“நான் கட்டும் ஒவ்வொரு குடிசையும் குறைந்தது 70 வருடங்களாவது இருக்கும்.”
விஷ்ணு போசாலே, கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் ஜாம்பாலி கிராமத்தில் வசிப்பவர். பாரம்பரியமாக குடிசை கட்டி வருபவர்.
மர சட்டகம் மற்றும் ஓலை கொண்டு குடிசை கட்டும் திறனை தந்தையான காலம் சென்ற குண்டுவிடமிருந்து 68 வயதான அவர் கற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 10 குடிசைகள் கட்டியிருக்கிறார். 10 குடிசைகள் கட்ட உதவி செய்திருக்கிறார். “நாங்கள் (வழக்கமாக) கோடையில்தான் கட்டுவோம். காரணம், அப்போதுதான் அதிக வேலைகள் வயலில் இருக்காது,” என நினைவுகூரும் அவர், “குடிசை கட்டுவதில் மக்கள் உற்சாகம் கொள்வார்கள்,” என்கிறார்.
1960களின் காலக்கட்டத்தை நினைவுகூருகிறார் விஷ்ணு. ஜாம்பாலியில் அப்போது நூறுக்கும் சற்று அதிகமாகத்தான் குடிசைகள் இருந்தன. நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர் என்றும் அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறுகிறார். “குடிசை கட்ட ஒரு ரூபாய் கூட நாங்கள் செலவழிக்கவில்லை. யாரிடமும் அந்த வசதியும் கிடையாது,” என்னும் அவர் மேலும், “மூன்று மாதங்கள் வரை காத்திருக்கக் கூட மக்கள் தயாராக இருந்தனர். சரியான பொருட்கள் இருக்கும்போது மட்டுமே அவர்கள் கட்டத் தொடங்கினர்,” என்கிறார்.
நூற்றாண்டின் இறுதியில் செங்கல், சிமெண்ட் மற்றும் தகரம் போன்றவை மரக் கட்டை மற்றும் ஓலையிலான குடிசைகளுக்கு பதிலாக இக்கிராமத்துக்கு வந்தன. இங்கு 4.963 பேர் வசிக்கின்றனர் (கணக்கெடுப்பு 2011). முதன்முதலாக குடிசைகள், உள்ளூர் குயவர்கள் செய்த கூரை ஓடுகளிடம்தான் தோல்வியுற்றன. பிறகு இயந்திரங்கள் உருவாக்கிய ஓடுகள் வந்தன. அவை இன்னும் அதிக உறுதியும் ஆயுளும் கொண்டிருந்தன.
ஓடுகளுக்கு குறைந்த பராமரிப்புதான் தேவை. ஓடு போடுவதும் எளிது. வேகமானதும் கூட. குடிசைக்கு ஓலை போடுவதற்கு கடும் உழைப்பு தேவை. இறுதியில், சிமெண்ட்டும் செங்கற்களும் கொண்ட கல் வீடுகள்தான் குடிசைகளுக்கு மொத்தமாக முடிவு கட்டின. குடிசை கட்டுமானம் கடும் சரிவை கண்டது. ஜாம்பாலியின் மக்கள் குடிசைகளை கைவிடத் தொடங்கினர். தற்போது விரல் விட்டுமளவுக்கான குடிசைகளே எஞ்சியிருக்கின்றன.
”கிராமத்தில் குடிசையைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. சில வருடங்களில், பாரம்பரியக் குடிசைகளையும் நாங்கள் இழந்து விடுவோம். யாரும் அவற்றை பராமரிக்க மாட்டார்கள்,” என்கிறார் விஷ்ணு.
*****
ஒரு குடிசை கட்டும் விருப்பத்தில் பக்கத்து வீட்டுக்காரரும் நண்பருமான நாராயண் கெயிக்வாட்தான் விஷ்ணுவை அணுகினார். விவசாயிகளான இருவரும் பல விவசாயப் போராட்டங்களுக்கு இந்தியா முழுக்க ஒன்றாக பயணித்துள்ளனர். (வாசிக்க: ஜம்பாலி விவசாயியின் உடைந்த கையும், உடையாத நம்பிக்கையும் )
ஜாம்பாலியில் விஷ்ணுவுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. நாராயணுக்கு 3.25 ஏக்கர் நிலம் இருக்கிறது. இருவரும் கரும்புடன் சோளம், எம்மர் கோதுமை, சோயாபீன்ஸ், பீன்ஸ் மற்றும் கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை போன்றவற்றை விளைவிக்கின்றனர்.
குடிசை கட்டுவதற்கான நாராயணின் விருப்பம், பத்தாண்டுகளுக்கு முன் அவரங்காபாத் மாவட்டத்துக்கு பயணித்து, விவசாயக் கூலிகளிடம் அவர்களது பணி நிலை குறித்து பேசும்போது தோன்றியது. இங்குதான் அவரொரு வட்டமான குடிசையை பார்த்தார். “மிக அழகாக இருக்கிறது. மைய ஈர்ப்பு விசை சரியாக கையாளப்பட்டிருக்கிறது,” என நினைத்ததாக சொல்கிறார்.
வைக்கோலால் உருவாக்கப்பட்ட குடிசையின் ஒவ்வொரு பகுதியும் மிகச் சரியாக இருந்ததென நினைவுகூருகிறார் நாராயண். அதைப் பற்றி விசாரித்த அவர், அதைக் கட்டியது ஒரு விவசாயத் தொழிலாளரென தெரிந்து கொண்டார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. 76 வயதாகும் அவர் அதைப் பற்றி அச்சமயத்தில் குறித்துக் கொண்டார். பல்லாண்டுகாலமாக அவர் அன்றாடத்தின் சுவாரஸ்யமான விவரங்களை தொடர்ந்து குறிப்பெடுத்து வருகிறார். மராத்தி மொழியில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்கள் அவரிடம் இருக்கின்றன. அவை பாக்கெட் அளவு தொடங்கி பெரிய அளவு வரையிலான டைரிகளில் நிறைந்திருக்கின்றன.
பத்தாண்டுகளுக்கு பிறகு அவர் அந்த குடிசையை தன் 3.25 ஏக்கர் நிலத்தில் உருவாக்க விரும்பினார். ஆனால் நிறைய சவால்கள் இருந்தன. குடிசை கட்டுபவரை கண்டுபிடிப்பது அதில் பிரதான சவாலாக இருந்தது.
பிறகு அவர், குடிசைகள் கட்டுவதில் அனுபவம் வாய்ந்தவரான விஷ்ணு போசாலேவிடம் பேசினார். அதன் விளைவாக கூட்டு உருவாகி, நிபுணத்துவம் வாய்ந்த கட்டுமானத்தின் மரமும் ஓலையுமாக சாட்சியாகி இருக்கிறது.
”குடிசை இருக்கும் வரை, ஆயிரம் வருடங்கள் பழமையான கலையை அது இளைய தலைமுறைக்கு நினைவுபடுத்தும்,” என்கிறார் நாராயண். விஷ்ணு சொல்கையில், “என் பணியை வேறு எப்படி மக்கள் தெரிந்து கொள்ள முடியும்?” என்கிறார்.
*****
குடிசை கட்டுவதன் முதல் அடி, அதன் பயன்பாட்டை அறிதல்தான். “அதை சார்ந்து அளவும் அமைப்பும் மாறும்,” என்கிறார் விஷ்ணு. உதாரணமாக, குடிசைகளில் தீவனம் சேமிக்கப்படும் இடம் முக்கோணமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குடும்பத்துக்கான அறை 12 X 10 அடிக்கு செவ்வக வடிவத்தில் இருக்கும்.
நாராயண் தீவிர வாசகர். வாசிப்பறையாக பயன்படுத்தக் கூடிய ஒரு சிறு அறையைக் கொண்ட குடிசையை விரும்பினார். புத்தகங்களையும் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் இங்கு அவர் வைப்பார்.
பயன்பாட்டை தெளிவாக தெரிந்து கொண்டு, சில குச்சிகளால் ஒரு மாதிரி வீடு செய்து காட்டினார் விஷ்ணு. அவரும் நாராயணும் பிறகு 45 நிமிடங்கள், நுட்பங்களையும் வடிவத்தையும் தீர்மானிக்க எடுத்துக் கொண்டனர். நாராயணின் நிலத்தை பலமுறை சுற்றியபின், அவர்கள் குறைந்த காற்றழுத்தம் கொண்ட பகுதியை கண்டறிந்தனர்.
“குடிசை கட்டும்போது கோடை காலத்தையும் குளிர்காலத்தையும் மட்டும் யோசித்து செயல்பட முடியாது. பல்லாண்டுகளுக்கு குடிசைகள் இருக்க வேண்டும். எனவே பல அம்சங்களை நாங்கள் யோசிப்போம்,” என்கிறார் நாராயண்.
இரண்டடி குழிகளை 1.5 அடி இடைவெளியில் குடிசை அமைக்கப்படும் பகுதியின் முடிவில் உருவாக்குவதிலிருந்து கட்டுமானம் தொடங்கியது. 12.9 அடி கட்டுமானத்துக்கு பதினைந்து குழிகள் தேவை. அவற்றை தோண்ட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது. குழிகள் பாலிதீன் சாக்கால் மூடப்பட்டிருந்தன. “இங்கு வைக்கப்படவிருக்கும் மரக்கட்டை, சாரத்தில் தண்ணீர் இறங்காமலிருக்க இப்படி செய்யப்படுகிறது,” என்கிறார் விஷ்ணு. மரக்கட்டைக்கு ஏதேனும் ஆனால் மொத்த குடிசையும் நாசமாகும் ஆபத்து இருக்கிறது.
தூரமான இரண்டு துளைகளிலும் மையத்திலுள்ள துளையிலும் ஒரு கம்பு, விஷ்ணு மற்றும் அஷோக் போசாலேவாலும் நடப்படுகிறது. ஒரு கம்பு 12 அடி உயரம் இருக்கும். சந்தன மரம், கருவேலம் அல்லது வேப்ப மரத்தின் இரு பக்கமாக பிரியும் கிளையாக அக்கம்பு இருக்கும்.
இரு பக்கம் விரியும் முனையில் மரக்கட்டைகள் சுமத்தி வைக்கப்படும். “இரண்டு கம்புகளும் மையத்தின் உச்சக் கம்பும் குறைந்தபட்சம் 12 அடி உயரமாக இருக்கும். மற்றவை 10 அடி உயரமிருக்கும்,” என்கிறார் நாராயண்.
மரச்சாரத்தின் மேல் ஓலை வரும். இரண்டடி உயர கம்பு, மழை நீர் ஓலையிலிருந்து வீட்டுக்குள் செல்லாமல் தரைக்கு செல்வதை உறுதிப்படுத்த பயன்படுகிறது.
எட்டு கம்புகள் நேராக நடப்பட்டால், குடிசைக்கான தளம் தயார். கம்புகளை நட இரண்டு மணி நேரம் வரை பிடிக்கிறது. இந்த கம்புகளுக்குக் கீழ், உள்ளூர் மூங்கில் அடிக்கட்டைகள் வைக்கப்பட்டு குடிசையின் இரு பக்கங்களும் இணைக்கப்படும்.
“சந்தன மரங்களையும் கருவேல மரங்களையும் கண்டுபிடிப்பது சிரமமாகிக் கொண்டு வருகிறது,” என்கிறார் விஷ்ணு. “இந்த மரங்களுக்கு பதிலாக கரும்புகளும் கட்டடங்களும் வந்து விட்டன.”
சாரம் தயாரானதும் கூரையின் உட்பக்கத்துக்கான இறை வாரக்கை வைக்க வேண்டும். 44 இறை வாரக்கைகளை திட்டமிட்டிருக்கிறார் விஷ்ணு. ஒவ்வொரு பக்கத்திலும் 22 இறை வாரக்கை வரும். அவை தாழை தண்டுகளால் செய்யப்பட்டவை. ஒரு தாழை தண்டு 25-30 அடி வரை வளரக்கூடியது. வலிமைக்கு பெயர்பெற்றது.
“இந்த தண்டு வலிமையானது. குடிசையை நீடிக்க வைக்கும்,” என விளக்குகிறார் விஷ்ணு. அதிக இறை வாரக்கைகள் இருந்தால் அதிக வலிமை இருக்கும். எனினும், “தாழையை வெட்டுதல் மிகக் கடினம்,” என எச்சரிக்கிறார்.
தாழை இழைகள் கிடைமட்டத்தில் மரச் சட்டகத்தைக் கட்ட பயன்படும். தாழை இலைகளிலிருந்து இழையை எடுப்பது கஷ்டம். நாராயண் இதில் நிபுணர். 20 விநாடிகளில், அரிவாள் வைத்து அவர் இழைகள் எடுத்து விடுவார். “தாழை இலைகளுக்குள் இழை இருப்பது மக்களுக்குக் கூட தெரியாது,” என்கிறார் சிரித்தபடி.
சூழலியலுக்கு உகந்த இயற்கையான கயிறுகளை தயாரிக்க இந்த இழைகள் பயன்படுகின்றன. (வாசிக்க: இந்தியாவின் சிறந்த கயிறு தயாரிப்புத் தொழில் மறைந்துகொண்டிருக்கிறது .)
மரச் சாரங்கள் வைக்கப்பட்டபின், சுவர்கள் தென்னங்கீற்றுகளாலும் கரும்புத் தண்டுகளாலும் உருவாக்கப்படும். அரிவாள் கூட அதில் வைக்கக்கூடிய அளவுக்கு செம்மையுடன் உருவாக்கப்படும்.
கட்டமைப்பு கிட்டத்தட்ட தெரியத் தொடங்கியதும் கூரை கவனத்தை பெறுகிறது. கரும்பின் மேலே இருக்கும் முனைகளான கொழுந்தாடைகள் கொண்டுதான் கூரை வேயப்படும். “அப்போதெல்லாம் மாடுகள் இல்லாத விவசாயிகளிடமிருந்து அவற்றை நாங்கள் பெற்றோம்,” என்கிறார் நாராயண். அவை மாடுகளுக்கு முக்கியமான உணவாக இருப்பதால், விவசாயிகள் இலவசமாக அவற்றை கொடுப்பதில்லை.
காய்ந்த சோளப்பயிர்கள் மற்றும் எம்மெர் கோதுமை கூட கூரைக்கு பயன்படும். குடிசையை அழகுபடுத்த உதவும். “ஒவ்வொரு குடிசைக்கும் 200-250 கிலோ கரும்பு நுனிப்பகுதியான கொழுந்தாடை தேவைப்படும்,” என்கிறார் நாராயண்.
ஓலை வேய்வது கடும் உழைப்பை கேட்பது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பிடிக்கும். நாளொன்றுக்கு ஆறிலிருந்து ஏழு மணி நேரத்துக்கு மூன்று பேர் வேலை பார்க்க வேண்டும். “ஒவ்வொரு ஓலையும் நுட்பமாக வைக்கப்பட வேண்டும். இல்லையெனில், மழை நேரத்தில் நீர் ஒழுகும்,” என்கிறார் விஷ்ணு. 3லிருந்து 4 வருடங்களுக்கு ஒரு முறை ஓலை புதிதாக வேய வேண்டும். அப்போதுதான் குடிசை நீடிக்கும்.
“பாரம்பரியமாக ஆண்கள்தான் ஜாம்பாலியில் குடிசை கட்டுகின்றனர். ஆனால் பெண்கள் மண்ணை சமப்படுத்துதல், மூலப்பொருட்களை கண்டுபிடிக்க உதவுதல் என முக்கிய பங்காற்றுகின்றனர்,” என்கிறார் விஷ்ணுவின் மனைவி அஞ்சனா. அறுபது வயதுகளில் அவர் இருக்கிறார்.
வடிவம் முடிந்ததும் கீழே உள்ள நிலம், நீர் விடப்பட்டு தயார் செய்யப்பட வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்கு அது காய விடப்படும். “மண்ணில் ஒட்டும் தன்மை கொண்ட விஷயங்களை அகற்ற இது உதவும்,” என விளக்குகிறார் நாராயண். அதற்குப் பிறகு, வெள்ளை மண் கொட்டப்படும். விவசாய நண்பர்களிடமிருந்து வெள்ளை மணலை நாராயண் வாங்கி வந்திருக்கிறார். வெள்ளை மணல் நிறத்தில் இரும்பை போல் மென்மையாக இருக்கும். மாங்கனீஸ் கசித்தெடுக்கப்பட்டிருக்கும்.
வெள்ளை மணல் குதிரை, மாடு மற்றும் பிற கால்நடைகளின் சாணத்துடன் கலக்கப்பட்டு வலிமையாக்கப்படுகிறது. தரையில் பரப்பி, தும்முஸ் என்கிற மரக் கருவியால் அடிக்கப்படுகிறது. அக்கருவியின் எடை 10 கிலோ இருக்கும். அனுபவம் வாய்ந்த தச்சர்களால் செய்யப்படுவது.
ஆண்களால் அடித்து முடித்த பிறகு பெண்கள் படாவ்னா என்கிற கருவியைக் கொண்டு தளப்படுத்துகின்றனர். படவ்னா என்பது கருவேல மரக்கட்டையில் செய்யப்படும் மூன்று கிலோ உபகரணம். கிரிக்கெட் மட்டையை போல் தோற்றமளிக்கும் அதில் சிறு கைப்பிடி இருக்கும். நாராயண் தன் படவ்னாவை தொலைத்து விட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரின் அண்ணனான 88 வயது சக்காராம் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
நாராயணின் மனைவி குசும், அவர்களது குடிசையைக் கட்டுவதில் பங்காற்றினார். “விவசாயம் செய்து முடித்து நேரம் கிடைத்தபோதெல்லாம் நாங்கள் நிலத்தை சமப்படுத்தினோம்,” என்கிறார் 68 வயதாகும் அவர். கடினமான பணி என்பதால் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் மாறி மாறி உதவி செய்ததாக அவர் கூறுகிறார்.
சமப்படுத்துதல் முடிந்த பிறகு, மாட்டுச்சாணத்தை அதில் பரப்புவார்கள். அக்கலவை நல்ல பிடிமானம் கொண்டதாகக் கருதப்படுகிறது. கொசுக்களை விரட்டவும் அது உதவும்.
வாசல்கதவு இல்லாமல் வீடு இருக்காது. வழக்கமாக இயற்கையாக விளைந்த சோளக் கதிர், கரும்பு, காய்ந்த தென்னை ஓலைகள்தான் வாசல் கதவாக செய்யப்படும். ஆனால் ஜாம்பாலி விவசாயிகள் எவரும் இயற்கை பயிர்களை விளைவிப்பதில்லை. கட்டுபவர்களுக்கு இது ஒரு சவால்.
“அனைவரும் கலப்பின வகைக்கு நகர்ந்துவிட்டனர். அந்த தீவனத்தில் சத்து கிடையாது. நீடிக்கவும் செய்யாது,” என்கிறார் நாராயண்.
மாறிவிட்ட விவசாய முறைகளுக்கு ஏற்ப குடிசை கட்டுமானமும் ஈடு கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்பு அவை விவசாய வேலைகள் அதிகம் இல்லாத கோடைகாலத்தில் கட்டப்பட்டன. ஆனால் இப்போது வயல்கள் ஒன்றுமின்றி இருப்பதே கிடையாது என்கின்றனர் விஷ்ணுவும் நாராயணும். “முன்பு வருடத்துக்கு ஒருமுறை நாங்கள் விதைப்போம். இப்போது வருடத்துக்கு இரண்டு, மூன்று முறை விதைத்தாலும் பிழைப்பை ஓட்ட முடியவில்லை,” என்கிறார் விஷ்ணு.
குடிசை கட்டி முடிக்க ஐந்து மாதங்கள் ஆனது. நாராயண், விஷ்ணு, அஷோக் மற்றும் குசுமின் கூட்டுழைப்பில் அவரவரின் விவசாய வேலை போக 300 மணி நேரங்கள் தேவைப்பட்டது. ”கடும் அலுப்பை கொடுக்கும் வேலை இது. மூலப்பொருட்கள் கிடைப்பது இப்போது மிகவும் கஷ்டமாகி விட்டது,” எனச் சுட்டிக்காட்டும் நாராயண், ஜாம்பாலியின் வெவ்வேறு இடங்களிலிருந்து மூலப் பொருட்களை சேகரிக்க ஒரு வாரம் ஆகிவிட்டது.
குடிசை கட்டும்போது முட்களால் காயங்களும் சிராய்ப்புகளும் ஏற்பட்டன. “இந்த வலிக்கு நீங்கள் பழக்கப்படவில்லை எனில், நீங்கள் விவசாயியாக இருக்க முடியுமா?” எனக் கேட்கிறார் நாராயண் தன் காயப்பட்ட விரலை காட்டி.
குடிசை இறுதியில் தயாராகிவிட்டது. பங்குபெற்ற அனைவரும் சோர்வடைந்திருந்தனர். ஆனாலும் குடிசை முழுமை பெற்றதில் அதிக சந்தோஷமும் கொண்டனர். அநேகமாக ஜாம்பாலி கிராமத்தில் கட்டப்படும் கடைசி குடிசையாக இது இருக்கலாம். ஏனெனில் கற்றுக் கொள்ள வந்தவர்களை சுட்டிக் காட்டுகிறார் விஷ்ணு. ஆனால் நாராயண் அவருக்கு ஆறுதலளிக்கும் வகையில், “மக்கள் வருகிறார்களோ இல்லையோ அது பிரச்சினையில்லை,” என்கிறார். அவர் கட்டிய குடிசையில் நிம்மதியாக உறங்கியதாக சொல்கிறார். அதை நூலகமாக்க விரும்புகிறார்.
“நண்பர்களோ விருந்தாளிகளோ என் வீட்டுக்கு வருகையில், நான் பெருமையுடன் குடிசையை காட்டுவேன். பாரம்பரியக் கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அனைவரும் பாராட்டுவார்கள்,” என்கிறார் நாராயண் கெயிக்வாட்.
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் ஆதரவில் சங்கெத் ஜெயின் எழுதும் கிராமப்புற கலைஞர்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதி
தமிழில்: ராஜசங்கீதன்.