ரமேஷ் குமார் சிங்குவுக்கு மிதிவண்டியில் வந்துள்ளார். பஞ்சாப்பின் ஹோஷியார்பூரிலிருந்து ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்டத் தளத்திற்கு 400 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வர அவருக்கு 22 மணி நேரம் பிடித்தது. , 61 வயதான ரமேஷ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, சைக்கிள் ஓட்டிக்கொண்டு வர, அவரது சகோதரி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் தங்கள் காரில் அவரைப் பின்தொடர்ந்தனர்.
"இந்த விவசாயிகள் இயக்கத்தில் நான் எப்போதும் பங்கு வகிக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறுகிறார். எனவே, அவர் ஜனவரி 26ம் தேதி - நாளை நடைபெறும் குடியரசு தின விவசாயிகள் அணிவகுப்பில் பங்கேற்க இங்கு வந்துள்ளார்.
"இது சட்டங்களை ரத்து செய்யப்பட்டால், அது மக்களால் அவமதிக்கப்படும் என்று அரசு நினைக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார். "ஆனால் இது உண்மையல்ல, மாறாக அரசாங்கம் மக்களின் மரியாதையைப் பெறும்."
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
இதற்கிடையில், சிங்கு எல்லையில் உள்ள டிராக்டர்கள் நாளை அணிவகுப்புக்காக மாலைகள், கொடிகள் மற்றும் வண்ணமயமான காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அணிவகுப்பு டிராக்டர்கள் ஒரு வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அணிவகுப்பு நடைபெறும்போது அவை நகரத் தொடங்கும்போது எளிதாக இருக்கும்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்