“ஊரடங்கு எங்களை பாழாக்கி விட்டது. கடைசியாக மார்ச் மாதத்தில் என் கடைக்கு சுற்றுலாவாசி ஒருவர் வந்ததாக” கூறுகிறார் அப்துல் மஜித் பட்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் மூன்று கடைகளை நடத்தி வரும் பட், தோல் பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவிவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆனால் ஜூன் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும், ஒரு வாடிக்கையாளர் கூட அவர் கடைக்கு வரவில்லை. ஆகஸ்ட் 5, 2019 அன்று காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து தொடங்கிய மோசமான காலம், தற்போது ஒரு வருடம் ஆகியும் இன்னும் ஒய்ந்தபாடில்லை.
பட் போன்ற பலருக்கு வருமானம் அளித்து வந்த சுற்றுலா, இந்த இரண்டின் தாக்கத்தால் நசுங்கிவிட்டது.
‘6-7 மாத முடக்கத்திற்குப் பிறகு சுற்றுலா சீஸன் தொடங்கியது. அதற்குள் கொரோனா ஊரடங்கு ஆரம்பமானது” என்கிறார் 62 வயதான பட். தால் ஏரியின் பதபோரா காலன் பகுதியைச் சேர்ந்த இவர், எல்லாரும் மதிக்கக்கூடிய பெரியவர். இவர் ஏரிக்கரை சுற்றுலா வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்த சங்கத்தில் 70 உறுப்பினர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவர் கூறியதையே ஏரியின் சுற்றுலா பொருளாதாரத்தை சார்ந்திருக்கும் பலரும் – மஞ்சள் நிற படகு வீட்டை வைத்திருக்கும் ஷிகர்வாலாக்கள், வணிகர்கள் மற்றும் கடை முதலாளிகள் - எதிரொலிக்கின்றனர். கடந்த 12 மாதங்களாக சுற்றுலா பிரசுரத்தில் உள்ள அழகிய தால் ஏரியின் புகைப்படத்தை மட்டுமே இவர்கள் பார்த்து வருகிறார்கள். (பார்க்க
ஸ்ரீநகரின் ஷிகராக்கள்: அசைவற்ற நீர் கடுமையான இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
)
அவர்களில் ஒருவர்தான் நேரு பூங்காவைச் சேர்ந்த 27 வயது ஹஃப்ஸா பட். ஜம்மு காஷ்மீர் தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் 24 நாள் பயிற்சி முடித்து, ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புதான், வீட்டிலிருந்து சிறு தொழில் தொடங்கியிருந்தார் ஹஃப்ஸா. ஸ்ரீநகரில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவர், நிறுவனத்திடமிருந்து குறைந்த வட்டியில் ரூ. 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். “துணிகளையும் உடைகளையும் நிறைய வாங்கி வைத்துள்ளேன். அதில் 10-20 சதவிகிதமே விற்பனை செய்திருந்தேன். அதற்குள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தவணைத் தொகை கட்டுவதற்கு சிரமப்பட்டு வருகிறேன்” என அவர் கூறுகிறார்.
இதே நேரு பூங்கா பகுதியில் – 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தால் ஏரிக்குள் இருக்கும் பல தீவுகளில் இதுவும் ஒன்று – 70 வயதாகும் அப்துல் ரசாக் தார் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீநகரின் போல்வார்ட் சாலையோரம் உள்ள படித்துறையில் இவர் படகு ஓட்டுகிறார். “இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை” என்கிறார்.
அவர் கூறுகையில், “சுற்றுலா வியாபாரத்திற்காக மிச்சம் மீதமிருந்த அனைத்தையும் கொரோனா ஊரடங்கு அழித்துவிட்டது. நாங்கள் பின்னோக்கி செல்கிறோம். கடந்த ஆண்டை விட இப்போது மிகவும் மோசமாக உள்ளோம். என் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் இந்த ஷிகாராவை நம்பிதான் உள்ளனர். நாங்கள் சீரழிவைச் சந்தித்து வருகிறோம். முன்பு ஒருவேளைக்கு சாப்பிட்ட உணவை இப்போது மூன்று வேளை சாப்பிட்டு வருகிறோம். சாப்பிடாமல் ஷிகர்வாலாவால் எப்படி படகை ஓட்ட முடியும்?”
அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் அபி கரபோரா மொகலாவைச் சேர்ந்த 60 வயதாகும் வாலி முகமது பட் கூறுகையில், “கடந்த ஒரு வருடம் எங்கள் எல்லாருக்கும் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. சென்ற வருடம் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பாக வழங்கப்பட்ட அறிவிப்பின் மூலம், சுற்றுலாவாசிகளை வெளியேற்றி அனைத்தையும் மூடிவிட்டனர். அதன்பிறகு வந்த கொரோனா ஊரடங்கு எங்களை சூறையாடிவிட்டது.” அனைத்து ஜம்மு காஷ்மீர் டேக்ஸி ஷிகாரா உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் பட், தால் மற்றும் நிகின் ஏரிகளில் உள்ள 35 பெரிய மற்றும் சிறிய படித்துறைகளில் இருக்கும் 4000 ஷிகர்வாலாக்கள் தங்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக கூறுகிறார்.
தங்களது ஒட்டுமொத்த இழப்பு கோடிகளைத் தாண்டும் என அவர் மதிப்பிடுகிறார். பட் கூறுகையில், “சீஸன் உச்சத்தில் இருக்கும்போது, தங்களது சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தினமும் குறைந்தது ரூ. 1500 – 2000 சம்பாதிப்பார்கள். நான்கு மாத சீஸனிலேயே (ஏப்ரல்-மே முதல் ஆகஸ்ட்-செப்டம்பர் வரை) அந்த வருடத்திற்கு போதுமான பணத்தை ஷிகர்வாலாக்கள் சம்பாதித்து விருவார்கள். கொரோனா வைரஸ் ஊரடங்கால் இதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. திருமணமோ அல்லது மற்ற செலவுகளோ, அனைத்தும் சுற்றுலா சீஸனில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே உள்ளது.”
எந்த வருமானமும் கிடைக்காத மாதங்களை சரிகட்ட, சில ஷிகர்வாலா குடும்பங்கள் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 40 வயதில் இருக்கும் அப்துல் ரசாக் தாரின் இரு மகன்களும் இந்த கூலி வேலைக்குச் செல்கின்றனர். “அவர்கள் ஷிகர்வாலாவாகவும் பணியாற்றுகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில், களை எடுக்கும் பணியில் சேர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளேன்” என்கிறார் தார்.
ஜம்மு காஷ்மீர் ஏரிகள் மற்றும் நீர்வழிகள் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் நடைபெறும் வேலையையே அவர் குறிப்பிடுகிறார். களை எடுக்கும் பணிகள் பருவம் தோறும் இருக்கும். படகுகள் ஓடாததால் இந்தக் களைகள் வளர்ந்துவிடும். களைகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தினாலும், உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் தொழிலாளர்கள் வேலைக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
தால் ஏரியின் நேரு பூங்காவைச் சேர்ந்த 32 வயது ஷபீர் அஹமது பட்டும் ஜூலை மாதத்திலிருந்து இந்த வேலையைத்தான் செய்து வருகிறார். சால்வைகள் மற்றும் பிற காஷ்மீர் கைவினைப் பொருட்களை கோடை காலத்தில் அருகிலுள்ள லடாக்கில் விற்பனை செய்து வந்தார் இவர். இதன்மூலம் எப்படியும் மாதத்திற்கு ரூ. 30. 000 சம்பாதித்து விடுவார். குளிர் காலத்தில் இதேப் பொருட்களை விற்பனை செய்ய கோவா அல்லது கேரளா சென்று விடுவார். மார்ச் 22 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், வீட்டிற்கு வந்துவிட்டார். பல மாதங்களாக எந்த வேலையும் இல்லாத நிலையில், 28 வயதாகும் தனது இளைய சகோதரர் சவுகத் அகமதோடு சேர்ந்து ஏரியில் களை எடுக்கும் வேலைக்குச் சென்று வருகிறார்.
“தால் ஏரியில் இருக்கும் களைகளை எடுத்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள லாரியில் ஏற்றுவோம். ஒரு தடவை செல்வதற்கு இருவருக்கும் சேர்த்து ரூ. 600 கிடைக்கும். நாங்கள் எடுத்துச் செல்லும் பெரிய சரக்கு படகின் வாடகைக்கு ரூ. 200 கொடுக்க வேண்டும். களைகளை எடுக்க எத்தனை தடவை வேண்டுமானாலும் செல்லலாம், அது நம் இஷ்டமே. ஆனால் பெரும்பாலும் இரண்டு தடவைக்கு மேல் செல்ல முடியாது. தண்ணீரிலிருந்து களையை எடுக்க கடும் உழைப்பு தேவைப்படும். காலை 6 மணிக்கு சென்று மதியம் 1 மணிக்கு திரும்புவோம். எப்படியாவது இரண்டு தடவைக்கு மேல் செல்ல முயற்சிப்போம். அப்போதுதான் கொஞ்சமாவது நாங்கள் பணம் ஈட்ட முடியும்” என்கிறார் ஷபீர்.
இதற்கு முன் இதுபோன்ற கடுமையான உடல் உழைப்பைக் கோரும் வேலையை தான் செய்ததில்லை எனக் கூறுகிறார் ஷபீர். ஏரியில் உள்ள தீவில் இவரது குடும்பத்திற்குச் சொந்தமாக சிறிய திட்டுகளாக விவசாய நிலம் உள்ளது. ஆனால் இவரது தந்தை, தாய் மற்றும் இவரது சகோதரர்களில் ஒருவர் அதில் பயிர் செய்துள்ளார்கள்.
“ஊரடங்கு தொடங்கியதும், நீண்டநாள் வேலை செய்யாமல் இருந்தோம். வருமானம் ஈட்டுவதற்கு வேறு வழியில்லை என தெரிந்ததும், தால் ஏரியில் களை எடுக்கும் வேலையில் ஈடுபட்டேன். இத்தகைய உடல் உழைப்பைக் கோரும் வேலையை விட சுற்றுலா வியாபாரத்தையே நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் எங்கள் வாழ்நாள் முழுதும் அதைதான் செய்து வந்தோம். ஆனால் இப்போது சுற்றுலா இல்லாததால், நாங்கள் உயிர் பிழைக்க இது ஒன்றே வழியாக உள்ளது. தற்போது எங்கள் குடும்பச் செலவை சமாளிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது” எனக் கூறுகிறார் ஷபீர்.
தனது குடும்பத்தினர் வீட்டுச் செலவை பாதியாக குறைத்துவிட்டதாக கூறுகிறார் ஷபீர். “எங்களிடம் இருக்கும் பொருட்களை பயன்படுத்த முடியாது (சால்வைகள், தோல் பைகள் மற்றும் மேலாடை, ஆடை ஆபரணங்கள்) யாரும் எங்களிடமிருந்து வாங்க மாட்டார்கள். இந்தச் சமயத்தில் அதனால் ஒரு பயனும் இல்லை. இதுதவிர, எங்களின் கடனும் அதிகரித்து வருகிறது (குறிப்பாக கடனில் வாங்கிய பொருட்களுக்கு).”
தால் தீவுகளில் வாழும் மக்களின் சிரமங்களை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என ஷபீர் விரும்புகிறார். “அவர்கள் இங்கு வந்து கணக்கெடுப்பு நடத்தினால், இங்குள்ள சிரமங்களை தெரிந்து கொள்வார்கள். வேலை இல்லாமல் நிறைய குடும்பங்கள் உள்ளது. சில குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அல்லது குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். அரசாங்கம் வந்து, பார்த்து, இதுபோன்ற மக்களுக்கு நிதி உதவி அளித்தால் மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.”
