மகாராஷ்டிர நாசிக் மாவட்டத்திலிருக்கும் வீட்டிலிருந்து 2019ம் ஆண்டில் செம்மறி மேய்க்கும் வேலைக்கு பாருவை அவரது அப்பா அனுப்பியபோது பாருவுக்கு 7 வயது.
மூன்று வருடங்கள் கழித்து ஆகஸ்டு மாத பிற்பகுதியில், குடிசைக்கு வெளியே அவரை அவரது பெற்றோர் கண்டெடுத்தனர். மூர்ச்சையாகி இருந்த அவர், ஒரு போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து நெறிக்கப்பட்ட தடங்கள் இருந்தன.
“அவளின் கடைசி மூச்சு வரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்ன ஆனது என அவளை கேட்க முயன்றோம், ஆனால் அவளால் பேச முடியவில்லை,” என்கிறார் பாருவின் தாயான சவிதாபாய் கண்ணீரை துடைத்துக் கொண்டே. “யாரோ அவளுக்கு சூனியம் வைத்துவிட்டார்களேன நாங்கள் நினைத்தோம். எனவே அவளை அருகே இருந்த மொரா மலைக்கோவிலுக்கு (மும்பை - நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகில்) அழைத்துச் சென்றோம். பூசாரி அவளுக்கு திருநீறு பூசினார். அவள் நினைவுதிரும்ப எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் நினைவு திரும்பவில்லை,” என நினைவுகூருகிறார் சவிதாபாய். அவர் கண்டெடுக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 2, 2022 அன்று, நாசிக் மருத்துவமனையில் காயங்களால் பாரு இறந்து போனார்.
பாரு வேலை பார்த்திருந்த காலத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தைப் பார்க்க வருவார். அவரை கூட்டிச் சென்ற தரகரால் ஒன்றரை வருடங்களுக்கு முன் அவர் வீட்டுக்குக் கூட்டி வரப்பட்டார். “7 அல்லது 8 நாட்கள் வரை அவள் எங்களுடன் வாழ்ந்தாள். எட்டாம் நாள் கழிந்ததும் அந்த நபர் வந்து பாருவை மீண்டும் அழைத்துச் சென்றார்,” என பாரு மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த நாள் தரகருக்கு எதிராக சவிதாபாய் கொடுத்த காவல்துறை புகாரில் தெரிவித்திருந்தார்.
கொலை முயற்சிக்கான வழக்கு, தரகருக்கு எதிராக நாசிக் மாவட்டத்தின் கோடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. “அவர் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்,” என்கிறார் சஞ்சய் ஷிண்டே. கொத்தடிமைகளை விடுவிக்க உதவும் ஷ்ரமஜீவி சங்காதனா அமைப்பின் மாவட்டத் தலைவர் அவர். செப்டம்பர் மாதத்தில் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அகமது நகரைச் (பாரு செம்மறி மேய்த்த மாவட்டம்) சேர்ந்த நான்கு மேய்ப்பர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
மும்பை - நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகே கட்காரி பழங்குடிகள் வசிக்கும் குக்கிராமத்துக்குள் தரகர் வந்த நாளை சவிதாபாய் நினைவுகூருகிறார். “அவர் என் கணவரை குடித்து போதையாக்கி, 3000 ரூபாய் கொடுத்து, பாருவை அழைத்துச் சென்று விட்டார்,” என்கிறார் அவர்.
“பென்சில் பிடித்து எழுதத் தொடங்க வேண்டிய வயதில் வறண்ட நிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் அவள் நீண்ட தூரங்களுக்கு நடந்தாள். குழந்தைத் தொழிலாளராக கொத்தடிமை முறையில் அவர் மூன்று வருடங்களுக்கு பணியாற்றினாள்,” என்கிறார் சவிதாபாய்.
பாருவின் சகோதரரான மோகனும் 7 வயதானபோது வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கும் அவரது தந்தை 3000 ரூபாய் பெற்றுக் கொண்டார். மேய்ப்பருடன் பணிபுரிந்த அனுபவத்தை தற்போது 10 வயதில் இருக்கும் மோகன் விளக்குகிறார். “ஆடுகளையும் செம்மறிகளையும் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வேன். 50-60 செம்மறிகளும் 5-6 ஆடுகளும் பிற விலங்குகளும் அவரிடம் இருந்தன,” என்கிறார் அவர். வருடத்துக்கு ஒருமுறை மேய்ப்பர் மோகனுக்கு சட்டையும் முழுக் கால்சட்டையும் அரைக் கால்சட்டையும் கைக்குட்டையும் காலணிகளும் எடுத்துக் கொடுப்பார். அவ்வளவுதான். சில நேரங்களில் ஏதேனும் வாங்கிச் சாப்பிடவென 5 அல்லது 10 ரூபாய் கொடுக்கப்படும். “நான் வேலை பார்க்கவில்லை எனில், செம்மறிகளின் உரிமையாளர் என்னை அடிப்பார். வீட்டுக்கு அனுப்பும்படி அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். ‘உன் அப்பாவை அழைக்கிறேன்’ என சொல்வார். ஆனால் அழைத்ததே இல்லை.”
சகோதரியைப் போல மோகனும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை குடும்பத்தைப் பார்க்க வருவார். “அவனுடைய உரிமையாளர் வீட்டுக்குக் கொண்டு வந்து அவனை விடுவார். அடுத்த நாள் அழைத்துச் சென்றுவிடுவார்,” என்கிறார் சவிதாபாய். அவர் இரண்டாம் முறையாக மகனை பார்த்தபோது அவர்களது மொழியை அவர் மறந்திருந்தார். “அவனுக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை.”
“என் குடும்பத்திலுள்ள எவருக்கும் வேலை இல்லை. சாப்பிடவும் எதுவுமில்லை. எனவே குழந்தைகளை அனுப்பி வைத்தோம்,” என விளக்குகிறார் அதே கட்காரி கிராமத்தில் வசிக்கும் ரீமாபாய். அவரது இரண்டு மகன்களும் கூட செம்மறி மேய்க்கும் வேலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். “அவர்கள் வேலை பார்த்து எங்களுக்கு முழு உணவு கிடைக்கும் என நினைத்தோம்.”
ரீமாபாயின் வீட்டிலிருந்து குழந்தைகளை ஒரு தரகர் அழைத்துச் சென்று அகமது நகர் மாவட்ட பார்னெர் ஒன்றியத்தின் மேய்ப்பர்களுடன் சேர்த்து விட்டார். இரு பக்கமும் பணம் கைமாறின. குழந்தைகளை எடுத்துச் செல்ல பெற்றோருக்கு தரகர்கள் பணம் கொடுத்தனர். பணியாளர்களை கொண்டு வரவென தரகருக்கு மேய்ப்பர்கள் பணம் கொடுத்தனர். சில இடங்களில் செம்மறியோ ஆடோ கூட கொடுக்கப்படுவதாக உறுதி தரப்படும்.
ரீமாபாயின் மகன்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு பார்னெரில் இருந்தனர். செம்மறிகளை மேய்த்து உணவளித்து கூடவே கிணற்றில் தண்ணீர் எடுத்து துணி துவைத்து ஆட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தும் வேலையையும் செய்தனர்.ஒரே ஒருமுறை மட்டும் வீட்டுக்கு சென்று வர அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் விழித்து வேலை செய்யத் தொடங்காவிட்டால் அடிப்பார்கள் என்கிறார் இளைய மகன் ஏக்னாத். “முதலாளி என் முதுகிலும் காலிலும் அடிப்பார். வசைபாடுவார். எங்களை பசியிலேயே வைத்திருப்பார். நாங்கள் மேய்க்கும் செம்மறிகள் விவசாய நிலத்துக்குள் இறங்கி விட்டால் விவசாயியும் செம்மறி உரிமையாளரும் சேர்ந்து கொண்டு எங்களை அடிப்பார்கள். இரவு வரை நாங்கள் வேலை பார்க்க வேண்டும்,” என அவர் பாரியிடம் கூறுகிறார். அவரது இடது கை மற்றும் கால் ஆகியவற்றில் நாய் கடித்தபோது கூட எந்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படாமல் விலங்குகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக ஏக்நாத் கூறுகிறார்.
ரீமாபாய் மற்றும் சவிதாபாய் குடும்பத்தினர், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவாக மகாராஷ்டிராவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்காரி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. வருமானத்துக்கு கூலி வேலைதான். செங்கல் சூளைகளிலும் கட்டுமான தளங்களிலும் கிடைக்கும் வேலைகளுக்காக இடம்பெயர்ந்து செல்வார்கள். குடும்பம் உண்ணுமளவுக்குக் கூட வருமானம் கிட்டாமல், பலர் குழந்தைகளை மேய்ப்பர்களிடம் மேய்க்கும் வேலை பார்க்க அனுப்புகின்றனர். மேய்ப்பர்கள், அரை மேய்ச்சல் பழங்குடியான தங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
10 வயது பாருவின் துர்மரணம்தான் அப்பகுதியில் குழந்தைகளை பணிக்கமர்த்தும் விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. விளைவாக செப்டம்பர் 2022-ல் சங்கம்னெர் மற்றும் பார்னெர் கிராமங்களை சேர்ந்த 42 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஷ்ரமஜீவி சங்காதனா மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. நாசிக் மாவட்டத்தின் இகாத்புரி மற்றும் திருமபகேஷ்வர் ஒன்றியங்கள் மற்றும் அகமதுநகர் மாவட்டத்தின் அகோரா ஒன்றியத்தையும் சேர்ந்த குழந்தைகள் அவர்கள். செம்மறி மேய்க்க பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அவர்கள் என்கிறார் சஞ்சய் ஷிண்டே. அவர்களில் பாருவின் சகோதரர் மோகனும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஏக்நாத்தும் அந்த கிராமத்தை சேர்ந்த 13 குழந்தைகளும் அடக்கம்.
கோடிக்கு அருகே அமைந்திருக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த 26 கட்காரி குடும்பங்கள் கடந்த 30 வருடங்களாக இங்கு வசித்து வருகின்றனர். அவர்களின் குடிசைகள் தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. புற்கள் அல்லது பிளாஸ்டிக் கூரை வீடுகளில் வேயப்பட்டிருந்தன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு குடிசையில் வசிக்கின்றனர். சவிதாபாயின் குடிசைக்கு கதவு இல்லை. மின்சாரமும் இல்லை.
“கிட்டத்தட்ட 98 சதவிகித கட்காரி குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. பெரும்பாலானோருக்கு சாதிச் சான்றிதழ் கிடையாது,” என்கிறார் மும்பை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான டாக்டர் நீரஜ் ஹடெகர். “வேலைவாய்ப்பு குறைவு. எனவே மொத்த குடும்பமும் இடம்பெயர்ந்து செங்கல் சூளை வேலைகளையும் குப்பை சேகரிப்பையும் இன்னும் பிற வேலைகளையும் செய்ய செல்கின்றனர்.”
2021ம் ஆண்டில் பழங்குடி விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சகத்தின் ஆதரவில், மகாராஷ்டிர கட்காரி மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளை அறிந்து கொள்வதற்கான ஆய்வொன்றை டாக்டர் ஹடெகர் நடத்தினார். ஆய்வு செய்யப்பட்ட மக்களின் 3 சதவிகித பேரிடம் மட்டும்தான் சாதி சான்றிதழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலரிடம் ஆதார் அட்டையோ குடும்ப அட்டையோ கூட இல்லை. “கட்காரிகள் அரசாங்கத்தின் வீட்டு வசதி திட்டங்களை பெற முடியும். அவர்கள் வாழும் இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியை அரசாங்கம் தொடங்க வேண்டும்,” என்கிறார் ஹடெகர்.
*****
மகன்கள் திரும்ப வந்த பிறகு, அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென ரீமாபாய் விரும்புகிறார். “இது வரை எங்களிடம் குடும்ப அட்டை இல்லை. எங்களுக்கு அந்த விஷயங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இந்த இளைஞர்கள் படித்தவர்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு அட்டையை வாங்கிக் கொடுத்தார்கள்,” என ஷ்ரமஜீவி சங்கத்தனா அமைப்பின் மாவட்டச் செயலாளரான சுனில் வாகை சுட்டிக் காட்டுகிறார். குழந்தைகளை மீட்ட குழுவில் ஒருவர் அவர். கட்காரி சமூகத்தைச் சேர்ந்த சுனில், அவரது சமூக மக்களுக்கு உதவ ஆர்வத்துடன் இருக்கிறார்.
“பாருவின் நினைவில் உணவு வைக்க வேண்டும். சமைக்க வேண்டும்,” என பாருவின் மரணத்துக்கு அடுத்த நாள் சந்தித்தபோது சவிதாபாய் கூறினார். குடிசை அருகே ஒரு அடுப்பு செய்து விறகுகளில் தீ மூட்டினார். இரண்டு கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தார். இறந்து போன மகளுக்கு ஒரு கவளமும் மிச்ச உணவு மூன்று குழந்தைகளுக்கும் கணவருக்கும். வீட்டில் அரிசி மட்டும்தான் இருக்கிறது. 200 ரூபாய் நாட்கூலி பெறும் அவரது கணவர் சோற்றுடன் அவர்கள் சாப்பிட ஏதேனும் கொண்டு வருவார் என நம்பிக்கையுடன் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.
குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பெயர்கள் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டிருக்கின்றன.
தமிழில் : ராஜசங்கீதன்