“ஒரு இரவுநேரத்தில் அவர்கள் எங்களின் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை அழித்தனர். ஒரேநாளில் எங்களின் நிலத்தை எடுத்துக் கொண்டு கொட்டகைகள் போட்டுக் கொண்டார்கள்,” என 2020 பிப்ரவரியில் சர்க்கானி கிராமத்தில் கொண்டிருந்த 8 ஏக்கர் நிலம் குடும்பத்திடமிருந்து பறிக்கப்பட்டதை விவரிக்கிறார் 48 வயது அனுசயா குமாரே.
உள்ளூரை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேராத வணிகர்கள் அடியாட்களுக்கு பணம் கொடுத்து நிலத்தை அபகரித்து கொண்டதாக நம்புகிறார் கோண்ட் பழங்குடி சமூகத்தை சேர்ந்த அனுசயா. ”அவர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி எங்களின் நிலத்தை பழங்குடியல்லாத மக்களுக்கு விற்றுவிட்டனர். 7/12 பட்டா இன்னும் எங்கள் பெயர்களில்தான் இருக்கிறது.” அவரின் குடும்பம் பருத்தி, கொண்டைக்கடலை, துவரை மற்றும் கோதுமை ஆகிய பயிர்களை விளைவிக்கிறது.
“கோவிட் காலத்தில் எங்களுக்கிருந்து சிறு நிலத்தில் விளைந்ததை வைத்துதான் நாங்கள் உயிர் வாழ்ந்தோம். போன மாதம் (டிசம்பர் 2020) அதையும் எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள்,” என்கிறார் அனுசயா. சார்கானியில் அவர் மட்டுமே நிலம் இழக்கவில்லை. 3250 பேர் வசிக்கும் கிராமத்தில் 900 பேர் பழங்குடிகள். 900த்தில் 200 பேர் நிலங்களை இழந்திருக்கின்றனர். ஜனவரி தொடக்கத்திலிருந்து அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வெளியே தினமும் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“ஒரு மாதமாக பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோ. எங்கள் கால்கள் வலிக்கின்றன,” என்கிறார் அனுசயா அவரின் பாதங்களை தேய்த்துக் கொண்டே. ஜனவரி 23ம் தேதி இரவு 9 மணி. அவருடைய இரவுணவான கம்பு ரொட்டிகளும் பூண்டு சட்னியையும் உண்டு முடித்தார். அவரும் சில பெண்களும் கந்தாதேவி கோவிலில் இரவை கழிக்க படுக்கைகளை விரித்தனர்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க நாசிக்கிலிருந்து மும்பைக்கு செல்லும் வாகன ஊர்வலத்தில் அவர்கள் இருந்தனர். அவர்களின் போராட்டங்களை முன்னிறுத்த போகிறார்கள்.





