சந்திரிகா பெஹெராவுக்கு ஒன்பது வயது. அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிறது. பரபங்கி கிராமத்தை சேர்ந்த அவரைப் போல் 1லிருந்து 5ம் வகுப்பு வரை படிக்க வேண்டிய மாணவர்கள் 19 பேர் அக்கிராமத்தில் படிக்காமல் இருக்கின்றனர். 2020-லிருந்து அவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்லவில்லை. தாய் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை, என்கிறார் அவர்.
பரபங்கிக்கு பள்ளிக்கூடம் 2007ம் ஆண்டு வந்தது. ஆனால் ஒடிசா அரசாங்கத்தால் அது 2020ம் ஆண்டில் மூடப்பட்டது. தொடக்கப்பள்ளி படித்த மாணவர்கள் பெரும்பாலும் சந்திரிகாவை போல் கிராமத்தைச் சேர்ந்த சந்தால் மற்றும் முண்டா பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜமப்பசி கிராமப் பள்ளியில் சேரும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
“அவ்வளவு தூரத்தை குழந்தைகள் தினமும் நடக்க முடியாது. நீண்ட தூரம் நடக்கும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றனர்,” என்கிறார் சந்திரிகாவின் தாயான மமி பெஹெரா. “நாங்கள் ஏழைத் தொழிலாளர்கள். நாங்கள் சென்று வேலை தேடுவதா அல்லது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு கூட்டி வரும் வேலையை செய்வதா? எங்களின் பள்ளியை அதிகாரிகள் மீண்டும் திறக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
அதுவரை அவரது மகளை போல 6லிருந்து 10 வயது வரை இருக்கும் குழந்தைகள் படிப்பில்லாமல்தான் இருக்க வேண்டியிருக்கும் என வேறு வழியின்றி அவர் கூறுகிறார். ஜஜ்பூர் மாவட்டத்தின் தனகடி ஒன்றியத்திலுள்ள காட்டில் குழந்தை கடத்துபவர்கள் இருக்கலாமென 30 வயதுகளில் இருக்கும் அந்தத் தாய் அஞ்சுகிறார்.
மகன் ஜோகிக்கு, பயன்படுத்தப்பட்ட ஒரு சைக்கிளை கொடுத்து மமி சமாளித்தார். 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னொரு பள்ளியில் ஜோகி 9ம் வகுப்பு படிக்கிறார். மூத்த மகள் மோனி 7ம் வகுப்பில் இருக்கிறார். ஜமப்பசியிலிருக்கும் பள்ளிக்கு அவர் நடந்து செல்ல வேண்டும். கடைசி குழந்தையான சந்திரிகா வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.
“எங்களின் தலைமுறை உடல் ஒத்துழைத்த வரை நடமாடியது, ஏறியது, வேலை பார்த்தது. எங்கள் குழந்தைகளும் அப்படி ஆக வேண்டுமா?” என கேட்கிறார் மமி.





















