பட்வட்கான் கிராமத்தில் வயல்வெளிகள் சூழ்ந்த புழுதி படிந்த சாலையில் நடந்து சென்று, நாம் ஒரு சிறிய வீட்டை அடைகிறோம். இளஞ்சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்ட சுவர்களும், மட்டமான சிமெண்ட் மேற்கூரையை கொண்ட சிறிய வீடு அது. அந்த வீட்டிற்கு வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மராத்தி மொழியில் உள்ளது. வாடாமல்லி நிறத்தில் சுவரில் ‘திங்கி‘ என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கு ‘தீப்பொறி‘ என்று அர்த்தம். 8 முதல் 10 கவிதைகளை கொண்ட தொகுப்பின் தலைப்பு அது. “எனது தந்தையின் கவிதைகள் எழுதப்படவில்லை. ஆனால், அவை எனது நினைவில் உள்ளது“ என்று பிரதீப் சால்வே கூறுகிறார்.
தந்தை அவருக்கு விட்டுச்சென்ற பரம்பரை சொத்தாக அவர் (ஷகீர் ஆத்மாராம் சால்வே, கவிஞர்) எழுதிய 300க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரதீப் கூறுகிறார். “அவை அனைத்தும் வரதட்சணை, மது மற்றும் அதனால் ஏற்படும் அழிவுகளை குறிப்பதாகும்“ என்று அவர் கூறுகிறார். அதில் பாபாசகேப் டாக்டர் அம்பேத்கர் கூறிய தலித்கள், பெண்கள், விவசாயம், கல்வி மற்றும் சமூக புரட்சி ஆகியவற்றின் தாக்கம் இருக்கும். ‘திங்கி‘க்கு (அங்கு அவரது சகோதரர் வசிக்கிறார்) அருகில் உள்ள ‘ராஜாரத்னா‘ என்ற தனது வீட்டில் அமர்ந்துகொண்டு வரதட்சணைக்கு எதிராக அவரது தந்தை இயற்றிய கவிதையை கூறுகிறார்.
“हुंड्याची पद्धत सोडा, समतेशी नाते जोडा”
‘‘வரதட்சணையை விட்டொழியுங்கள், சமத்துவத்துடன் இணையுங்கள்“
மஹாராட்ஷ்ராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் தாலுகாவில் 21 ஆண்டுகளுக்கு முன் க்ரைண்ட் மில்ஸ் சாங்க் திட்டத்துக்காக சில பெண்களைச் சந்தித்து அவர்களின் பாடல்களைப் பதிவு செய்த அதே இடத்தில் பாரியின் தொடருக்காக இப்போது இந்தச் சந்திப்பு நடக்கிறது.
நாங்கள் பிரதீப்பின் தாயார் கமல் சால்வேவை சந்திப்போம் என்று நம்பினோம். அவர் க்ரைண்ட் மில் சாங்க்ஸ் திட்டத்தில் பாடல்கள் பதிவுசெய்யபட்டபோது அதில் ஒரு பாடகராக இருந்தார். அவர் தங்களது உறவினரை சந்திப்பதற்காக அருகில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால், நாம் அவரது குடும்பத்தினரை சந்தித்தோம். கவிஞர் ஆத்மாராம் சால்வே, கமல்தாயின் கணவர்.
ஆத்மாராம் சால்வே, 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்தார். ஔரங்காபாத்தில் உள்ள மிலிண்ட் மஹாவித்யாலயாவில் படித்தார். அவரது தந்தைக்கு 25 ஏக்கர் நிலமும் இரண்டு கிணறுகளும் சொந்தமாக இருந்தன. ஆனால், ஆத்மாராமுக்கு விவசாயத்தில் நாட்டமில்லை. அவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. “அவர் கவிதை எழுதி அதை அக்கணத்திலே மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்“ என்று பிரதீப் கூறுகிறார். அவரது பெரும்பாலான பாடல்கள் ஒடுக்குதலுக்கு எதிராக சமூகப்புரட்சி கருத்துக்களை கொண்டதாகும்.
