ஜிகர் டெடுக்கு தனிமை பழகிவிட்டது. அவர் ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படித்துறை மற்றும் தனது படகு இல்லத்திற்கு அருகே ஒரு மரகுடிசையில் தனியாக வசித்து வருகிறார். அவரது கணவரையும் பின்னர் தன் மகனையும் இழந்து 30 ஆண்டுகளாகிறது. பல துன்பங்களை நீண்ட காலம் தனியாக சந்தித்து வருகிறார்.
ஆனாலும், ‘இந்த வாழ்க்கையில், நான் 30 ஆண்டுகளாக தனியாக வசிக்கிறேன். ஊரடங்குக்குப்பின்னர், கடந்த ஆண்டைப்போன்றதொரு துன்பத்தை நான் பார்க்கவில்லை. சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியபோது, கொரோனாவும், அதனை தொடர்ந்து ஊரடங்கும் வந்தது. அது நம் அனைவரையும் கூண்டுக்குள் அடைத்துவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.
2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட ஊரடங்கு பரவலான இழப்பை ஏற்படுத்தியது. “அது முதல் நான் ஒரே ஒரு வாடிக்கையாளரைக் கூட பார்க்கவில்லை“ என்று ஜிகர் கூறுகிறார். அந்த நேரத்தில் அரசிடம் இருந்து, உள்ளூர்வாசிகள் அல்லாதோர் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு, பள்ளத்தாக்கைவிட்டு சுற்றுலா பயணிகளும் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அது எங்களை முற்றிலும் செயலிழக்கவைத்தது. அது எங்களின் வணிகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பேரிழப்பை சந்தித்த எனக்கு அது பேரிடரைக்கொண்டு வந்தது“ என்று அவர் மேலும் கூறினார்.
அவரின் பேரிழப்பை அவர் நினைவு கூறுகிறார். அவரது தனிமை குறித்து நம்மிடம் தெளிவாக விளக்கிக் கூறுகிறார்: “அது எனது சகோதரியின் நிச்சயதார்த்த விழா, எங்கள் குடும்பம் மொத்தமும் ஒன்றாக இணைந்து பாடல் பாடி, நடனமாடி மகிழ்ந்திருந்தனர்“ என்று ஜிகர் கூறுகிறார். 80 வயதுகளில் உள்ளபோதும் அவர் இவற்றை தெளிவாக கூறுகிறார். “ எனது கணவர் அலி முகமது துல்லா என்னிடம் வந்து, தனது நெஞ்சு வலி குறித்து கூறினார். அப்போது நான் அவரை எனது மடியில் படுக்க வைத்திருந்தபோது, அவரது உடல் குளிர்ச்சி நிலை அடைவதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் வானே இடிந்து என்மேல் விழுந்ததுபோல் உணர்ந்தேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அலி முகமது, தனது 50 வயதுகளில் ஜிகர் மற்றும் அவர்களின் ஒரே மகன் மன்சூரை தனியே தவிக்கவிட்டு சென்றுவிட்டார். ஜிகர், அப்போது அவரது மகனுக்கு 17 வயது. அவர் தனது மகனை மன்னா என்றே அழைக்கிறார். அவர்களுக்கு சொந்தமான படகு இல்லம் இருந்தது. அதை சார்ந்தே அவர்களின் வாழ்வாதாரம் இருந்தது. 4 அறைகளைக் கொண்ட படகு இல்லம், அவர்களின் குடிசையிலிருந்து பாலத்தின் வழியே செல்லும் வகையில் அதன் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
“எப்போது எனது மகன் சுற்றுலா பயணிகளை படகுஇல்லத்திற்கு அழைத்து வரச்செல்லும்போதும், எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டுச்செல்வான். ஏனெனில், நான் அவனது தந்தையை எண்ணி அழுவேன் என்பது அவனுக்கு தெரியும்“ என்று ஜிகர் கூறுகிறார். ஒரு அறைகொண்ட அவர்களின் குடிசையில் உள்ள மெத்தையில் அமர்ந்து கதவுக்கு வெளியே பார்க்கிறார். அங்குள்ள மரச்சுவரில் அவரது கணவன் மற்றும் மகனின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளது.
அவரது கணவர் அலி மற்றும் அவர் இறந்து ஏழு மாதங்களுக்கு பின்னர் மறைந்த மகன் மன்சூர், இருவரின் இழப்பு ஏற்படுத்திய துயரம் இப்போதும் அவரை வாட்டிக்கொண்டிருக்கிறது. ஜிகர் அந்த நாள் மற்றும் காரணத்தை நினைவு கூறுவில்லை. ஆனால், தந்தையின் இழப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியே வாலிப வயதில் தனது மகனையும் மரணிக்க செய்துவிட்டதாக நம்புகிறார்.
“என் கண் முன்னே எனது முழு உலகமும் தலைகீழாக மாறிவிட்டது“ என்று அவர் கூறுகிறார். “எனது வாழ்வின் இரண்டு கதாநாயகர்களும், அவர்களின் நினைவுகள் நிறைந்த இந்த படகு இல்லத்துடன் என்னை, தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்“ இவை என் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. வயோதிகம் மற்றும் வியாதியால் எனது பல நினைவுகளை நான் இழந்தபோதும், அந்த நினைவுகள் தினந்தோறும் என் நினைவில் புதிதுபோலவே இருக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.











