வெண்புருவக் குரங்குகள் குறித்த கதைகளையும், அவற்றின் அசைவுகளையும் குறித்து ரூபேஸ்வர் போரோ ஆச்சரியத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். விலங்குகளின் குரல்களையும், அசைவுகளையும், மரத்திற்கு மரம் அவை எப்படித் தாவும் என்பதையும் அவர் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.
நாங்கள் போரோவை லோஹர்காட் சரக அலுவலகத்தில்தான் சந்தித்தோம்; அவர் அந்த வன அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். வெண்புருவக் குரங்கு எதையும் பார்க்கவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். ”நான் வீட்டிலிருக்கும்போது பெரிய குரங்குகளின் குரல்களை அடிக்கடி கேட்க முடியும். ஆனால், அவை ஒருபோதும் எங்கள் கிராமத்திற்கு அருகில் வந்ததில்லை. தொலைவிலிருக்கும் மலைகளில் இருந்து அவை அலறுவதைக் கேட்டிருக்கிறோம்” என்கிறார் அவர். அசாமின் காமரூப் மாவட்டத்தில் ராணி வனச் சரகத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது அவரது முடுக்கி கிராமம். அசாமின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகளில் வரும் குரங்குகளைப் பார்த்துவிட்டுத்தான் அவர் அவற்றைப் போல செய்து காட்டுகிறார்.
இதற்கிடையே, (ராணி வனச் சரகத்தின் தொடர்ச்சியான) பர்தார் காப்புக் காட்டில், மலையேற்றத்தில் ஈடுபட்ட கோல்பாரா ஒளிப்பட சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டு மேற்கத்திய வெண்புருவக் குரங்குகளை பார்த்திருக்கின்றனர். ‘காட்டுப்பயல்’ என்று உள்ளூரில் அழைக்கப்படும், வெண்புருவக் குரங்குகள் அசாம்-மேகாலயா எல்லைப் பகுதியில் அரிதாக காணப்படுபவை.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வனப் பகுதிகளிலும், கிழக்கு வங்காள தேசம் மற்றும் வடமேற்கு மியான்மரிலும் வாழும் இந்த வெண்புருவக் குரங்குகளை, இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆபத்தான விலங்கினங்களின் பட்டியலில் சிவப்புக் குறியிட்டு வைத்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், சீனா, வடகிழக்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் வாழும் கிழக்கத்திய வெண்புருவக் குரங்குகளை IUCN எளிதில் பாதிக்கப்படக்கூடிய விலங்கினங்களின் பட்டியலில் வைத்திருக்கிறது.
“நீளமான, மெல்லிய கைகளைக் கொண்ட வெண்புருவக் குரங்குகள், மரங்களில் தாவிச் செல்லக் கூடியவை, அவை தரையில் நிற்பதற்கான தேவை அரிதாகவே ஏற்படுகிறது”
என்கிறது
இயற்கை-இந்தியாவிற்கான உலகளாவிய நிதியம். “மணிக்கு 55 கிமீ வேகத்தில், ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவும் திறன் படைத்த இந்த வகை குரங்குகள், ஒரு பாய்ச்சலில் ஆறு மீட்டர்களைத் தாண்டும்!”
சாயனி-பர்தார் வட்டாரத்திற்குட்பட்ட மேற்கு காமரூப் வனப் பிரிவின் பர்தார் காட்டில், வெண்புருவக் குரங்குகளைக் கண்ட கோல்பாரா ஒளிப்படச் சங்க (GPS) உறுப்பினர்கள் அவற்றை ஒளிப்படம் எடுத்திருக்கின்றனர். கோல்பாரா மாவட்டத்தின் தூத்னாய் நகரத்தைச் சேர்ந்த GPS உறுப்பினரும் தொடக்கப் பள்ளி ஆசிரியருமான இந்திரநாராயண் கோச்சும் அன்றைய தினம் அங்கிருந்தார். குவஹாத்தியின் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திக் காட்சிகளை அவர் எங்களிடம் காட்டினார். அசாமின் முக்கிய நகரமான தீஸ்பூரிலிருந்து 60 கிமீ தொலைவிலிருக்கும் குக்கிராமமான ஜுபங்பாரி எண்.1 என்ற இடத்தில்தான் நாங்கள் அவரைச் சந்தித்தோம். அவர் ஓர் இளைஞர் பட்டாளத்துடன் ஒரு சுற்றுச்சூழல் முகாமிற்கு ஏற்பாடு செய்வதில் பரபரப்பாக செயலாற்றிக் கொண்டிருந்தார்.
ஒளிப்படக் குழுவின் இன்னோர் உறுப்பினரான பிஸ்வஜித் ராபாவின் வீட்டிற்கருகில்தான் இந்த வெண்புருவக் குரங்குகளை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். உள்ளூர் கைவினைக் கலைஞரான பிஸ்வஜித், முதன்முறையாக அந்த ‘பிரம்மாண்ட’ குரங்குகளைப் பார்த்திருக்கிறார். “இங்கு [ஜுபங்பாரி எண்.1] நான் எதையும் பார்த்ததில்லை. இது அரிதான ஒன்று. அவற்றை நாங்கள் அடர்ந்த வனப் பகுதியில் பார்த்தோம்,” என்கிறார் அவர்.
“நாங்கள் வனத்திற்குள் ஒரு நான்கு மணி நேரம் இருந்து போட்டோ எடுத்தோம். அஜய் ராபா [GPS உறுப்பினர்] தான் முதலில் இலைகள் வேகமாக ஆடுவதைப் பார்த்துவிட்டு, 30 அடி தொலைவிலிருந்து எங்களுக்கு சமிக்ஞை செய்தார். அந்த வெண்புருவக் குரங்கு குங்கிலிய மரத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. நாங்கள் நெருங்கியதும், அந்தக் குரங்கு வேகமாக நகர்ந்தது, ஆனாலும் நாங்கள் அதனைப் பார்த்துவிட்டோம் – அது ஒரு கருநிறக் குரங்கு!” என்கிறார் காமரூப் மாவட்டத்தின் சுகுனியபாரா கிராமத்தில் பன்றிப் பண்ணை நடத்தும் GPS உறுப்பினரான 24 வயதாகும் அபிலாஷ் ராபா.
“நாங்கள் இந்த [பர்தார்] பகுதியில் வெண்புருவக் குரங்கினை 2018 முதலே தேடிக் கொண்டிருந்தோம், இறுதியில் 2019 டிசம்பர் 8ம் தேதி கண்டுபிடித்தோம்” என்கிறார் GPSன் ஸ்தாபக உறுப்பினரும், அரசின் க்ரிஷி விஞ்ஞான் கேந்திரா எனப்படும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப அலுவலருமான பெஞ்சமின் கமான். ”எங்களுக்கு இந்தக் குரங்குகளின் சத்தங்கள் கேட்கும், ஆனால் முதலில் அவற்றை படம் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முடியவில்லை. ஆனால் இப்போது அவற்றைப் பார்க்கிறோம், அரசு இதில் தலையிட்டு இவ்வகைக் குரங்குகளைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்” என்கிறார் அவர்.
இந்த ‘ஹுலு கண்டா பஹர்’ (வெண்புருவக் குரங்குகள் அலறும் மலை) கோல்பாரா மாவட்டத்தில் பர்தாரிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது. இதுதான் ஒரு காலத்தில் குரங்குகளின் வசிப்பிடமாக இருந்தது என்கிறார் கமான். உண்மையில் அவர் அசாமின் வெள்ள பாதிப்புப் பகுதியான தேமாஜியைச் சேர்ந்தவர். “2018ல், ஹுலு கண்டா வனப் பகுதியில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறோம், ஆனால் எதையும் [குரங்குகள்] பார்க்க முடிந்ததில்லை,” என்கிறார் அவர். மேகாலயா-அசாம் எல்லைப் பகுதியான கோல்பாரா மாவட்டத்தின் ரங்ஜுலி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போதும் அவர்களால் எந்தக் குரங்கையும் பார்க்க முடியவில்லை.
“வாழ்விடப்பகுதி குறைதல் மற்றும் துண்டாடுதல்” காரணமாக, கடந்த 3-4 தசாப்தங்களில் அசாமில் மட்டும் – சுமார் 80,000லிருந்து 5,000ஆக மேற்கத்திய வெண்புருவக் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று
எழுதுகிறார்
தனியார் ஆய்வு மையமான NE இந்தியாவின் டாக்டர் ஜிஹோச்சொ பிஸ்வாஸ். “வடகிழக்கு இந்தியாவின் அனைத்து வனப் பகுதிகளிலும் 30 ஆண்டுகளுக்கு முன் இவ்வகை உயிரினங்கள் காணப்பட்டன. ஆனாய், அவை இப்போது ஒருசில வனப் பகுதிகளுக்குள் சுருங்கிவிட்டன. வடகிழக்கு இந்தியாவில் 12,000 குரங்குகள் இருக்கலாம் என்றும், அசாமில் மட்டும் 2,000 இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடுகிறது
IUCNன் சிவப்பு பட்டியல்.
