மேடைக்கு முன் திரண்டிருந்த பெருந்திரள் அமைதியாக இருந்தது. நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோரின் ஒன்றுபட்ட இதயத்துடிப்புச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. தலைவர்கள் மரியாதையுடன் தலைவணங்கியபோது அவர்களிடம் உணர்வெழுச்சி மேலோங்கியது. காற்றில் எங்கும் உணர்ச்சி பரவியது. சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் எட்டு இளைஞர்கள் தங்களின் தலைகளில் சிங்குவிற்கு சுமந்து வந்த மண் பானை மீதே அனைவரின் கவனமும் குவிந்தன.
தியாகிகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவின் 90ஆவது ஆண்டு தியாக நாளையொட்டி மார்ச் 23, 2021 அன்று டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளிடம் பல மைல் தூரம் நினைவுகளுடன் புனித மண் கொண்ட பானை பயணப்பட்டு வந்தது.
“பஞ்சாபின் இந்த இளைஞர்கள் வரலாற்றின் எட்டு முக்கிய இடங்களில் இருந்து மண் கொண்டு வந்துள்ளனர். அந்த இடங்கள் எங்களின் மனதிற்கு நெருக்கமானவை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாங்கள் அவற்றை வரவேற்கிறோம்,” என மேடையில் அறிவிக்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜதிந்தர் சிங் சினா.
மண் என்பது விவசாயிகளின் வாழ்வில் பண்பாட்டு ரீதியாகவும், அடையாளப் பொருளாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது அதற்கு புதிய அரசியல், வரலாற்று, உருவகப் பொருள் கிடைத்துள்ளது. பல்வேறு தியாகிகளின் கிராமத்து புனித மண்ணைக் கொண்டு வருவது, போராடும் விவசாயிகளுக்கு புத்துயிர் அளித்து ஊக்கமளிக்கும். விவசாய சங்கங்கள், செயற்பாட்டாளர்களுக்கான மாவட்ட அளவிலான கூட்டத்தில் எளிய மக்களிடமிருந்து இந்த சிந்தனை தோன்றியது.










