“இப்போது புயல் ஓய்ந்ததும், எங்களை இங்கிருந்து கிளம்புமாறு கூறுகிறார்கள்” என என்னிடம் மே மாதம் கூறினார் காளிதாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமினா பாய். “ஆனால் நாங்கள் எங்குச் செல்வது?”
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பராக்னாஸ் மாவட்டத்தில் உள்ள அமினாவின் கிராமத்திலிருந்து 150கிமீ தொலைவில் அம்பன் சூறாவளி தரையிறங்கியது. அதற்கு முந்தைய நாள், பல கிராமங்களில் உள்ள குடும்பங்களை அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர் உள்ளூர் அதிகாரிகள். மே 19-ம் தேதி அமினாவும் அவரது குடும்பமும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் தற்காலிக அறைகளுக்குச் சென்றனர்.
சுந்தரவனத்தின் கோசபா ப்ளாக்கில் இருக்கும் அமினாவின் மண் வீட்டைப் புயல் அடித்துச் சென்றது. அவரது உடைமைகள் அனைத்தும் கூட அடித்துச் செல்லப்பட்டன. அமினா, 48, அவரது கணவர் முகமது ரம்ஜான் மோலா, 56, மற்றும் 2 முதல் 16 வயது வரையிலான அவர்களின் ஆறு குழந்தைகளும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
சூறாவளி தாக்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கிராமத்திற்கு திரும்பியிருந்தார் முகமது மோலா. 56 வயதான இவர், புனேயிலுள்ள மாலில் துப்புரவாளராக பணியாற்றி, மாதம் ரூ. 10,000 சம்பாதித்து வந்தார். இந்த முறை இங்கேயே இருந்து, அருகிலுள்ள மோலா காலி பஜாரில் டீக்கடை வைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.
தனது வேலை முடிந்த பிறகு, அருகிலுள்ள கோமார் ஆற்றில் மீனும் நண்டும் பிடித்து குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருக்கிறார் அமினா. தான் பிடித்ததை பஜாரில் விற்பனை செய்கிறார். “ஆனால் தினமும் 100 ரூபாய் கூட தன்னால் சம்பாதிக்க முடியவில்லை” என அவர் கூறுகிறார்.
இவர்களின் மூத்த மகனான ரகீப் அலி, 14 வயதாக இருக்கும் போது பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். “அப்பா அனுப்பும் பணத்தை வைத்து நாங்கள் குடும்பம் நடத்த முடியாது. அதனால்தான் நான் வேலைக்குச் சென்றேன்” என்கிறார். கொல்கத்தாவில் உள்ள தையல் கடையில் உதவியாளராக இருக்கும் ரகீப், மாதம் ரூ. 5,000 சம்பாதிக்கிறார். கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் தாக்கிய அம்பன் புயலின் போதுதான் இவர் வீட்டிற்கு வந்திருந்தார்.
கோமார் நதிக்கரையில் இருந்தது இவர்களது கூரை வேயப்பட்ட மண்வீடு. ஒவ்வொரு தடவை புயல் இவர்களை தாக்கும் போதும் – சிதிர் (2007), அய்லா (2009) மற்றும் புல்புல் (2019) - வீட்டிற்கருகே நெருங்கி வந்த ஆறு, கொஞ்ச கொஞ்சமாக அவர்களின் ஒரு ஏக்கர் நிலத்தை மூழ்கடித்தது. அதில் அவர்கள் வருடம் ஒருமுறை நெல்லும் சில காய்கறிகளும் பயிரிடுவார்கள். அம்பன் புயல் வந்தபோது அவர்களிடம் எந்த நிலமும் மீதமில்லை.















