நன்பகலுக்கு சற்று முன், ஒருவர் சத்தமாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்கிறார்: “பண்டு நாயக், உங்கள் மகள் காயத்ரி எங்களோடு உள்ளார். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வரவும்”. முந்தைய நாள் இரவிலிருந்து இதுபோன்ற அறிவிப்புகள் குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் வந்த வண்ணம் உள்ளன. சிலர் கூட்டத்தில் சிக்கி, தங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் உடன் வந்தவர்களிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்கள். பின்னர் நீண்ட நேர தேடலுக்கு பின் ஒன்று சேர்கிறார்கள்.
முந்தைய நாள் இரவிலிருந்து யாத்ரீகர்களின் கூட்டம் பெருகி வருகிறது. உள்ளூர் ஊடகத்தின் கணிப்புபடி குறைந்தபட்சம் 50,000 பேராவது வந்திருப்பார்கள். அடுத்த நாள் காலை, சூர்யபெட் மாவட்டத்தின் ஜனாபஹத் கிராமத்தில் உள்ள தர்காவிற்கு செல்லும் பாதை கூட்டத்தால் நிரம்பி வழியும்.
வருடத்தின் முதல் மாதத்தில் நான்காவது வெள்ளிக்கிழமை ஹஸ்ரத் ஜன்பக் ஷகீத் இறந்த நாளாக உர்ஸ் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி 24-ம் தேதி வந்துள்ளது.
இந்த நாளில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் உள்பட பல சமூகத்தினர் இங்கு வருகிறார்கள். பழங்குடி இனத்தவர்களான லம்பாடிகளுக்கும் இது முக்கியமான திருவிழாவாகும். தெலங்கானாவின் கம்மம், வராங்கல் மற்றும் மகுபாநகர் மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரபிரதேசத்தின் குண்டூர், பிராகாசம் மற்றும் கிருஷ்னா மாவட்டங்களிலிருந்தும் பெரும்பாண்மையான யாத்ரீகர்கள் வருகிறார்கள்.
மதச்சார்பற்ற ஈடுபாடு ஒருபுறம் இருக்க, தங்கள் நிலம் வளமாக இருக்க வேண்டும் என பல விவசாயிகள் உர்ஸ் திருவிழாவிற்கு வருகிறார்கள். “விளைச்சல், பயிர் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். இதற்காகவே நாங்கள் தொடர்ந்து கந்தம் (சந்தனம்) திருவிழாவிற்கு வருகிறோம்” என்கிறார் ரஜாக்கா சமூகத்தைச் (தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த விவசாயியான மொய்லோலா அஞ்சம்மா. இவர், தன்னுடைய கனவர் மொய்லோலா பாலையாவோடு சேர்ந்து ஹஸ்ரத் தர்காவிலிருந்து 160கிமீ தொலைவிலுள்ள அச்சம்பெட் மண்டலில் இருந்து வந்துள்ளார்.
இங்குள்ள பலரைப் போல அஞ்சம்மாவும், ஹஸ்ரத் ஜன்பக் ஷகீதின் – உள்ளூர் மக்கள் ஜன் பகத் சைதுலா என குறிப்பிடுகிறார்கள் - மேலுள்ள நம்பிக்கையால் இங்கு வந்துள்ளார். இவர் 400 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தர்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள “மக்களின் கடவுள்” என்ற சிறு புத்தகத்தில் கூறியிருப்பதாவது: 19-ம் நூற்றாண்டில், உள்ளூர் நிலக்கிழார் ஒருவரின் கால்நடை காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சைதுலா தர்காவை கடந்து செல்கையில், அங்கு பிராத்தனை செய்துவிட்டு தன்னுடைய மாடு கிடைத்துவிட்டால் வருடம்தோறும் திருவிழா நடத்துவேன் என்றும் சன்னதியை சுற்றி கோட்டை சுவர் கட்டி தருவேன் என்றும் யாத்ரீகர்களுக்கு தண்ணீர் வழங்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். அவர் வீட்டுக்கு சென்றபோது, அங்கு தொலைந்துபோன மாடு நின்றுள்ளது. அவர் கட்டிய சுவர் இன்றும் அப்படியே உள்ளது.
தம்பதிகளுக்கு குழந்தை பேறு வழங்கியது, குடிக்கு அடிமையானவரை குணப்படுத்தியது, நோயிலிருந்து விடுதலை செய்தது போன்ற பல சம்பவங்களை இந்த நூல் விவரிக்கிறது. இந்த கதைகளில் இருக்கும் நம்பிக்கை காலங்களை கடந்து தற்காலத்திலும் அஞ்சம்மா போன்ற பலரை உர்ஸ் விழாவிற்கு அழைத்து வந்துள்ளது.
அதனால்தான் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த துறவியின் பெயரை சூட்டுகிறார்கள். ஹசூர்நகர் எம்எல்ஏ சைதி ரெட்டி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி ஆகியோர் ஜன் பஹத் சைதுலா பெயரைதான் வைத்துள்ளார்கள் என சிலர் கூறுகிறார்கள். உர்ஸ் திருவிழாவிற்கு வரும் பலரது பெயர்கள் சைதுலா, சைதம்மா, சைதியா, சைதா என உள்ளது.
அஞ்சம்மா கலந்து கொண்ட சந்தன ஊர்வலம், கடந்த வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு, தர்காவிலிருந்து 100மீ தள்ளியுள்ள பூசாரியின் வீட்டிலிருந்து தொடங்கியது. மல்லிகை மற்றும் ரோஜா பூவால் அலங்கரிக்கப்பட்ட பாத்திரத்தில் சந்தன பசையை வைத்து, யாத்ரீகர்கள் துணி விதானத்தை தூக்கிச் செல்ல அருகிலுள்ள ஒவ்வொரு கிராமமாக சுற்றி வருகிறது. ஊர்வலம் சரியாக 3 மணிக்கு தர்காவை சென்றடைந்ததும், சந்தன பசையை ஹஸ்ரத் ஜன்பக் ஷகீத் சமாதியில் பூசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அங்கு குடிகொண்டுள்ள அவரது சகோதரர் மொயுனிதீன் ஷகீதின் சமாதியிலும் சந்தனம் பூசப்படுகிறது.
பாத்திரங்கள், துணிகள், ஊர்வலத்தின் முன்னால் போகும் குதிரை என கந்தம் சடங்கில் ஒரு பகுதியாக இருக்கும் எந்த பொருளையாவது பயபக்தியோடு தொட்டுவிட மாட்டோமா என பக்தர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள். சாலையில் உள்ள தூசியோ அல்லது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும் என்ற பயமோ அவர்களை நிறுத்தவில்லை.
சடங்கில் இருக்கும் எந்த பொருளையாவது பயபக்தியோடு தொட்டுவிட மாட்டோமா என பக்தர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள்
“ஐந்து வருடங்களுக்கு முன்பு, என் சகோதரர் தன் பேரப்பிள்ளைகளோடு இங்கு வந்திருந்தார். ஊர்வலத்தின் போது அவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். கூட்டத்தில் ஏற்பட்ட சிறு தள்ளுமுள்ளு காரணமாக மூன்று வயது குழந்தை இறந்திருக்கும், ஆனால் எப்படியோ உயிர் தப்பிவிட்டனர்” என நினைவுகூர்கிறார் பாலையா. தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்கையில், அவரும் அஞ்சம்மாவும் மற்ற பக்தர்களைப் போல, தர்கா நிர்வாகிகள் பாக்கெட்டில் விநியோகிக்கும் சந்தன பசையை எடுத்துச் செல்கின்றனர். இதை தங்கள் வயல்களிலும், விவசாய கருவிகளிலும், தங்கள் உடைகளிலும் கூட பூசுகின்றனர்.
அஞ்சம்மா மற்றும் பாலையாவின் நம்பிக்கை குறித்து சொல்ல வேண்டுமானால், 30 வருடங்களுக்கு முன்பு தங்களது எட்டு ஏக்கர் விவசாய நிலத்தில் (நெல்லும் பருத்தியும் பயிர் செய்த) சிறு தர்காவை கட்டினர். இது தங்கள் மகனின் உடல்நலத்திற்காக செய்யப்படும் பிராத்தனையின் வடிவம் என அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் பல கோயில்களுக்கு செல்கிறார்கள். தர்காவில் கிடைக்கும் சந்தன பசையை போல, மற்ற கோயில்களிலிருந்து காலண்டரையோ அல்லது படத்தையோ எடுத்து வருகிறார்கள். “தங்கள் கிராமத்திலிருந்து பேருந்தில் அடிக்கடி இங்கு வருவோம்” என்கிறார் பாலையா.
