Dispossessed Koya tribals in Rampa. The land issue is exploding in West Godavari district and simmering here in the East ராம்பாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கோயா பழங்குடியினர். நிலம் சார்ந்த போராட்டங்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வெடித்திருக்கின்றன. கிழக்கு கோதாவரியிலும் அவை கனன்று கொண்டிருக்கின்றன.


இடம்: ராஜாவோம்மங்கி காவல் நிலையம். நாங்கள் ஜீப்பை விட்டு இறங்கியதுமே, காவலர்கள் அவசர அவசரமாகத் தங்களுடைய இடங்களை நோக்கி பீதியோடு ஓடுகிறார்கள். இரும்புக்கோட்டை போன்ற பாதுகாப்போடு அந்தக் காவல் நிலையம் அச்சுறுத்துகிறது. காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. சிறப்புக் காவல் படையினர் காவல்நிலையத்தைக் கண் இமைக்காமல் காவல் காக்கிறார்கள். நாங்கள் வெறும் கேமிராவை ஆயுதமாகக் கொண்டு வந்திருப்பதைக் கண்டதும் பதற்றம் சற்றே குறைகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் இப்பகுதியில் காவல் நிலையங்களைப் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இரும்பு கோட்டையின் உட்பகுதியில் இருந்த தலைமை காவலர் “நீங்கள் யார்?” எனக் கவலையோடு கேட்கிறார். பத்திரிகையாளர்கள் எனத் தெரிந்ததும் சற்றே இயல்புநிலைக்கு வருகிறார்கள். “என்னங்க இது வேடிக்கையா இருக்கு? இந்தக் காவல் நிலையத்தைக் கடைசியா தாக்கி 75 வருஷம் ஆகிடுச்சு. இன்னுமா பயந்துகிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டேன்.

பெரிய தத்துவ ஞானி போல, “யாருக்கு தெரியும்? இன்று மதியம் கூட மீண்டும் தாக்குதல் நடக்கலாம்.” என்றார் அவர்.

ஆந்திர பிரதேசத்தில் பழங்குடியினர் வாழும் பகுதிகள், ‘ஏஜென்சி’ பகுதி என்று அழைக்கப்படுகின்றன. பழங்குடியின மக்கள் ஆகஸ்ட் 1922-ல் புரட்சி செய்தார்கள். உள்ளூர் கலகம் போல முதலில் தோன்றிய அந்த எழுச்சி வெகு சீக்கிரத்தில், தெளிவுமிக்க அரசியல் போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டம் ‘மான்யம் போராட்டம்’ என்று பழங்குடியின மக்களால் அழைக்கப்பட்டது. ஆதிவாசி இனத்தைச் சேராத அல்லூரி ராமச்சந்திர ராஜூ (அவரை அன்போடு சீதாராமா ராஜூ என்பார்கள்) இந்த எழுச்சிக்குத் தலைமை தாங்கினார். பழங்குடியின மக்கள் தங்களுடைய குறைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக மட்டும் போராடவில்லை. 1922 வாக்கில் போராட்டம் ஆங்கிலேய அரசை மொத்தமாக வெளியேற்றும் பெரும் முயற்சியாக உருவெடுத்தது. பழங்குடியின மக்கள் ‘ஆங்கிலேய அரசே வெளியேறு’ என்கிற தங்களின் எண்ணத்தைப் பல்வேறு காவல்நிலையங்களைத் தாக்குவதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அப்படித் தாக்கப்பட்ட காவல் நிலையங்களில் ஒன்று தான் ராஜாவோம்மங்கி காவல் நிலையம்.

75 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயரை எதிர்த்து எந்த எந்தப் பிரச்சனைகளுக்காக எல்லாம் இம்மக்கள் போராடினார்களோ அவற்றில் பெரும்பாலானவை இன்னமும் தீர்ந்த பாடில்லை


Sitarama Raju’s statue in East Godavari

கிழக்குக் கோதாவரியில் உள்ள சீதாராம ராஜுவின் சிலை


சீதாராம ராஜூவின் எதிர்பாராத தாக்குதல்கள் ஆங்கிலேயரை நிலைகுலைய வைத்தன. அவருடைய தலைமையில் நிகழ்ந்த தாக்குதல்கள் வெகு சீக்கிரமே முழுமையான கொரில்லா போராக மாறியது. பழங்குடியின மக்களின் தீரமிகுந்த போர்க்குணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. போராட்டத்தை நசுக்க மலபாரில் இருந்து சிறப்புப் படையைக் களமிறக்கியது. இந்தப் படைகள் காடுகளில் போரிடும் திறமைமிக்கவையாக இருந்தன. மேலும், கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தவும் செய்தன. சீதாராம ராஜூவின் மரணத்தோடு இப்புரட்சி 1924-ல் முடிவுக்கு வந்தது. எனினும், வரலாற்று ஆசிரியர் எம்.வேங்கடரங்கையா எழுதுவதைப் போல, “ஒத்துழையாமை இயக்கத்தை விட ஆங்கிலேய அரசுக்கு பெரும் தலைவலியாக இப்போராட்டம் மாறியது.”

இந்த வருடம் சீதாராம ராஜூவின் நூற்றாண்டு வருடம். போராட்டக் களத்தில் கொல்லப்படுகிற போது அவருக்கு வெறும் 27 வயது தான்.


Sitarama Raju's samadhi in Krishnadevipet கிருஷ்ணதேவி பேட்டையில் உள்ள சீதாராம ராஜூவின் சமாதி


மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கையைக் காலனிய ஆட்சி நாசம் செய்தது. 1870-1900க்கு இடைப்பட்ட முப்பது ஆண்டுகளில் ஆங்கிலேய அரசு பல்வேறு வனப்பகுதிகளை ‘பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக’ அறிவித்தது. ஆதிவாசிகளின் இடம்பெயர் சாகுபடி முறையான ‘போடு’ வை தடை செய்தது. மரக்குச்சிகள், தேன் முதலியவற்றை ஆதிவாசிகள் சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வனத்துறைக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் போனது. அடுத்து, பழங்குடியின மக்களைக் கட்டாயமாகக் கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தார்கள். இந்த வேலைகளுக்குப் பெரும்பாலும் கூலி தரவும் மறுத்தது. ஆதிவாசி மக்களின் நிலங்கள் ஆதிவாசிகள் அல்லாத மக்களின் கைகளுக்குச் சென்றன. பல நேரங்களில் ஆதிவாசிகளின் நிலங்கள் கட்டாயப்படுத்திப் பிடுங்கப்பட்டன. இப்படி ஆதிவாசிகளின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டிருந்த வனப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.

“நிலமில்லாதவர்கள் இப்போது பெருந்துயரத்துக்கு ஆளாகிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நிலைமை எப்படி இருந்ததோ?” என்று ராமயம்மா சொல்கிறார். இவர் ராம்பாவை சேர்ந்த கோயா பழங்குடியின பெண்.

ராஜூ தன்னுடைய போராட்டத்தைத் துவங்கிய இடங்களில் ராம்பாவும் ஒன்று. 15௦ குடும்பங்கள் உள்ள இந்த ஊரில் இப்போதும் ராமயம்மாவின் குடும்பத்தைப் போல அறுபது குடும்பங்கள் நிலமின்றி நடுத்தெருவில் நிற்கின்றன.

இதற்கு முன் நிலைமை இப்படியிருக்கவில்லை. “என் அப்பா, அம்மா பத்து ரூபாய் கடனுக்கு நிலத்தை இழந்தாங்க. வெளியாளுங்க ஆதிவாசிங்க போலக் காட்டிகிட்டு எங்க நிலத்தைப் பிடுங்கிட்டாங்க” என்கிறார் ராமயம்மா. பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இப்பகுதியிலேயே அதிகபட்ச நிலங்களுக்குச் சொந்தக்காரர். இப்பகுதியின் நில உரிமை பத்திரங்களைக் கையாளும் பொறுப்பில் அவர் இருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் நிலங்களைத் தான் விரும்பியபடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டார் என்று மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அவருடைய நிலத்தில் ஒரு நாளைக்கு முப்பது பேர் வேலை பார்க்கிறார்கள். மூன்று ஏக்கர் நிலம் கூடச் சொந்தமாக இல்லாத பழங்குடியின பகுதிகளில் இது நம்ப முடியாத அளவாகும்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நில பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கனன்று கொண்டிருக்கிறது. ஒரு பழங்குடியின முன்னேற்ற அலுவலர், “விடுதலைக்குப் பின்னால் ஆதிவாசிகளின் உரிமைகள் காப்பற்றப்பட்டிருக்க வேண்டும். 1959-ல் ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட ஆந்திர பிரதேச மாநில நில மாற்ற முறைப்படுத்தும் சட்டம் எதையும் மாற்றவில்லை.” 1959-197௦க்கு இடைப்பட்ட காலத்தில் ஆதிவாசிகளின் நிலங்களில் 3௦% அவர்கள் கையை விட்டு போயின. நிலங்களை முறைப்படுத்தவும், பழங்குடியின மக்களின் நிலங்களைக் காக்கவும் கொண்டுவரப்பட்ட சட்டம் எதையும் மாற்றிவிடவில்லை. 1/7௦ முறைப்படுத்தும் சட்டம் என்று அறியப்படும் அச்சட்டத்தை வலிமை இழக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.


In another landless household of Rampa, P. Krishnamma speaks of her family's present-day struggles

ராம்பாவில் நிலமில்லாத இன்னுமொரு குடும்பத்தைச் சேர்ந்த P.கிருஷ்ணம்மா தன்னுடைய குடும்பம் படுகிற பகிர்ந்து கொள்கிறார்


ஆதிவாசிகள், ஆதிவாசிகள் அல்லாதோர் இடையேயான சிக்கலை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆதிவாசிகள் அல்லாத மக்களிலும் ஏழைகள் உள்ளார்கள். எத்தனையோ உரசல்கள் இருந்தாலும், ஆதிவாசிகளின் கோபத்துக்கு அந்த ஏழைகள் இலக்கு இல்லை. இதற்கான வேர்கள் சீதாராம ராஜூவின் போராட்டத்தில் துவங்குகிறது. அந்தப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசு, அதன் அமைப்புகள் ஆகியவற்றை மட்டுமே தாக்க வேண்டும் என்கிற விதியை சீதாராம ராஜூ கடைபிடித்தார். அதை ராம்பாவின் கோயா பழங்குடியினர் ஆங்கிலேயருக்கு எதிரான போராகவே அதைப் பார்த்தார்கள்.

ஆதிவாசிகள் அல்லாதோரில் பணம் படைத்தவர்கள் ஆதிவாசிகள், ஆதிவாசிகள் அல்லாத ஏழைகள் ஆகியோரை சுரண்டுகிறார்கள். 1/7௦ முறைப்படுத்தும் சட்டத்தை வளைக்கப் பல்வேறு வழிகள். ‘இங்கே குத்தகை எடுப்பது மிகுதி’ என்கிறார் கொண்டபள்ளியை சேர்ந்த நிலமில்லாத கோயா பழங்குடியான பொட்டாவ் காமராஜ். குத்தகைக்கு விடப்பட்ட நிலம் அரிதாகத் தான் சொந்தக்காரருக்குத் திருப்பித் தரப்படுகிறது. சில வெளியாட்கள் ஆதிவாசிப் பெண்களை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டு நிலத்தைச் சொந்தமாக்கி கொள்கிறார்கள். சீதாராம ராஜூ போராடிய பகுதிகளில் கொண்டபள்ளியும் ஒன்று. இங்கே போராடிய போராளிகளை ஆங்கிலேய அரசு அந்தமானுக்கு அனுப்பி வைத்தது. அவர்களின் வாரிசுகளை அடித்து நொறுக்கி, குடும்பங்களைச் சிதைத்து போட்டு, கிராமத்தையே ஆங்கிலேய அரசு நடுத்தெருவில் நிறுத்தியது.


உடைத்து எறியப்பட்ட சமூகங்களின் கடந்த கால நேரடி நினைவுகள் உடைந்து போயிருக்கும் இல்லையா? ஆனால், சீதாராம ராஜூவின் பெயரை உச்சரித்தாலே மக்கள் சிலிர்க்கிறார்கள். சிக்கல்கள் அப்படியே இருக்கின்றன. “விறகு பொறுக்குவது, தேன் சேகரிப்பது முதலியவை சிறிய பிரச்சனைகள் அல்ல..” என்கிறார் விசாகபட்டினம் மாவட்டம் மாம்பா கிராமத்தை சேர்ந்த காமராஜு சோமுலு. இதனால் ஆதிவாசிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். “இங்கே ஆதிவாசிகள் பயன்படுத்த மிகக்குறைந்த நிலமே உள்ளது சாப்பாட்டுக்குப் பதிலா பெரும்பாலான ஏழைங்க வேலை கஞ்சி தான் குடிக்கிறோம்.” என்கிறார் ராமயம்மா. இந்தியாவின் செல்வவளம் மிகுந்த மாவட்டங்களில் கிழக்கு கோதாவரி ஒன்று என்றாலும் இம்மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.


The poor

“இங்கே ஆதிவாசிகள் பயன்படுத்த மிகக்குறைந்த நிலமே உள்ளது சாப்பாட்டுக்குப் பதிலா பெரும்பாலான ஏழைங்க வேலை கஞ்சி தான் குடிக்கிறோம்.” என்கிறார் ராமயம்மா. (இடது) “பணக்காரங்க எப்பவும் ஒன்னு கூடிடுறாங்க.” என்கிறார் நிலமற்ற கோயா பழங்குடியான கொண்டபள்ளியை சேர்ந்த பொட்டாவ் காமராஜ்.(வலது)


ஆதிவாசிகளுக்கு உள்ளேயே வர்க்க பிரிவுகள் உருவாகி கொண்டிருக்கின்றன. “பணக்கார கோயா பழங்குடியினர் தங்களுடைய நிலங்களை வெளியாட்களான நாயுடுகளுக்குக் குத்தகைக்கு விடுகிறார்கள். எங்களைப் போன்ற ஆதிவாசி ஏழைகளுக்குத் தர மாட்டார்கள்.” என்கிறார் கொண்டபள்ளி பொட்டாவ் காமராஜ். “பணக்காரங்க எப்பவும் ஒன்னு கூடிடுறாங்க.” என்றும் அவரே புலம்புகிறார். பழங்குடியினரில் சிலருக்கே அரசு வேலை கிடைக்கிறது. இப்பகுதியின் நிலமில்லாத தொழிலாளிகளுக்கு வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் வேலை கிடைப்பதில்லை.

கூலி உயர்வு கேட்டு மேற்கு கோதாவரியில் போராட்டங்கள் கிழக்கு கோதாவரிக்கும் பரவக்கூடும். ஆதிவாசி அல்லாத பணக்காரர்கள், சில ஆதிவாசி தலைவர்களோடு கூட்டு சேர்வதும் நடக்கிறது. மாம்பாவின் பஞ்சாயத்து தலைவராக உள்ள ஆதிவாசி இப்போது பெரிய நில உரிமையாளர். அவரின் குடும்பத்திடம் மட்டுமே நூறு ஏக்கர் நிலம் உள்ளது. “வெளியாட்கள் கூடவே அவர் எப்பவும் ஒத்துழைப்பார்.” என்கிறார் சோமுலு.

ஆங்கிலேய அரசு சீதாராம ராஜூவை விலைக்கு வாங்க முயன்று தோற்றுப் போனது. அவருக்கு ஐம்பது ஏக்கர் நன்செய் நிலத்தைக் கொடுத்து பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை. ஆதிவாசிகளில் எந்த வகையான உறவும் கொண்டிருக்காத சீதாராம ராஜூ ஏன் ஆதிவாசிகளை விட்டு பிரிக்க முடியாதவராக இருக்கிறார் என ஆங்கிலேய அரசுக்கு புரியவில்லை. ஒரு ஆங்கிலேய அறிக்கை, “எதோ ஒரு கல்கத்தா ரகசிய குழுவின் உறுப்பினர்.” என்று அவரைக் குறித்து எழுதியது. அவரைத் தவிர்த்து வெகு சில சமவெளி பகுதியை சேர்ந்த தலைவர்கள் குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கிலேய அரசை எதிர்த்தார்கள். 1922-24காலகட்டத்தில் அவர் தலைமையில் நிகழ்ந்த புரட்சியை ஒடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. மெட்ராஸ் சட்ட மேலவையில் சி.ஆர்.ரெட்டி முதலிய தலைவர்கள், அந்தப் புரட்சியை நசுக்கி முடிக்கும் வரை, ஏன் இந்தப் புரட்சி ஏற்பட்டது என்பதைக் கூட விசாரிக்கக் கூடாது என்று குரல் கொடுத்தார்கள்.


வரலாற்று ஆசிரியர் முரளி அல்தூரி சுட்டிக்காட்டுவதைப் போல “தேசியவாத” பத்திரிகைகள் கூடப் போராட்டத்துக்கு எதிராக இருந்தன. தெலுங்கு இதழான தி காங்கிரஸ் போராட்டத்தை எப்படியாவது அடக்கினால் மிகவும் மகிழ்ச்சி என்று எழுதியது. ஆந்திர பத்திரிகா இந்தக் கிளர்ச்சியைத் தாக்கி எழுதியது.


Damaged samadhi of Sitarama Raju

சீதாராம ராஜூவின் சேதமடைந்த சமாதி


அல்தூரி நிரூபிப்பதை போலச் சீதாராம ராஜூ இறந்த பின்பு அவரைப் பலரும் உரிமை கொண்டாடினார்கள். ஆந்திர பத்திரிகா “எல்லாம்வல்ல இறைவனான வல்ஹால்லாவின் ஆசிகளை ராஜூவுக்கு வேண்டியது.” சத்தியாகிரகி இதழ் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுடன் ஒப்பிட்டது. காங்கிரஸ் அவரைத் தியாகியாகக் கொண்டாடியது. அவருடைய புகழ்மிகுந்த வாழ்க்கையைச் சொந்த கொண்டாட பலரும் முயன்றார்கள். ஒரு பக்கம் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பறிக்கும் வகையில் 1/7௦ முறைப்படுத்தும் சட்டத்தைத் திருத்த முயலும் அரசு இந்த ஆண்டுச் சீதாராம ராஜூவின் நூற்றாண்டை கோலாகலமாகக் கொண்டாடும்.

ராஜூவின் சமாதியை கிருஷ்ணதேவிபேட்டையில் கவனித்துக் கொள்ளும் கஜாலா பெத்தப்பனுக்குக் கடந்த மூன்று வருடங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. பொது மக்களின் கோபம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. விசாகப்பட்டினம்-கிழக்கு கோதாவரி எல்லைப்பகுதியில் தீவிர இடதுசாரிகளின் தாக்கம் கூடிக்கொண்டே போகிறது.

“என்னோட தாத்தா, பாட்டி எல்லாம் எப்படிச் சீதாராம ராஜூ பழங்குடி மக்களுக்காகப் போராடினார்னு சொல்லியிருக்காங்க.” என்கிறார் கொண்டபள்ளி பொட்டாவ் காமராஜ். தன்னுடைய நிலங்களை மீட்க காமராஜ் போராடுவாரா? “கண்டிப்பா. காவல்துறை எப்பவும் பணக்காரர்கள், நாயுடுகளுக்கே உதவி பண்ணுது. எங்களுக்கு இருக்க வலிமைக்கு ஒருநாள் போராடத்தான் போறோம்.” என்கிறார்.


Bust of Sitarama Raju

சீதாராம ராஜூவின் மார்பளவு சிலை.


தலைமை காவலர் எப்போதும் தாக்குதல் நிகழலாம் என அஞ்சுவது சரியென்றே தோன்றுகிறது.

அது இன்று மதியம் கூட நடக்கலாம். .

இக்கட்டுரை முதலில் The Times of India வில் ஆகஸ்ட் 26, 1997 அன்று வெளியானது.


இந்த தொடரில் மேலும் வாசிக்க

ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1

பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2

லட்சுமி பண்டாவின் இறுதிப்போர்

9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்

பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்

இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்

கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்

காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி


(தமிழில்: பூ.கொ.சரவணன்)

ਪੀ ਸਾਈਨਾਥ People’s Archive of Rural India ਦੇ ਮੋਢੀ-ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਕਈ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਦਿਹਾਤੀ ਭਾਰਤ ਨੂੰ ਪਾਠਕਾਂ ਦੇ ਰੂ-ਬ-ਰੂ ਕਰਵਾ ਰਹੇ ਹਨ। Everybody Loves a Good Drought ਉਨ੍ਹਾਂ ਦੀ ਪ੍ਰਸਿੱਧ ਕਿਤਾਬ ਹੈ। ਅਮਰਤਿਆ ਸੇਨ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕਾਲ (famine) ਅਤੇ ਭੁੱਖਮਰੀ (hunger) ਬਾਰੇ ਸੰਸਾਰ ਦੇ ਮਹਾਂ ਮਾਹਿਰਾਂ ਵਿਚ ਸ਼ੁਮਾਰ ਕੀਤਾ ਹੈ।

Other stories by P. Sainath
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan