சம்பா சாகுபடியை மிக அதிகமாக நம்பியிருக்கிறார்கள் தீராவும் அனிதா புயாவும். நெல்லும் சோளமும் பயிரிட்டிருக்கிறார்கள். அறுவடைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்கள் வேலை செய்யும் செங்கல் சூளை ஊரடங்கினால் மூடப்பட்டு விட்டதால், பயிர் விளைச்சல் மிக முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது.
“போன வருடம் கூட விவசாயம் செய்து பார்த்தேன். ஆனால் மழை பெய்யாததாலும் பூச்சிகளாலும் பயிர் நாசமாகி விட்டது,” என்கிறார் தீரா. “ஆறு மாதங்களுக்கு நாங்கள் விவசாயம் செய்கிறோம். ஆனால் பெரியளவில் வருமானம் இல்லை,” என்கிறார் அனிதா.
மகுகவானின் தெற்குப்பகுதியில் வாழும் புயா ததி என்கிற புயா சமூகம் வாழும் இடத்தில் 45 வயது தீராவும் 40 வயது அனிதாவும் வசிக்கின்றனர்.
ஜார்கண்டின் பலாமு மாவட்டத்திலுள்ள சைன்பூர் ஒன்றியத்தின் கிராமத்தில் 2018ம் ஆண்டிலிருந்து குடும்பமாக குத்தகை விவசாயம் பார்த்து வருகிறார்கள். வாய்மொழி ஒப்பந்தத்தில் நிலவுடமையாளரும் குத்தகைதாரரும் விளைச்சலை சமமாக பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடு. விளைவதில் பெரும்பகுதியை குத்தகை விவசாயிகள் தங்களின் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்வார்கள். மிச்சத்தை மட்டுமே சந்தையில் விற்பார்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன் வரை குடும்பத்தினர் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்தனர். இரண்டு பருவங்களிலும் 30 நாட்களுக்கு வேலை இருக்கும். நாட்கூலி 250லிருந்து 300 ரூபாய் வரை கிடைக்கும். மீதி நேரங்களில் வேறு கூலி வேலைகளை அருகாமை கிராமங்களிலும் மகுகவானிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டல்டோன்கஞ்ச் டவுனிலும் பார்த்தனர்.
விவசாயக் கூலி வேலைநாட்கள் வருடந்தோறும் குறைந்ததால், 2018ம் ஆண்டிலிருந்து குத்தகை விவசாயம் முயன்று பார்க்க முடிவு செய்தனர். “இதற்கு முன் நான் நிலவுடமையாளர்களுக்கு உழும் வேலை பார்த்துக் கொடுத்தேன்,” என்கிறார் தீரா. “பிறகு உழுவது, நடவு போன்ற எல்லா வேலைகளுக்கும் ட்ராக்டர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மொத்த கிராமத்திலும் ஒரே ஒரு காளை மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது.”
குத்தகை விவசாயத்தையும் தாண்டி தீராவும் அனிதாவும் 2018ம் ஆண்டிலிருந்து செங்கல் சூளையிலும் வேலை பார்க்கத் தொடங்கினர். நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலும் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலும் பிற ஊர்களிலிருந்து வந்து சூளை வேலை பார்ப்பார்கள். “எங்கள் மகளின் திருமணத்தை போன வருடத்தில் நடத்தினோம்,” என்கிறார் அனிதா. இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணமாகாத இளைய மகள் அவர்களுடனேயே வாழ்கிறார். திருமணம் முடிந்த மூன்று நாட்களிலேயே அவர்கள் சூளையில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். “திருமணத்துக்கு வாங்கிய கடன்களை அடைத்துவிட்டால், நாங்கள் விவசாயம் பார்க்க சென்றுவிடுவோம்,” என்கிறார் அவர்.
மார்ச் மாதத்தில் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு வரை, தீரா, அனிதா, அவர்களின் மகன்கள் 24 வயது சித்தந்தர், 22 வயது உபேந்தர் ஆகியோர் புயா ததியிலிருக்கும் பிறருடன் சேர்ந்து ஒவ்வொரு காலையும் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புரிபிர் கிராமத்துக்கு ஒரு ட்ராக்டரில் செல்வார்கள். குளிர்காலத்தில் பிப்ரவரி மாதம் வரை காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரையும் மார்ச் மாதத்திலிருந்து அதிகாலை 3 மணி தொடங்கி காலை 11 மணி வரையும் வேலை பார்த்தார்கள். “செங்கல் சூளையில் வேலை பார்ப்பதில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் மொத்த குடும்பமும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது மட்டும்தான்,” என்கிறார் அனிதா.
செங்கல் சூளையில் ஒவ்வொரு 1000 செங்கல்களுக்கும் 500 ரூபாய் கிடைத்தது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒப்பந்ததாரரிடம் வாங்கிய கடனை அவர்கள் இப்போது சூளையில் வேலை பார்த்து கழிக்க வேண்டும். மகளின் திருமணத்துக்காக ஒப்பந்ததாரரிடம் வாங்கிய இன்னொரு 75000 ரூபாய்க்கு வரும் நவம்பர் மாதத்திலிருந்து சூளை தொடங்கியதும் அவர்கள் வேலை பார்க்க வேண்டும்.
சூளையில் தீராவுக்கும் அனிதாவுக்கும் அவர்களின் மகன்களுக்கும் வாரக்கூலியாக கிடைக்கும் 1000 ரூபாயில்தான், “அரிசி, எண்ணெய், உப்பு, காய்கறி வாங்குவோம்,” என்கிறார் தீரா. “எங்களுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டால் ஒப்பந்ததாரரிடம் கேட்போம். அவரும் தருவார்.” இந்த வாரப்பணம், சிறு கடன்கள், பெரிய கடன்கள் ஆகிய எல்லா கணக்கும் அவர்கள் சூளையில் செய்யும் செங்கல்களுக்கு கிடைக்கும் கூலியில் கழிக்கப்படுகிறது.
கடந்த 2019ம் வருட ஜூன் மாதத்தில் திரும்பிய போது அவர்கள் 50000 ரூபாய் கொண்டு வந்தார்கள். சில மாதங்களுக்கு அப்பணம் உதவியது. ஆனால் இம்முறை சூளை வேலை ஊரடங்கினால் இல்லாமல் போனது. மார்ச் மாத இறுதியில் ஒப்பந்ததாரரிடமிருந்து ஒரு 2000 ரூபாயையும் வாங்கியிருந்தார்கள்.
அப்போதிலிருந்து புயா குடும்பம் பிறரை போலவே வருவாய்க்கான வேறு வழியைத் தேடிக் கொண்டிருந்தனர். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஐந்து கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு என பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் வழியே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நிவாரணம் வந்தது. ஏழைகளிலும் ஏழை என்கிற வகைப்பாட்டில் அவர்களிடம் இருக்கும் குடும்ப அட்டையின் வழியாக 35 கிலோ தானியம் மானிய விலையில் கிடைக்கிறது. “என் குடும்பத்துக்கு 10 நாட்களுக்கு கூட இது போதாது,” என்கிறார் தீரா. அவர், அனிதா, இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோரை தாண்டி குடும்பத்தில் இரண்டு மருமகள்களும் மூன்று பேரக் குழந்தைகளும் கூட இருக்கின்றனர்.
உணவுப் பொருட்களும் தீர்ந்துபோய், அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை கொண்டும் கடன் வாங்கியும் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வருட சம்பா சாகுபடிக்கு அரிசியும் சோளமும் விளைவிக்க விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை வாங்க 5000 ரூபாய் செலவழித்திருப்பதாக தீராவும் அனிதாவும் சொல்கின்றனர். “என்னிடம் பணம் எதுவும் இல்லை,” என்கிறார் தீரா. “ஓர் உறவினரிடமிருந்து கடன் வாங்கினேன். என் தலை மீது இப்போது ஏகப்பட்ட கடன் இருக்கிறது.”
அவர்கள் குத்தகை வேலை செய்யும் நிலம் அஷோக் சுக்லாவுக்கு சொந்தமானது. 10 ஏக்கர் நிலம் கொண்டிருக்கும் அவரும் மழையின்மையால் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக நஷ்டத்தை சந்தித்து வருகிறார். “தேவையான அளவுக்கான தானியங்களை கடந்த 18-லிருந்து 24 மாதங்களாக நாங்கள் விதைத்தோம்,” என்கிறார் அஷோக். “ஆறு மாதங்களாக கிடங்கு காலியாக கிடக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக விதைத்து வருகிறேன். ஆனால் கடந்த 5,6 வருடங்கள் இனி விவசாயத்துக்கு எதிர்காலம் கிடையாது என எனக்கு உணர்த்தியிருக்கிறது. நஷ்டம் மட்டும்தான்.”
கிராமத்திலிருக்கும் உயர்சாதி நிலவுடமையாளர்கள் கூட டவுன்களுக்கும் நகரங்களுக்கும் வேலை தேடி இடம்பெயர்கின்றனர் என்கிறார் சுக்லா. விளைச்சல் குறைவதால் விவசாயக்கூலிகளுக்கு நாட்கூலி 300 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக நிலத்தை குத்தகைக்கு விடவே அவர்கள் விரும்புகிறார்கள். “மொத்த கிராமத்திலும் உயர்சாதி நிலவுடமையாளர்கள் விவசாயம் செய்வதை மிகக் குறைவாகவே பார்க்க முடியும்,” என்கிறார் சுக்லா. “அவர்களின் நிலங்களை புயாக்களுக்கும் பிற தலித்களுக்கும் கொடுத்திருக்கின்றனர்.” (2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி மகுக்வானின் 21-30 சதவிகித கிராமங்களின் 2698 பேர் பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள்.)
இந்த வருடம் நல்ல மழை பொழிந்திருக்கிறது. ஆகவே தீரா நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். நல்ல விளைச்சல் எனில் இரண்டு ஏக்கரில் 20 குவிண்டால் நெல் கிடைக்கும் அளவு. உமியை பிரித்து அஷோக் சுக்லாவுடன் பகிர்ந்த பிறகு அவர்களுக்கென 800 கிலோ அரிசி மிஞ்சும். பத்து பேர் கொண்ட அவரின் குடும்பத்துக்கு அதுவே உணவாக இருக்கும். “அரிசியை சந்தையில் விற்க முடிந்தால் நன்றாக இருக்கும்,” என சொல்லும் தீரா, “ஆனால் எங்களுக்கே ஆறு மாதத்துக்கு கூட இது போதாது,” என்றும் சொல்கிறார்.
பிற எவரையும் விட தனக்கு விவசாயம் நன்றாக தெரியும் என்கிறார் தீரா. நிலவுடமையாளர்கள் அதிகமாக நிலத்தை குத்தகைக்கு விட விரும்புவதால், இன்னும் பல வகை பயிரை பெரிய அளவில் பயிரிடலாம் என அவர் நம்புகிறார்.
இப்போதைக்கு அவரும் அனிதாவும் இன்னும் சில வாரங்களில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கிறார்கள்.
தமிழில்: ராஜசங்கீதன்