ஒரு காற்றுக்கால மதியவேளை, உஷா ஷிண்டே அவரது பேரனுடன், அவர்கள் ஆற்றை கடக்க பயன்படுத்தும் தெப்பம் போன்ற படகில் ஏறினார். அந்த படகு சரியான நிலையில் இல்லாததால், அவர் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே கவிழ்ந்தது. இதனால் உஷா நிலை குலைந்துவிட்டார். குழந்தையுடன் ஆற்றில் விழுந்தவுடன் அவருக்கு உயிர் பயம் ஏற்பட்டுவிட்டது.
இது, கோவிட் – 19ன் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவிக்கொண்டிருந்த இந்தாண்டு மார்ச் மாத்தில் நடைபெற்றது. உஷாவின் 4 வயது பேரன் ஷாம்பூவுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. “கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என நான் அஞ்சினேன்“ என்று உஷா (65) கூறுகிறார். “அவனின் பெற்றோர்கள் மேற்கு மஹாராஷ்ட்ராவில் ஒரு கரும்பு ஆலையில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். எனவே நான் அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக ஓடினேன்“ என்று மேலும் கூறுகிறார்.
அதற்காக மருத்துவமனை செல்வதற்கு அவர்கள் ஆற்றை கடக்க வேண்டும். அதற்கு அப்பகுதி மக்கள் தற்காலிக தெப்பம் போன்ற படகை பயன்படுத்தி வந்தனர். “என்னால் சரியாக நிற்க முடியாமல் நான் ஷாம்பூவுடன் ஆற்றில் விழுந்துவிட்டேன். எனக்கு நீச்சலும் தெரியாது. நல்லவேளையாக அருகில் இருந்த எனது சகோதரரின் மகன் ஆற்றில் உடனடியாக குதித்து நாங்கள் கரை ஏறுவதற்கு உதவினார். நான் அஞ்சினேன். என்னால் எனது பேரனுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று நான் நினைத்தேன்“ என்று உஷா கூறுகிறார்.
மஹாராஷ்ட்ராவின் பீட் மாவட்டத்தில் வின்சர்ணா ஆற்றின் கரையில் உஷாவின் சவுடாடா கிராமம் உள்ளது. கண்கவர் ராமேஸ்வர் நீர்வீழ்ச்சி, 225 அடி உயரத்தில் இருந்து இந்த ஆற்றில் விழுகிறது. அந்த நீர்வீழ்ச்சி இவர்களின் கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பட்டோடா தாலுகாவில் உள்ளது. இந்த ஆறு சவுடாடாவை இரண்டாகப் பிரிக்கிறது. கிராமத்தின் முக்கிய பகுதியில் இருந்து சில இடங்களை பிரிக்கிறது. சவுடாடாவின் பிரிந்துள்ள ஷிண்டே வாஸ்டி பகுதியில் பாலம் இல்லாததால், மக்கள் கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை ஆற்றைக்கடந்தே எல்லாவற்றிற்கும் செல்ல வேண்டியுள்ளது.