ஆத்மாராமின் கவிதைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும், அவர் வாழ்ந்த காலத்திலே அவரது கவிதைகள், பாடல்கள் மஹாராஷ்ட்ராவின் கிராமங்களிலும், நகரங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளது. அது கவனிக்கப்படாமல் போகவில்லை. அவர் மீது, அரசியல் இயக்கங்களில் பங்குபெற்றதற்காகவும், அரசியலை கேலி செய்து பாடல்கள் பாடியதற்காகவும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை வழக்குகள் போடப்பட்டுள்ளன.
“அவர் ஒவ்வொரு முறை கைதாகும்போதும், எனது தாத்தா எங்களுக்கு சொந்தமான நிலத்தின் சிறு பகுதிகளை விற்று சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்வார்“ என்று பிரதீப் கூறுகிறார். அவரை காவல்துறையினர் இருமுறை மஜல்கான் தாலுகாவிலிருந்தும், இருமுறை பீட் மாவட்டத்திலிருந்தும் வெளியேற்றிவிட்டனர். அந்தக் குடும்பத்தினரின் நிலங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்தது.
மஜல்கானைச் சேர்ந்த கவிஞரின் நண்பர் பாண்டுரங் ஜாதவ், மாநில அரசின் பாசனத் துறையின் குமாஸ்தாவாக இருந்தார். அவர், ஆத்மாராம் தனது இளமை காலத்தில் தலைமை ஏற்றுச்செல்லும் பல்வேறு பேரணிகளுக்கு உடன் சென்றுள்ளார். “பட்டியலின மக்களுக்கு எதிராக எப்போது அடக்குமுறைகள் நடந்தாலும் மராத்வடா மண்டலம் முழுவதும் ஆத்மாராம் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி, புரட்சி பாடல்களையும் பாடுவார். அவர் மக்களின் கவிஞர் ஆனார்“ என்று ஜாதவ் கூறுகிறார்.
தலித் சிறுத்தைகள் என்ற தீவிர சமூக அரசியல் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவ்வமைப்பு கவிஞர்கள் நாம்தேவ் தாசால், பி.வி.பவால் மற்றும் பலரால் 1972ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் உறுப்பினர்களுள் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ராஜா தாலேவும்(70) ஒருவர். தற்போது அவர் இந்திய குடியரசு கட்சியின் அங்கமாக உள்ளார். அவருக்கு ஆத்மாராமை நன்றாக தெரியும். மும்பையைச் சேர்ந்த தாலே கூறுகையில், “ ஆத்மாராம் ஒரு சிறந்த கவிஞர். தலித் சிறுத்தைகள் அமைப்பில் பல ஆண்டுகள் இருந்தார். அவர் மராத்வாடாவில் நடக்கும் எங்கள் கூட்டங்களில் பங்கேற்று, எங்கள் நிகழ்வுகளில் அவரது புரட்சிப் பாடல்களை பாடுவார்“ என்றார்.
ஷகீர் ஆத்மாராம் சால்வே 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி இறந்தார். தனது 35வது வயதில், பிரதீப்புக்கு 12 வயது இருந்தபோது இறந்துவிட்டார். 20 ஆண்டுகளாக ஜனவரி 19ம் தேதி சால்வே குடும்பத்தினர் அவரது நினைவு தினத்தில் அவரது புரட்சிப் பாடல்களை தங்களுக்குள் பாடுவார்கள்.
ஔரங்காபாத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயரை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி நீண்டப் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களின் குடும்பத்தினரை, 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் மஜல்கான் தாலுகாவில் உள்ள மக்கள் சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், கவிஞரின் குடும்பத்தினர் அவரின் பாடல்களை பாடிச் சிறப்பித்தனர். மஜல்கானைச் சேர்ந்த மக்கள், கமல்தாயின் கணவரின் நினைவைப் போற்றினர். அந்தாண்டு முதல் அவர்கள் தங்கள் மண்ணின் கவிஞருக்கு ஆண்டு விழா நடத்தி கொண்டாடத் துவங்கினர்.
இதுவரை அரசு, அலுவல் ரீதியாக ஷகீர் ஆத்மாராம் சால்வேவுக்கு அங்கீகாரமோ, கவுரவமோ வழங்கியதில்லை.
ஆத்மாராமின் மகன் பிரதீபுக்கு தற்போது வயது 38. அவர் 8ம் வகுப்பு வரை பள்ளி சென்றார். பின் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்ல துவங்கினார். அவர் வருமானம் ஈட்டினால்தான் குடும்பத்தில் உள்ள இளையவர்கள் பள்ளி செல்ல முடியும். அவர் வேளாண் கூலித்தொழிலாளியாகவும், மஜல்கானின் மொந்தா சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளியாகவும் வேலைகளை செய்தார். 5 ஆண்டுகளுக்கு முன், இந்த குடும்பத்தினர் பட்வட்கானில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினர். அதில் சிறுதானியப் பயிர்களான கம்பு, சோளம் ஆகியவற்றை பயிரிடுகின்றனர். அதை அவர்களின் உணவுத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் பருத்தி மற்றும் சோயாவும் கூட பயிரிடுகின்றனர். அவற்றை விற்பனை செய்கிறார்கள். பிரதீப்பின் இரு மகள்களும் 10ம் வகுப்பு முடித்துள்ளனர். அவரின் இரு மகன்களும் முறையே 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கிறார்கள். 4 குழந்தைகளின் தாயான ஜோதி சால்வே பீட் மாவட்டத்தில் அங்கன்வாடியில் சமையலராக வேலை செய்கிறார்.
அவரது தந்தையின் கவிதைகள் அனைத்தும் பிரதீப் நினைவு கூர்ந்து எழுதி வருவதாக கூறுகிறார். அவர் ‘திங்கி‘யில் இருந்து ஒரு பாடலை பாடுகிறார்.
தீப்பொறி
புரட்சிக்கான பொறிகள் பரவட்டும், பீரங்கியை போர்முனைக்குக்
கொண்டு வாருங்கள்
பழிக்கான நெருப்பு எரியட்டும்
கோபம் மனதில் உயரட்டும்
கருவில் இருக்கும்
குழந்தை (ஒடுக்குமுறை) எதிர்காலத்தைப் பார்க்கிறது
மநுவின் குழந்தையைப் புதைக்க அவன் ஓடுகிறான்… அவன் ஓடுகிறான்
எரித்து இந்த அநீதியின் இதயத்துக்கு பெயர் சூட்டுங்கள்… பெயர்
புரட்சிக்கான பொறிகள் பரவட்டும்,
பீரங்கியை போர்முனைக்குக் கொண்டு வாருங்கள்
பழிக்கான நெருப்பு எரியட்டும் கோபம் மனதில் உயரட்டும்
புலியின்
பால் குடிக்கும் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்
தொண்டையில் தாக்கி, புரட்சி செய்து எழுக ஆண்களே.. புரட்சி செய்யுங்கள் ஆண்களே
ஆண்களாக இருந்தும் ஏன் கலங்காமல் இப்போது உட்கார்ந்திருக்கிறீர்கள்.. இப்போது
பழிக்கான நெருப்பு எரியட்டும்
நாம் அனைவரும் ஒற்றைக் குரலில்
இன்று புரட்சிக்கு அழைப்பு விடுப்போம்
சால்வேவின் பார்வை பலவீனமானவர்களின்
எதிரி மீது இருக்கும்
பீம்காரர் உங்களை ஆதரிக்கும்போது
ஏன் பயப்படுகிறீர்கள்… இந்த பீம்காரர்
பழிக்கான நெருப்பு எரியட்டும்
புரட்சிக்கான பொறிகள் பரவட்டும்,
பீரங்கியை போர்முனைக்குக் கொண்டு வாருங்கள்
பழிக்கான நெருப்பு எரியட்டும்
கோபம் மனதில் உயரட்டும்
பீம்காரர் : பீமாராவ் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள்
புகைப்படங்கள் : நமிதா வைக்கர் மற்றும் சம்யுக்தா சாஸ்திரி
தமிழில்: பிரியதர்சினி. R.