பொருட்களை வாங்குவதற்கும் சந்தோஷமாக சுற்றி பார்ப்பதற்கும் உர்ஸ் திருவிழா ஏற்ற ஒன்று. குழந்தைகள் விளையாடுவதற்கான சறுக்குகள், இராட்டினங்கள் மற்றும் சிறு சிறு கடைகள் என தர்காவை சுற்றியுள்ள இடமே பொருட்காட்சி திடலாக மாறிவிடுகிறது. இங்கு கடை போட்டால் லாபம் கிடைக்கும் என்று பரவியதால், கடை போடுவதற்காக இடத்தை தேடும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தள்ளுவண்டிகளிலும், தரையிலும், சிறு கடைகளிலும் ஸ்டால்கள் அமைத்து பொம்மைகள், வளையல்கள், படங்கள், களிமண் உருவங்கள், கவரிங் நகைகள், முட்டைகள், பால், லாட்டரி சீட்டுகள், கைப்பைகள் என பல விற்கப்படுகின்றன.
“பல் துலக்க கூட எங்களுக்கு நேரம் இருக்காது. குறைந்தது மூன்று பேராவது எங்கள் வண்டி முன் காத்திருப்பார்கள்” என்கிறார் ரூபாவத் சரோஜா. இங்குள்ள உணவு வண்டிகளில் ஜிலேபி, பூந்தி, தேங்காய் அல்வா போன்ற பல பண்டங்களை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வருடம் மிகுதியான கடைகள் வந்துள்ளதால், கடந்த வருடம் கிடைத்த 30,000 ரூபாயை விட இந்த வருடம் குறைவாகவே கிடைக்கும் என சரோஜா எதிர்பார்க்கிறார். தர்காவுக்கு அருகிலேயே அவருக்கு நிரந்தரமான கடை ஒன்று உள்ளது. வாரத்தில் எல்லா நாட்களும் திறந்திருக்கும் இந்த கடையில் உர்ஸ் நாளன்று வியாபாரம் உச்சத்திற்கு செல்லும். வருடத்தின் மற்ற வெள்ளிக்கிழமைகளில் கூட ரூ.5000 முதல் ரூ.10,000 வரை சரோஜா சம்பாத்தித்து விடுவார்.
“உர்ஸ் நாளன்று எங்களுக்கு ரூ.15,000 (ஒரு தள்ளுவண்டிக்கு) வரை லாபம் கிடைக்கும்” என்கிறார் வளையல்கள் விற்பனை செய்ய்யும் மிசல் (தன்னுடைய முழு பெயரை அவர் கூற மறுத்துவிட்டார்). வழக்கமாக இந்த தொகையை சம்பாதிக்க அவருக்கு ஒரு மாதமாகும். இந்த வருடம், விஜயவாடாவிலிருந்து தர்காவிற்கு தங்கள் தள்ளுவண்டிகளை எடுத்து வர, இவரும் மற்ற ஏழு பேரும் சேர்ந்து ரூ.16,000 செலவு செய்து லாரியை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
தர்காவிற்கு அருகில் வசிக்கும் கிராமங்களுக்கும் இது முக்கியமான திருவிழா. “எங்கள் பயிர்களும் கால்நடைகளும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம். உர்ஸ் எங்களுக்கு முக்கியமான திருவிழா” என்கிறார் 48 வயதாகும் புக்யா பிரகாஷ். இவர் லம்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர். தர்காவிலிருந்து இரண்டு கிமீ தொலைவிலுள்ள கல்மெட் தண்டா கிராமத்தில் வசிக்கும் இவர், தனது 5.5 ஏக்கர் நிலத்தில் மிளகாய், நெல் மற்றும் பருத்தியை பயிரிட்டுள்ளார்.
“துணிகள், நகைகள் வாங்கவும், சிற்றுண்டிகள் தயாரிக்கவும் என் குடும்பம் 30,000 ரூபாய் (உர்ஸ் திருவிழாவின் போதும் அதற்கு முன்பும்) செலவழித்துள்ளதாக” கூறுகிறார் பிரகாஷ். மேலும் அவர் கூறுகையில், தசரா அல்லது தீபாவளி போன்ற பிரபலமான விஷேசங்களின் போதுகூட இவ்வுளவு தொகை செலவு செய்ய மாட்டோம் என்கிறார்.
நாங்கள் சந்திக்கும் போது, வசனங்கள் பேசியபடி ஒத்திகை செய்து கொண்டிருந்தார் பிரகாஷ். அவரும் அவர் குழுவும் நாடகம் நடத்துவதற்காக கடந்த 20 நாட்களாக பயிற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் கொண்டாட்டத்தில் இது சமீபத்திய சேர்க்கை. ‘விழித்துக்கொண்ட சிங்கம்’ என்ற தலைப்பிலான பழிவாங்கும் கதை இது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உர்ஸ் திருவிழா முடிந்த அடுத்த நாள் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் இந்த நாடகம் திரையிடப்படுகிறது.
லம்பாடிகளுக்கு, தர்காவில் கண்டூரு – கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும், நோயிலிருந்து மீள வேண்டும், நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு வேண்டி அல்லது நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடுகளை வழங்குவது - முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதிகமான கூட்டம் காரணமாக, பலர் உர்ஸ் நாளன்று கோழிகளை கொடுத்து அங்குள்ள தற்காலிக விறகு அடுப்பில் சமைக்கின்றனர். சிலர் தங்களுக்கு சொந்தமான பாத்திரங்களை கொண்டு வருகின்றனர். சிலர் விறகுகட்டைகள் உள்பட பாத்திரங்களை உள்ளூர் கடைகளில் வாடகைக்கு எடுக்கின்றனர். உணவு சமைக்கும் போது வரும் மசாலா நறுமணம் சந்தனக்கட்டை மற்றும் தூசியோடு கலக்கிறது.
“இது (உர்ஸ்) ஆரம்பம்தான்” என்கிறார் கேசவபுரம் கிராம பஞ்சாயத்தின் தலைவர் சைதா நாயக். இந்த கிராமம் தர்காவிலிருந்து 15கிமீ தொலைவிலுள்ளது. உர்ஸ் முடிந்த பிறகு வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலிருந்து, ஜூன்-ஜூலையில் வரும் அடுத்த பயிர் காலம் வரை கண்டூறுவிற்காக ஆடுகளையும் செம்மறிகளையும் வழங்க ஜனபஹாத் கிராமத்திற்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருக்கும் என அவர் கூறுகிறார்.
இறைச்சிக்காக ஒவ்வொரு விலங்கை வெட்டுவதற்கும் புனித மந்திரங்களை ஓதி சன்னதியில் உணவை படைக்கவும் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை தர்கா பராமரிப்பு நிர்வாகிகள் அல்லது ஒப்பந்ததாரர்களால் (விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுவது, தேங்காய் விற்பது, லட்டுகள் விநியோகிப்பது மற்றும் பல லாபகரமான நடவடிக்கைகளுக்கு உரிமம் பெற்றுள்ளோர்) வசூலிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் மாநில வக்ஃபு போர்டால் ஏலம் விடப்படுகிறது.
பலருக்கு இந்த தொகையை செலுத்த கடினமானதாக இருப்பது ஒருபக்கம் இருக்க, போதுமான கழிவறை இல்லாதது மற்றும் மோசமான சுகாதாரம் குறித்து பலர் குறை கூறுகிறார்கள். “அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் என பலர் இங்கு வருகிறார்கள். பலமுறை இதுகுறித்து அவர்களிடம் கூறிவிட்டோம். ஆனால் எதுவும் மாறவில்லை” என சைதா நாயக் கூறுகிறார். போதுமான வசதிகள் இல்லாதது குறித்தும் தர்காவின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தாலும், தங்கள் சாதி, மதங்களை கடந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் சுவையான உணவிற்காகவும் ஒவ்வொரு வருடமும் பலர் இங்கு வருகிறார்கள்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா