மீனா மெஹரின் அன்றாடம் எப்போதும் பரபரப்பானது. தனது சொந்த கிராமமான சத்பதியில் படகு உரிமையாளர்களிடம் மொத்த சந்தையில் மீன்களை ஏலம் எடுக்க அதிகாலை 4 மணிக்குச் செல்கிறார். காலை 9 மணியளவில் திரும்பும் அவர், ஓரிரு வாரங்களில் விற்பதற்காக வீட்டின் பின்புறம் மீன்களுக்கு உப்பு வைத்து தெர்மகோல் பெட்டிகளில் உலர வைக்கிறார். கருவாடுகளை விற்பதற்காக 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்கார் சில்லறை சந்தைக்கு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் செல்கிறார். சரக்கு விற்காமல் தேங்கிவிட்டால் அவற்றை சத்பதி சில்லறை சந்தையில் விற்க முயல்கிறார்.

ஏலம் விடும் படகுகளின் எண்ணிக்கை குறைவதால், கருவாட்டின் அளவும் குறைந்து வருகிறது. “மீன்கள் இல்லை, இப்போது எதை விற்பது?” என கேட்கிறார் கோலி சமூகத்தைச் சேர்ந்த (ஓபிசி பிரிவில் உள்ளது) 58 வயது மீனா. மழைக்காலத்திற்கு பிறகு அவர் தொழிலை பன்முகப்படுத்தி சத்பதி மொத்த சந்தையில் படகு உரிமையாளர்கள் அல்லது வியாபாரிகளிடமிருந்து புத்தம்புதிய மீன்களை வாங்கி விற்று சம்பாதிக்க முயல்கிறார். (அவர் எனினும் தனது வருவாய் குறித்த விவரங்களை நம்மிடம் தெரிவிக்கவில்லை.)

குடும்பத்தின் தேவைகளைத் தீர்க்க அவரது 63 வயது கணவரான உல்ஹாஸ் மெஹரும் அதிகம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இவர் அவ்வப்போது ஓஎன்ஜிசி கணக்கெடுப்பு படகுகளில் தொழிலாளியாக, மாதிரி சேகரிப்பாளராக செல்கிறார். எனினும் மும்பையில் பெரிய படகுகளில் ஆண்டில் இரண்டு மாதங்கள் செய்து கொண்டிருந்த வேலையை 4-6 மாதங்கள் என விரிவுப்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் ‘கோல்டன் பெல்ட்’ என அழைக்கப்படுகிறது கடலோர கிராமமான சத்பதி. வங்கவராசி (பாம்பே வாத்து மீன்) எனும் புகழ்பெற்ற மீனுக்காகவும், இனப்பெருக்கத்திற்கான கடல் படுக்கைக்கும் அறியப்படுகிறது. ஆனால் சத்பதி – தஹானு மண்டலத்தில் 1979ஆம் ஆண்டு மிக அதிக அளவாக 40,065 டன் இருந்த வந்தவராசி மீன் வரத்து 2018ஆம் ஆண்டு மாநில உற்பத்தியில் 16,576 டன்கள் என மருகிவிட்டது.

With fewer boats (left) setting sail from Satpati jetty, the Bombay duck catch, dried on these structures (right) has also reduced
PHOTO • Ishita Patil
With fewer boats (left) setting sail from Satpati jetty, the Bombay duck catch, dried on these structures (right) has also reduced
PHOTO • Ishita Patil

இடது: 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சத்பதி மச்சிமார் விவித் கார்யகாரி சஹாகாரி சன்ஸ்தாவின் கட்டுதளத்தில் முதல் இயந்திர படகு கட்டப்பட்டது. வலது: இந்த ‘கோல்டன் பெல்ட்’ எனப்படும் கடல்படுக்கை மீன்களின் இனப்பெருக்கத்திற்கு அறியப்படுகிறது. இப்போது இங்கு சில மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே உள்ளன.

தொழிற்சாலை மாசுபாடு, இழுவை படகுகள், பை மீன் வலைகளைக் கொண்டு அதிகளவில் மீன்பிடித்தல் (அடர்ந்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் பெரிய வலைகளால் சிறிய மீன்களும் சிக்குகின்றன. இது அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறது) போன்ற பல காரணங்கள் உள்ளன.

“நம் கடல் எல்லைக்குள் இழுவை படகுகள் அனுமதிக்கக் கூடாது, ஆனால் அவர்களை யாரும் தடுப்பதில்லை,” என்கிறார் மீனா. “மீன்பிடித்தல் என்பது சமூகம் சார்ந்த தொழிலாக இருந்தது. இப்போது யார் வேண்டுமானாலும் படகு வாங்கலாம். இதுபோன்ற பெரிய படகுகள் மீன் முட்டைகள், சிறிய மீன்களையும் கொல்வதால் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.”

முன்பெல்லாம் மீனா போன்ற ஏலம் எடுப்பவர்களை மீன் விற்பனையின்போது உள்ளூர் படகு உரிமையாளர்கள் அழைப்பர். இப்போது கெண்டை, கெலுத்தி, வௌவால், வந்தவராசி மீன்கள் நிறைந்த படகுகள் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஏலத்தில் எட்டு படகுகள் வரை இருந்தது. இப்போது இரண்டு படகுகள் என சரிந்துள்ளது. பல படகு உரிமையாளர்களும் மீன்பிடித் தொழிலை நிறுத்திவிட்டனர்.

“1980களில், சத்பதியில் [வந்தவராசி மீன்களுக்காக] 30-35 படகுகள் வரை இருந்தன, இப்போது [2019 மத்தியிலிருந்து] இந்த எண்ணிக்கை 12ஆக சரிந்துள்ளது,” என்று சத்பதி மீனவர் சர்வோதயா கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேசிய மீனவர் அமைப்பின் தலைவருமான நரேந்திரா பாட்டீல் உறுதி செய்கிறார்.

At the cooperative society ice factory (left) buying ice to pack and store the fish (right): Satpati’s fisherwomen say the only support they receive from the co-ops is ice and cold storage space at nominal rates
PHOTO • Ishita Patil
At the cooperative society ice factory (left) buying ice to pack and store the fish (right): Satpati’s fisherwomen say the only support they receive from the co-ops is ice and cold storage space at nominal rates
PHOTO • Ishita Patil

கூட்டுறவு சங்க ஆலையில் (இடது) மீன்களை பாதுகாத்து அடைப்பதற்கு தண்ணீர் கட்டிகளை வாங்குகின்றனர். வலது: கூட்டுறவு சங்கங்களில் தங்களுக்கு கிடைக்கும் ஒரே உதவி இது மட்டுமே என்கின்றனர் சத்பதியின் மீனவப் பெண்கள்

இச்சரிவை சத்பதியில் இப்போது மொத்தமுள்ள 35,000 மக்கள்தொகை (2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 17,032ஆக இருந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது) கொண்ட மீனவ சமூகமும் சந்திப்பதாக கிராம ஊராட்சியும், கூட்டுறவு சங்கங்களும் மதிப்பிட்டுள்ளன. 1950ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மீனவர் தொடக்கப்பள்ளி (முறையான கல்விப் பாடத்திட்டம்) 2002ஆம் ஆண்டு சில்லா பரிஷத்திற்கு மாற்றப்பட்டது. அதுவும் இப்போது எண்ணிக்கையில் சரிந்து வருகிறது. இதேப்போன்று 1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கடல்வாழ் மீன்பிடி பயிற்சி மையம் அளித்து வந்த சிறப்பு படிப்புகளும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன. இரண்டு மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. படகு உரிமையாளர்களுக்கும் மீன் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகவும், மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுக்கான கடன்கள், டீசல் மீதான மானியங்கள் மற்றும் பிற சேவைகளின் ஆதாரமாகவும் இவை செயல்படுகின்றன.

ஆனால் சத்பதி மீனவப் பெண்கள் அரசிடமோ, கூட்டுறவு சங்கங்களிலோ எவ்வித உதவும் கிடைப்பதில்லை என்கின்றனர் – மலிவு விலைக்கு குளிர்பதன பெட்டிகளும், தண்ணீர் கட்டிகளும் மட்டுமே வழங்குகின்றன என்கின்றனர்.

“ஒவ்வொரு மீனவப் பெண்ணுக்கும் தொழில் மேம்பாட்டிற்காக அரசு குறைந்தது ரூ. 10,000 நிதியுதவி அளிக்க வேண்டும். மீன் வாங்கி விற்பதற்கு எங்களிடம் பணமில்லை,” என்கிறார் 50 வயது அனாமிகா பாட்டீல். கடந்த காலங்களில், குடும்ப உறுப்பினர்கள் பிடித்து வரும் மீன்களை பெண்கள் விற்று வருவார்கள். இப்போது வியாபாரிகளிடம் கடன் அல்லது பணம் வாங்க வேண்டி உள்ளது. அதுவும் அவர்களால் முடிவதில்லை.

சிலர் வட்டிக்கு ரூ.20,000 - ரூ.30,000 வரை கடன் வாங்குகின்றனர். “நிறுவன கடன் எங்களுக்கு கிடைக்காது, ஏதேனும் நகை அல்லது வீடு அல்லது நிலத்தை தான் நாங்கள் அடகு வைக்க வேண்டும், ”என்கிறார் படகு உரிமையாளரிடம் ரூ.50,000 கடன் பெற்றுள்ள அனாமிகா.