ஸ்ரீநகரில் வசிப்பவர்களுக்கும் ஏரியைச் சார்ந்து வாழ்பவர்களுக்கும் இருக்கும் சூழ்நிலை குறித்து வேறுபடும் ஷபீர், இங்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறுகிறார். அவர் கூறுகையில், “தாலில் சுற்றுலாவை தவிர்த்து, செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. பெரும்பாலும் நாங்கள் காய்கனிகளை விற்பனை செய்வோம் (படகில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்கு செல்வோம்). நகரில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் வேலை போல் எங்களுக்கு இங்கு கிடைக்காது. பொருட்களை விற்பனை செய்ய வண்டியும் ஏற்பாடு செய்ய முடியாது. ஒருவேளை மறுபடியும் சுற்றுலா ஆரம்பித்தால் எங்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் தற்போது நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.”
படகில் காய்கறிகள் விற்பது எளிமையானது இல்லை. பதபோரா கலனில் பி.ஏ படித்து வரும் அண்ட்லீப் ஃபயாஸ் பாபா, 21, கூறுகையில், “என் தந்தை ஒரு விவசாயி. அவரால் வீட்டை விட்டு வெளிவர முடியாததால், பல மாதங்களாக அவரால் வருமானம் ஈட்ட முடியவில்லை. எல்லா காய்கறிகளும் வீணாகிவிட்டன. தனது வாடிக்கையாளர்களுக்கு சிலவற்றை மட்டுமே கொடுத்தார். என் தந்தை மட்டுமே சம்பாதிப்பதால், இது எங்கள் குடும்பத்தை மிகவும் பாதித்தது.” அண்ட்லீப்பின் இளைய சகோதரர் மற்றும் இரு தங்கைகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவரது தாய் இல்லத்தரசியாக இருக்கிறார். “பள்ளி கட்டணங்களையும் எனது கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக கட்ட வேண்டும். ஏதாவது அவசரம் என்றால் கூட, கரையை (ஸ்ரீநகர்) அடைய ஏரியை கடக்க வேண்டும்.”
நகரில் வாழ்ந்து வந்தாலும் ஏரிச் சுற்றுலாவை நம்பி வாழ்பவர்களும் இந்த மாதங்களில் கடுமையான சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஸ்ரீநகரின் ஷாலிமார் நகரைச் சேர்ந்த முகமது ஷஃபி ஷா. கடந்த 16 வருடங்களாக சுற்றுலா சீசனில் படித்துறையிலிருந்து 10கிமீ தூரத்தில் ஷிகாராவை ஓட்டி வருகிறார். சில நாட்களில் இவருக்கு ரூ. 1000 – 1,500 கிடைக்கும்.ஆனால் சென்ற வருடத்திலிருந்து, ஷிகாராவில் செல்ல குறைவான சுற்றுலாவாசிகளே வருகிறார்கள். “370-வது சட்டப்பிரிவை அகற்றியதிலிருந்து, நாங்கள் வேலை இல்லாமல் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இது இன்னும் மோசமானது” என அவர் கூறுகிறார்.
“தாலில் நான் வசித்து வந்தேன். ஆனால் எங்களை அரசாங்கம் வெளியேற்றிவிட்டது.” மறு குடியேற்றத்தையே அவர் குறிப்பிடுகிறார். மேலும் அவர் கூறுகையில், “ஷாலிமாரில் இருந்து தினமும் இங்கு வருகிறேன் (யாரிடமாவது தொற்றிக்கொண்டு). குளிர்காலத்தில் வேலை தேடி வெளியூருக்குச் சென்று விடுவேன் (கடற்கரையில் கைவினைப் பொருட்கள் விற்க கோவாவிற்கு செல்வேன்). ஊரடங்கினால் இது தடைபட்டுள்ளது. வியாபாரமும் சுத்தமாக இல்லை. மே மாத இறுதியில் வந்த நான், ஒரு வாரம் தனிமையில் இருந்தேன்…”
தால் ஏரியில், ஒவ்வொரு படித்துறையிலும் இருக்கும் ஷிகர்வாலாக்கள் சங்கம் வைத்துள்ளனர். ஒவ்வொரு ஷிகாரா ஈட்டும் வருமானத்தை சேர்த்து, அதை உறுப்பினர்களுக்கு சமமாக பிரித்து கொடுக்கிறார்கள். ஷஃபி இருக்கும் படித்துறையில் 15 ஷிகர்கள் பணியாற்றுகிறார்கள்.
“ஒருவேளை அரிதாக உள்ளூர்வாசிகள் வந்தால், அவர்களை ஷிகாராவில் அழைத்துச் சென்றால் ரூ. 400-500 வருமானம் கிடைக்கும். அதை டேக்ஸி நிறுத்தத்தில் உள்ள 10-15 நபர்களிடையே பிரித்துக் கொள்வோம். ஒருவருக்கு ரூ. 50 கிடைக்கும். இதை வைத்து நான் என்ன செய்ய? ஷிகாராவை விட்டால் எங்களுக்கு வேறு எதுவும் கிடையாது. எப்படி எங்கள் குடும்பத்தை நடத்த முடியும்? பாழாகி விடாதா?”
ஒவ்வொரு ஷிகர்வாலாக்கும் மாதம்தோறும் என மூன்று மாதங்களுக்கு ரூ. 1000 கொடுப்பதாக கேள்விப்பட்டு தன்னுடைய ஷிகாரா டேக்ஸி உரிமத்தை சுற்றுலா துறையிடம் சமர்பித்துள்ளார் ஷஃபி. ஆனால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
போல்வார்ட் சாலையின் குறுக்கே, ஏரிக்குள் நிற்கும் தனது காலியான படகுவீட்டின் – -அக்ரோபோலிஸ்’ - முகப்பில் சாய்ந்திருக்கிறார் 50 வயதான அப்துல் ரஷீத் பத்யாரி. இதில் கையாலான மரச்சுவர்கள், பஞ்சு மெத்தை சோஃபாக்கள் மற்றும் பாரம்பர்ய கதம்பந்த் முறையில் அலங்கரிக்கப்பட்ட கூரைகள் உள்ளது. ஒரு வருடமாகியும் இன்னும் ஒரு வாடிக்கையாளர்கள் கூட இங்கு வரவில்லை.
“நான் பெரியவன் ஆனதிலிருந்து படகுவீட்டை ஓட்டி வருகிறேன். எனக்கு முன்பு, என் அப்பாவும் தாத்தாவும் இதேயே செய்தனர். அவர்களிடமிருந்து பரம்பரையாக இந்தப் படகு எனக்கு வந்தது. எங்களுக்கு எல்லாம் மூடப்பட்டுவிட்டது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒரு வாடிக்கையாளரும் வரவில்லை. கடைசியாக 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பு என் படகிற்கு வாடிக்கையாளர் வந்தார். கொரோனா வைரஸ் ஊரடங்கு என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே எந்த சுற்றுலாவாசியும் வருவதில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். எங்களிடம் இருக்கும் சொத்துக்கள் கூட சீரழிந்து வருகிறது” என்கிறார் பத்யாரி.
படகுவீட்டில் சுற்றுலாவாசிகள் தங்குவதால் கிடைக்கும் வருமானத்தையே பத்யாரியின் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பம் நம்பியிருக்கிறது. “ஒரு இரவிற்கு ரூ. 3000 வசூலிப்பேன். சீசன் சமயங்களில் என்னுடைய படகு நிரம்பியிருக்கும். என்னுடைய படகுவீட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாவாசிகளிடம் பொருட்களை விற்பனை செய்வார்கள். என்னுடைய வாடிக்கையாளர்களை படகில் ஏற்றி ஏரியைச் சுற்றி காண்பித்து ஷிகர்வாலாக்கள் வருமானம் ஈட்டுவார்கள். அனைவரும் இப்போது வேலை இழந்துவிட்டார்கள். என்னிடமிருந்து சேமிப்பைக் கொண்டும் கடன் வாங்கியும் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்.” படகுவீட்டை கவனித்து கொள்ள பத்யாரியிடம் ஒரு ஊழியர் வேலை பார்த்து வந்தார். ஆனால், தன்னால் சம்பளம் கொடுக்க முடியாததால் அவரை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார். “எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இல்லை. என் மகனும் இந்த வேலையை செய்ய நான் விரும்பவில்லை” என்கிறார்.
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். எங்களிடமிருக்கும் சொத்துக்கள் கூட சீரழிந்து வருகிறது’ என தனது அலங்கரிக்கப்பட்ட படகுவீட்டைக் குறிப்பிடுகிறார் அப்துல் ரஷீத் பத்யாரி
சில மாதங்களாக, சிரமப்படும் ஷிகர்வாலாக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு உதவ சிலர் முன்வந்தனர்; அவர்களில் ஒருவர்தான் அப்துல் மஜித் பட் (ஏரிக்கரை சுற்றுலா வியாபாரிகள் சநத் தலைவர்). அவர் கூறுகையில், “எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அவசரகால தேவைகளுக்காக ஆறு லட்ச ரூபாய் இருப்பு உள்ளது. எங்களில் யார் மிகவும் சிரமப்படுகிறார்களோ அவர்களுக்கு இந்த பணத்தை கொடுப்போம். அப்போதுதான் அவர்களால் குடும்பத்தை நடத்த முடியும்.”
சீசன் நேரத்தில் 10 நபர்களுக்கு ரூ. 10,000-15,000 வரை சம்பளத்துடன் வேலை கொடுத்து வரும் பட், “என்னால் இப்போது சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தால் பெரும்பாலானோரை வேலையை விட்டுப் போகச் சொல்லிவிட்டேன். என் குடும்பத்தினரின் சம்மதத்துடன், மிகவும் ஏழையாக உள்ள ஒரு சிலரை மட்டும் வேலைக்கு வைத்துள்ளேன். நாங்கள் சாப்பிடுவதையே அவர்களுக்கும் கொடுக்கிறோம். இல்லையேல், என்னால் யாருக்கும் வேலை கொடுக்க முடியாது. கடந்த ஐந்து மாதங்களில் 4000 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனை செய்துள்ளேன். அதுவும் உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் இருந்தே கிடைத்தது.”
தனது குடும்பச் செலவை சமாளிக்கவும் கடனை திரும்பச் செலுத்தவும் வங்கியில் கடன் வாங்கியுள்ளதாக கூறுகிறார் பட். “நான் வட்டியும் கட்டியாக வேண்டும். என் இரண்டு மகன்களும் மூன்று மருமகன்களும் என்னோடுதான் வேலை செய்கிறார்கள் (அவருக்கு இரண்டு மகள்கள்; ஒருவர் இல்லத்தரசி, மற்றொருவர் வீட்டிற்கு உதவியாக இருக்கிறார்). என் மகன் பி.காம் பட்டதாரி. அவனை உடல் உழைப்புச் சார்ந்த கூலி வேலைக்கு அனுப்ப கூடாது என நான் நினைத்தாலும், இப்போது அவன் காட்டாயம் சென்றாக வேண்டிய நிலைமையே உள்ளது.”
பட் கூறுகையில், “தால் ஏரியின் கடை உரிமையாளர்கள் மற்றும் ஷிகர்வாலாக்களை அரசாங்கத்திலிருந்து யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் இழப்பை மதிப்பிட யாரும் வரவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், வழக்கம்போல் உள்ளூர்வாசிகள் நகரத்தில் உள்ள கடைகளுக்குச் செல்கிறார்கள். தால் ஏரியில் உள்ள காஷ்மீரி கைவினைப் பொருட்கள் கடைக்கு உள்ளூர்வாசிகள் யாரும் வருவதில்லை. இதனால் தால் ஏரியில் உள்ள கடைகாரர்களுக்கு 100 சதவிகிதம் இழப்புதான்.”
நிதி உதவி பெற ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கைவினைப் பொருட்கள் இயக்குனரகத்தின் அதிகாரி ஒருவர் ஜூலை மாதத்தில் கூறியிருந்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பட் கூறுகையில், “அப்போதிருந்து மாநில அரசு மீதும் மத்திய அரசு மீதும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். நீண்டநாள் கடையடைப்பும் ஊரடங்கும் நிச்சியமற்றதன்மையை அதிகப்படுத்தியுள்ளது. நமக்கும் தால் ஏரிக்கும் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கப் போகிறது என என் குழந்தைகளிடம் கூறியுள்ளேன்….”
தமிழில்: வி கோபி மாவடிராஜா