இந்தியாவின் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972ன் அட்டவனை 1ல் வெண்புருவக் குரங்குகள் இடம்பெற்றிருந்த போதிலும், அவை வெகுவாகக் குறைந்ததற்கு IUCN சில காரணங்களைப் பட்டியலிடுகிறது: வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் வளர்ச்சி, தேயிலை போன்ற மரங்கள் அல்லாத பயிர்களை சாகுபடி செய்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளை ஊக்குவித்தல், மரங்களை வெட்டி வீழ்த்துதல் போன்றவையே அவை.
சாலைகள் மற்றும் தொடர்வண்டித் தடங்களால் வனப் பகுதிகள் ஊடறுக்கப்படுவதும், வடகிழக்கு இந்தியாவில் வன உயிரங்களுக்கு தொந்தரவாக அமைகின்றன. வனப் பகுதி சுருங்கத் தொடங்கியதன் விளைவாகவே ‘ஹுலு பஹர்’ரிலிருந்து வெண்புருவக் குரங்குகள் காணாமல் போகத் தொடங்கின. இந்திய வன கணக்கெடுப்புப் பதிவின் 2019ம் ஆண்டின் அறிக்கையில், 2017 முதல் வடகிழக்கு இந்தியாவின் வனப்பகுதி 765 சதுர கிமீயாக சுருங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“வனப்பகுதியை துண்டாடுவது வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது, வெண்புருவக் குரங்குகளும் விதிவிலக்கல்ல” என்று நம்மிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார் டாக்டர் நாராயண் ஷர்மா. அவர் குவஹாத்தி, காட்டன் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் உயிரியல் மற்றும் வன உயிரின அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பயிர்களை மாற்றுவது [முக்கியமாக நெல்], தேயிலைத் தோட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மனிதர்கள் குடியமர்த்தப்படுதல் ஆகியவை வெண்புருவக் குரங்குகளின் எண்ணிக்கையை அழித்திருக்கின்றன, என்கிறார் அவர். “நிர்பந்திக்கப்பட்டால் தவிர, அவை தொலைதூரங்களுக்கு இடம்பெயர்வதில்லை. அவை குறிப்பிட்ட வெப்ப மண்டலக் காடுகளுக்குள்ளாகவே வாழக்கூடியவை. மேலும் அவை தரையில் நடப்பதற்குப் பழகிக் கொள்ளவில்லை. அடர்ந்த வனப்பகுதி இல்லாமல், வன உயிரினங்களின் பெருக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.”
வடகிழக்கின் சில பகுதிகளில் இவ்வகை குரங்குகள் வேட்டையாடப்பட்டாலும், அசாமில் அத்தகைய சம்பவங்கள் அரிதாக நிகழ்வதாகவே டாக்டர். ஷர்மா நம்புகிறார். ”நாகாலாந்து போன்ற சில வடகிழக்குப் பகுதிகளில் குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவது உண்டு என்றாலும், இப்போது அவை குறைந்துவிட்டன. மிசோரம் பழங்குயினப் பெண்கள் [கடந்த காலங்களில்] வெண்புருவக் குரங்குகளின் எலும்புகளை கால்களில் அணிவதன் மூலம் மூட்டுவலியிலிருந்து குணமடைவதாக நம்பினர். எனவே அவர்கள் இறைச்சிக்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும் குரங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.”
“காடுகளில் அவை உண்பதற்கு இப்போது எதுவும் இல்லை. எனவே தான் அவை உணவைத் தேடி அடிக்கடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வருகின்றன” என்கிறார் சாயனி-பர்தார் வட்டாரத்தின் ராஜபாரா கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான நளினி ராபா. “அவற்றுக்கு அங்கே [இங்கே] உணவு எதுவுமில்லை. நாங்கள் சில பம்ளிமாஸ், ஸ்டார் ஃபுரூட்ஸ் எனப்படும் விளிம்பி, பாக்கு போன்ற மரங்களை எங்கள் தோட்டங்களில் [கொல்லைப்புறங்களில் வயல்களில்] வளர்த்து வருகிறோம். தேக்கு மரங்களையும் தேயிலைத் தோட்டங்களையுமே நீங்கள் பார்க்க முடியும். அவை எங்கேதான் போகும்?” என்று வெண்புருவக் குரங்குகளின் உணவுப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்புகிறார் அந்த முதியவர்.
ஒரு வளர்ந்த வெண்புருவக் குரங்கு, “பசுமையான இலைகள், முதிர்ந்த இலைகள், பூக்கள், பழங்கள், கொடிகள், மொட்டுகள் மற்றும் சிலவகை உயிரினங்களை” சாப்பிடும் என்கிறது 2017ல் வெளியான ஆய்வு . அத்துடன் 54 வகையான வகையான உயிரினங்கள், “சராசரியாக 51% அளவிற்கு பழங்களை மட்டுமே உண்ணும் பழக்கத்திற்கு... காலப்போக்கில் மாறியிருக்கின்றன. இந்தப் பழங்களை உண்ணும் பழக்கமானது, சிறிய மற்றும் சுருங்கிவரும் வனப் பகுதிகளில் வாழும் விலங்கினங்களின் வாழ்வைச் சிக்கலாக்குகிறது.”
“அவை மிகுந்த நெருக்கடியில் இருக்கின்றன. தங்களுடைய வசிப்பிடத்திற்குள் மனிதர்கள் வருவதை அவை முற்றிலும் விரும்பவில்லை,” என்கிறார் பெஞ்சமின் கமான். “அவற்றுக்கு பாதுகாப்பான சூழல் தேவை என்று நாங்கள் நினைக்கிறோம்.” ஜுபங்பாரி எண்.1 கிராமத்தில் நாங்கள் புகைப்படக்காரர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு கிராமவாசி எங்களின் பேச்சை இடைமறித்து, வன மாஃபியா அனைத்தையும் அழித்துவிட்டது என்றார். “அவர்கள் இங்கிருந்த [தேக்கு, குங்கிலியம் போன்ற] பழைய மரங்கள் அனைத்தையும் வெட்டி வெளியில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு பணம் மட்டுமே தெரியும்,” என்றார் அவர்.
“ராணி-மேகாலயா சாலையின் வழியாகவே பெரும்பாலான சட்டவிரோத மரக் கடத்தல்கள்கள் நடக்கின்றன. காட்டின் சில இடங்கள் மேகாலயாவின் எல்லைக்குள் வருகிறது. அத்தகைய இடங்கள் மூலமாக, கடத்தல்காரர்கள் எளிதாக வெட்டப்பட்ட மரங்களை சட்டவிரோதமாக மரப்பட்டறைகளுக்குக் கொண்டு சென்றுவிடுகின்றனர்” என்கிறார் இந்திரா நாராயண்.
வனப்பகுதி புத்துயிர் பெறுவதற்கு அரசாங்கமும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநில அரசு, “வன பல்லுயிர்த் தன்மையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான “வனம் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கான அசாம் திட்ட”த்தைச் செயல்படுத்துகிறது” என்கிறது மாநில அரசின் ஓர் இணைய தளம். மேலும், அசாமில் 20 வனவிலங்கு சரணாலயங்களும், ஐந்து தேசிய பூங்காக்களும் உள்ளன. அவற்றில் ஒன்றான, ஜோராத் மாவட்டத்திலிருக்கும் ஹூலங்காபர் காப்புக் காடு, கடந்த 1997ல் ஹூலங்காபர் குரங்குகள் சரணாலயமாக தரமுயர்த்தப்பட்டது.
ஆனாலும், வனப்பகுதிகள் துண்டாடப்படுவது அதிகரித்து வருவதால், வெண்புருவக் குரங்குகள் அருகி வருகின்றன. லோஹர்காட் வனச் சரக அலுவலகத்தின் வனக் காவலர் ஷாந்தனு போதோவாரி நம்மிடம் தொலைபேசி வழியாகப் பேசும்போது, அவரது கண்காணிப்பு எல்லைக்குள் வரும் பர்தார் காப்புக் காட்டில், அவரோ அவரது ஊழியர்களோ எந்தக் குரங்கையும் பார்க்கவில்லை என்றார்.
இதற்கிடையே, இந்திரநாராயண் மற்றும் பிஸ்வஜித் ராபா ஆகியோர் சூழலியல் முகாம்களை நடத்தி, இயற்கையோடு இணைந்து வாழ்வதையும், வனம் மற்றும் வனத்தின் குழந்தைகளுக்கு மதிப்பளிப்பதையும் குறித்து மற்றவர்களுக்கு பயிற்றுவிக்கத் தயாராகி வருகின்றனர். பெருகிவரும் வனவிலங்குகள் முகாம்களில் நடப்பதைப் போல, நள்ளிரவுகளில் சத்தமாக இசைப்பதில் இருந்தும், அதிகமான ஒளிவிளக்குகளைப் பயன்படுத்துவதில் இருந்தும் அவர்கள் மாறுபடுகின்றனர்.
தமிழில்: சவிதா