என்னுடைய சகோதரன், சகோதரி, நாத்தனார் ஆகியோர் இவற்றைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். எங்களிடம் சுமார் 50 ஆடுகள் இருக்கின்றன, அவை காட்டில் மேயும். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அவற்றை சீக்கிரமாகவே கூட்டிக் கொண்டு வந்துவிடுவோம், இல்லையெனில் வன விலங்குகளால் அவை அடித்துக் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எங்களால் போதிய அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றாலோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்து விட்டாலோ, நாங்கள் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை விற்றுவிடுவோம்.”
புலியினுடைய கால் தடம்: “ஒரு நாள் காலையில் நான் வேலைக்குச் செல்லும் போது [பக்கத்துவீடுகளில் வீட்டு வேலைக்காக] கால்தடத்தைப் பார்த்தேன். ஏராளமான புலிகள் இங்கிருக்கின்றன, அவை எங்களுடைய பசுக்களையும், ஆடுகளையும் கொன்றுவிடுகின்றன. அவை வருவதும், போவதுமாக இருக்கின்றன. இப்போது சிறுத்தைகளை விட புலிகள் அதிகமிருப்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.”
இரண்டு சிறுமிகள்: “எனது மருமகள்கள் (nieces) அவர்களுடைய பள்ளிக்கு காட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும்; தினசரி எங்களது கிராமத்திலிருந்து அவர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். என்னுடைய முதல் மருமகள் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டாள் ஆனால் இங்கே உயர்நிலைப்பள்ளி இல்லை எனவே, அவள் இங்கிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்லவேண்டும். ஒன்று, அவள் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் இங்கிருந்து செல்ல வேண்டும். அவள் இங்கிருந்து சென்றுவிட்டால், அவளுடைய சகோதரி தனியாகப் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். காட்டில் மிருகங்கள் இருப்பதால் அவள் தனியாகப் போக பயந்து கொண்டு சில நாட்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அவள் பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திக் கொள்ளக்கூடும். என்னுடைய கிராமத்தில், ஏழு அல்லது எட்டுக் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் தொடர்ந்து பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டார்கள். என்னுடைய மருமகள்கள் தான் இந்த அளவுக்காவது பள்ளிக்கூடம் சென்று படித்து வருபவர்கள்.”
சிறுத்தை மரம்: “இந்த ‘கல்லுதாரி’ [நடைபாதை] காடு வழியாகச் செல்கிறது. இந்த வழியாகத்தான் நான் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்கிறேன். காலைவேளையில் என்னுடைய மருமகள்களும் பள்ளிக்கூடம் செல்வதற்கு என் கூடவே இது வழியாக நடந்து வருவார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு காலைவேளையில் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய ஆடுகளை மேய்வதற்காகக் காட்டிற்குக் கூட்டிச் சென்றார். அதன்பின், நான் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது இந்த மரத்தருகில் நிறையப் பேர் கூடியிருப்பதைப் பார்த்தேன். அவருடைய ஆடுகள் முன்னதாகவே வீட்டிற்குத் திரும்பிவிட்டன. அவை காயப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை. எனவே, அவர் வீட்டிற்கு வராததால் அனைவரும் அவரைத் தேடிச்சென்றபோது அவர் இந்த மரத்தின் அருகில் படுத்திருப்பதைப் பார்த்தனர். அவரை மிருகம் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் நெற்றியின் இரண்டுபக்கமும் கடிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. கடித்தது சிறுத்தையா அல்லது புலியா என்று எனக்குத் தெரியவில்லை. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற மறுதினமே அவர் இறந்துவிட்டார். அவர் என்னுடைய அத்தை. நான் அந்த வழியாகத்தான் தினமும் செல்கிறேன். அந்த வழியாக நடப்பதற்குப் பயமாக இருந்தாலும் எங்களால் இது குறித்து அதிகமாக எதுவும் செய்யமுடியவில்லை. இதற்குப் பயந்து கொண்டு வீட்டிலேயே இருந்து விடவும் முடியாது. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல பஸ் வசதி கேட்டு நாங்கள் எல்லோரும் கையெழுத்திட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம் ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.”
சிறுத்தை: “நான் வேலைபார்க்கும் இடத்துக்குப் பின்னால் உள்ள மலைக்குன்றில் இருக்கும் பாறையின் சரிவில் சிறுத்தை உட்கார்ந்து கொண்டிருந்தது. நான் மாலையில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது அதைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் அருகில், அதாவது 4-5 மீட்டர் தொலைவில், இருந்தது. என்னுடைய கணவர் என்னைக் கூட்டிக் கொண்டு போக வந்ததால் நான் பயப்படவில்லை. அந்த சிறுத்தை எங்களுக்கு அருகில் வந்திருந்தால் எங்களால் அதிகமாக ஒன்று செய்திருக்க முடியாது. நான் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன் ஏனென்றால் சிறுத்தையின் புகைப்படத்தை எடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். என்னுடைய கணவர் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் கூட நான் இந்தப் புகைப்படத்தை எடுத்திருப்பேன். எனக்கு சிறுத்தைகள், புலிகள் என்றால் பயம். நான் புகைப்படம் எடுக்கும்போது சிறுத்தை எங்களைப் பார்த்து தனது தலையை மெதுவாக பாறைக்குப் பின்னால் கீழிறக்கிக் கொண்டது.
பரண்: மக்கள் நிலக்கடலை, ராகி, அவரைகாய் போன்றவற்றை வளர்க்கும்போது, அவர்களுடைய பண்ணைக்கு இரவு ஏழு மணிக்கு முன்பாக சென்று அங்கேயே மறுநாள் காலை ஆறு வரை தங்கியிருந்துவிட்டு வருவார்கள். அவர்கள் மரத்தின் மீது ஏறி தங்களுடைய வயல்வெளிக்கு மிருகங்கள் எதுவும் வராமல் இருக்க இரவு முழுவதும் தூங்காமல் காவல் செய்வார்கள். யானைகளிடமிருந்தும், காட்டு கரடிகளிடமிருந்து தங்களுடைய பயிர்களைக் காப்பாற்ற அவர்கள் முயற்சிப்பதுண்டு. மிருகங்கள் வரும்போது அவர்கள் பட்டாசு வெடிப்பதுண்டு. சில சமயங்களில் அவர்கள் எதுவும் செய்வதில்லை. அறுவடைகாலத்தின் போது ஆறுமாதங்கள் அவர்கள் இப்படிச் செய்வார்கள் இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும்.”
இறந்த கழுகு: “மின்சார கம்பிகள் பற்றி கழுகுக்கு தெரியாததால் அதில் உட்கார்ந்தவுடன் இறந்துவிடுகிறது. இது மழைக்குப் பிறகு ஏற்பட்டது. இந்த வயர்களில் மின்சாரம் பாய்கிறது என்பது பற்றி இந்த விலங்குகளுக்கு எப்படித் தெரியும்? நான் கீழே உன்னிச் செடிகளின் மீது விழுந்துவிட்டேன். முன்பு அந்தப் பகுதியில் அதிகமான கழுகுகள் இருந்தன, ஆனால் இப்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது இருப்பது போல முன்பு அதிகமான உன்னிச் செடிகள் அங்கே இல்லை, ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இது அதிகமாக வளர்ந்து வருகிறது, இவ்வளவு சீக்கிரம் அது எப்படி வளர்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால் அதிக உபயோகமில்லையென்றாலும் இதன் கிளைகளைக் கொண்டு நாற்காலிகள் செய்ய முடியும். இது இப்போது காடுகளில் கூட வளர்ந்து வருகிறது. புற்கள் எங்கே முளைக்குமோ அங்கே இது வளர்வதால் இப்போது புற்கள் குறைவாகவே இருக்கின்றன. இதனால், பசுக்களுக்கும் ஆடுகளுக்கும் குறைவாகவே உண்ணக் கிடைக்கிறது.”
கர்நாடகாவின் மங்களா கிராமத்தில் உள்ள மரியம்மா சாரிட்டபிள் ட்ரஸ்டின் ஒருங்கிணைப்புடன் Jared Margulies மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. 2015-16 ஆம் ஆண்டு Fullbright Nehru Student Research Grant, பால்டிமோரில் இருக்கும் யுனிவர்சிட்டி ஆஃப் மெரிலாண்டின் Graduate Student Association Research Grant மற்றும் மரியம்மா சாரிட்டபிள் ட்ரஸ்டின் ஆதரவினாலும் அதற்கும் மேலாக புகைப்படக்காரர்களின் பங்கெடுப்பினாலும், உற்சாகத்தினாலும், முயற்சிகளாலும் இது சாத்தியமானது. பிரதியின் மொழிபெயர்க்க பி .ஆர். ராஜீவ் செய்த உதவியும் விலைமதிப்பற்றது. PARI – ன் க்ரியேட்டிவ் காமன்ஸ் யூஸ் அண்ட் ரீ புரடெக்ஷன் கொள்கையின் படி அனைத்துப் புகைப்படங்களின் காப்புரிமையும் அந்தந்த புகைப்படக்காரர்களைச் சார்ந்தது ஆகும். இதனுடைய உபயோகம் அல்லது மறு உருவாக்கம் செய்வது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை PARI –க்கு அனுப்பவும்.
மொழிபெயர்ப்பு : சித்தார்த்தன் சுந்தரம்