Left: Negotiating wages with a worker to help her pack the fish stock. Right: Vendors buying wam (eels) and mushi (shark) from boat owners and traders
PHOTO • Ishita Patil
Left: Negotiating wages with a worker to help her pack the fish stock. Right: Vendors buying wam (eels) and mushi (shark) from boat owners and traders
PHOTO • Ishita Patil

இடது: மீன்களை கட்டுவதற்கு தொழிலாளியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. வலது: வந்தவராசி கருவாடு உலர்த்தப்படும் இடங்களில் அவற்றின் எண்ணிக்கையும் அருகி வருகிறது

சில மீனவப் பெண்கள் இந்த வணிகத்திலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டனர் அல்லது பகுதி நேரமாக இதைச் செய்கின்றனர். “மீன்களின் வரத்து குறைவால், வந்தவராசி கருவாடு செய்யும் பணியில் ஈடுபடும் மீனவப் பெண்கள் வேறு தொழிலுக்குச் செல்கின்றனர். இப்போது அவர்கள் ஏதேனும் வேலை தேடி எம்ஐடிசியில் [மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி நிறுவனம்] அல்லது பல்காருக்குச் செல்கின்றனர்,” என்கிறார் சத்பதி மீனவர் சர்வோதயா கூட்டுறவு சங்கத்தின் தலைவரான கேத்தன் பாட்டீல்.

“சத்பதியில் வந்தவராசி மீன்கள் நிறைந்திருக்கும். வீட்டுக்குள் மீன் சரக்குகள் நிறைந்திருப்பதால் வீடுகளுக்கு வெளியே நாங்கள் உறங்குவோம். மீன்வரத்து குறையத் தொடங்கியதும், மிகவும் கடினமாகிவிட்டது [போதிய அளவு சம்பாதிப்பதில்] நாங்கள் வேறு வேலைகளுக்கு மாற்றிக் கொள்கிறோம்,” என்கிறார் சுமார் 15 ஆண்டுகளாக பல்காரில் உள்ள மருந்து நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வரிசையில் பொட்டலம் கட்டும் பணிகளையும் செய்யும் ஸ்மிதா தாரே. 10 மணி நேர பணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் என வேலை செய்து அவர் மாதந்தோறும் சுமார் ரூ.8,000 சம்பாதிக்கிறார். அவரது கணவரும் இப்போது மீன் பிடிப்பதில்லை, பல்கார் அல்லது பிற இடங்களில் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் இசைக்குழுவினருடன் சேர்ந்து டிரம்ஸ் வாசிக்கிறார்.

பல்கார் நகரம் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காலை வேளைகளில் பெண்கள் வேலைக்குச் செல்வதற்காக உள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் வரிசையாக நிற்கின்றனர்.

மீனாவின் மருமகளான 32 வயது ஷூபாங்கி பிப்ரவரி 2020 முதல் பல்கார் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஆலையில் 10 மணி நேர பணிக்கு ரூ.240 அல்லது 12 மணி  நேர வேலைக்கு ரூ.320 வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை என்று பெறுகிறார். அங்கு அவர் குளிர்விப்பான்கள், மிக்சர்கள் மற்றும் பிற பொருட்களை பொட்டலம் கட்டும் பணிகளைச் செய்கிறார். (ஷூபாங்கியின் கணவரான 34 வயது பிரஜ்யோத் மீன்களை பதப்படுத்துதல் பணிக்கு மீனாவிற்கு உதவி வருகிறார், மீன்வள கூட்டுறவு சங்கத்திலும் வேலை செய்கிறார், கூட்டுறவு அமைப்புகளும் நெருக்கடியில் இருப்பதால், நிரந்தர பணியை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலும் இருக்கிறார்.)

Left: The Satpati fish market was shifted from a crowded location to this open space near the jetty during the pandemic to maintain distancing. Right: In many families here, the women have taken up making jewellery on a piece-rate basis to supplement falling incomes
PHOTO • Chand Meher
Left: The Satpati fish market was shifted from a crowded location to this open space near the jetty during the pandemic to maintain distancing. Right: In many families here, the women have taken up making jewellery on a piece-rate basis to supplement falling incomes
PHOTO • Ishita Patil

இடது: சத்பதியில் மீன் வணிகத்திலிருந்து பல பெண்களும் விலகிவிட்டனர்; சிலர் பல்காரில் உபகரணங்களைக் கோர்க்கும் வேலைக்குச் செல்கின்றனர், மற்றவர்கள் நகைகள் செய்யும் பணியில் உள்ளனர். வலது: பாசி மணிகளைக் கொண்டு பல மணி நேரம் வேலை செய்வதால் மீனாவின் கண்கள் பாதிக்கப்படுகின்றன

வெள்ளைப் பாசி மணிகள், பொன்னிற கம்பி, நகவெட்டி, பெரிய வட்ட சல்லடை, கண் கண்ணாடியைக் கொண்டு மீனா தினமும் 2-3 மணி நேரம் நகைகள் செய்கிறார். கம்பியில் பாசி மணிகளைக் கோர்த்து கொக்கியைக் கொண்டு இணைக்க வேண்டும். கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணின் மூலம் இந்த வேலையை அவர் செய்து வருகிறார். இதில் ஒருவாரம் வேலை செய்து முடிக்கப்பட்ட பாசி மணிகள் 250 கிராமிற்கு ரூ.200 – 250 பெறுகிறார். இத்தொகையிலிருந்து ரூ.100 எடுத்து மீண்டும் அதற்கான மூலப் பொருட்களை வாங்குகிறார்.

43 வயதாகும் பாரதி மெஹரின் குடும்பத்திற்குச் சொந்தமாக படகு உள்ளது. 2019ஆம் ஆண்டு மத்தியில் மீன் வணிகத்தில் வருவாய் வீழத் தொடங்கியதும் அவர் அழகுசாதன பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் முடிவுக்கு வந்தார். ஏலம் விடுதல், மீன் விற்றலுடன் கூடுதலாக மீனாவைப் போன்று பாரதியும், அவரது மாமியாரும் செயற்கை நகைகளைச் செய்கின்றனர்.

சத்பதியில் பலரும் வாழ்வாதாரத்திற்காக வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது. “சில ஆண்டுகளில், நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு வௌவால் அல்லது வந்தவராசி மீன்கள் எப்படி இருக்கும் என்பதை வரைந்துதான் காட்ட வேண்டி இருக்கும், இங்கு எதுவும் கிடைப்பதில்லை,” என்கிறார் பிஇஎஸ்டியின் ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்று இப்போது உறவினருக்கு சொந்தமான சிறிய படகில் மீன் பிடிக்கும் வேலையைச் செய்து வரும் சந்திரகாந்த் நாயக்.

பழைய நினைவுகளை வைத்துக் கொண்டு மீன்பிடித் தொழிலில் தொடர பலரும் விரும்பவில்லை. “என் பிள்ளைகள் படகில் ஏற நான் விரும்பவில்லை. சிறிய வேலை [மீன்பிடி தொடர்புடைய] என்றால் பரவாயில்லை, நான் படகில் அவர்களை அழைத்துச் செல்வதில்லை,” என்கிறார் தனது தந்தையிடம் படகை பரம்பரை சொத்தாக பெற்றுள்ள 51 வயது ஜிதேந்திரா தாமோர். இக்குடும்பத்திற்கு சத்பதியில் சொந்தமாக மீன்வலை கடை இருப்பதால் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. “மீன்வள தொழிலால்தான் எங்களால் எங்களது பிள்ளைகள் [20 மற்றும் 17 வயது] படிக்க உதவியது,” என்கிறார் அவரது மனைவியான 49 வயது ஜூஹி தாமோர். “இவ்வகையில் எங்கள் வாழ்க்கை செல்கிறது, அவர்கள் எவ்வகையிலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை.”

இக்கட்டுரையில் வரும் பல நேர்காணல்கள் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை.

முகப்புப் படம்: 2020, மார்ச் 9ஆம் தேதியன்று நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது கடலுக்குச் செல்லும் தங்கள் குடும்ப ஆண்களை பாதுகாக்குமாறும், கடல்வளத்தை தருமாறும் கடல் அன்னையிடம் வணங்கும் சத்பதி பெண்கள். இப்பண்டிகையின் போது படகுகளும் கூட அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

தமிழில்: சவிதா

Ishita Patil

Ishita Patil is a Research Associate at the National Institute of Advanced Studies, Bengaluru.

Other stories by Ishita Patil
Nitya Rao

ਨਿਤਯਾ ਰਾਓ, ਯੂਕੇ ਦੇ ਨੋਰਵਿਚ ਵਿਖੇ ਸਥਿਤ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਆਫ਼ ਈਸਟ ਅੰਗਲਿਆ ਵਿੱਚ ਜੈਂਡਰ ਐਂਡ ਡਿਵਲਪਮੈਂਟ ਦੀ ਪ੍ਰੋਫ਼ੈਸਰ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੇ ਪਿਛਲੇ ਤਿੰਨ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਵੱਧ ਸਮੇਂ ਤੋਂ, ਔਰਤਾਂ ਦੇ ਅਧਿਕਾਰਾਂ, ਰੁਜ਼ਗਾਰ ਅਤੇ ਸਿੱਖਿਆ ਦੇ ਖੇਤਰ ਵਿੱਚ ਇੱਕ ਖ਼ੋਜਾਰਥੀ, ਅਧਿਆਪਕ ਅਤੇ ਵਕੀਲ ਵਜੋਂ ਵਿਆਪਕ ਤੌਰ 'ਤੇ ਕੰਮ ਕੀਤਾ ਹੈ।

Other stories by Nitya Rao
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha