மும்பையில் நடக்கும் போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஏன் பாட்டி செல்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார் பத்து வயது நுடான் ப்ராமணே. ஆகவே அவரை ஜிஜாபாய் ப்ராமணே உடன் அழைத்து செல்ல முடிவெடுத்தார். “பழங்குடியினரின் பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிந்து கொள்ள இவளை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன்,” என்கிறார் தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்த்தின் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்திருக்கும் ஜிஜாபாய்.
”தில்லியில் போராடும் (மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து) விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்திருக்கிறோம். உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றை நோக்கியும் கவனத்தை ஈர்க்க வந்திருக்கிறோம்,” என்கிறார் 65 வயது ஜிஜாபாய். ஜனவரி 25 மற்றும் 26 தேதிகளில் ஆசாத் மைதானில் நுடானுடன் தங்கிவிட்டார்.
நாசிக் மாவட்டத்தின் அம்பெவானி கிராமத்திலிருந்து ஜனவரி 23ம் தேதி கிளம்பிய விவசாயக் குழுவுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
பல பத்தாண்டுகளாக 70 வயது கணவர் ஷ்ராவனுடன் சேர்ந்து திந்தோரி தாலுகாவில் இருக்கும் கிராமத்தின் ஐந்து ஏக்கர் வன நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார் ஜிஜாபாய். இருவரும் கோலி மகாதேவ் என்கிற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். 2006ம் ஆண்டு வந்த வன உரிமை சட்டப்படி அவர்களுக்கு நில உரிமை கிடைத்திருக்க வேண்டும். ”ஆனால் எங்கள் பெயரில் ஒரு ஏக்கருக்கும் குறைவாகத்தான் நிலம் கிடைத்தது. அதில் நாங்கள் நெல், கோதுமை முதலியவற்றை விளைவிக்கிறோம்,” என்கிறார் அவர். “மிச்ச நிலம் வனத்துறையிடம் இருக்கிறது. நிலத்துக்கு அருகே சென்றாலே வனத்துறை அதிகாரிகள் எங்களை அச்சுறுத்துகின்றனர்.”
மும்பையில் நடக்கவிருந்த குடியரசு தின போராட்டத்தில் கலந்து கொள்ள ஜிஜாபாயின் மகனான சஞ்சய், மகளை அனுப்ப உடனே ஒப்புக்கொண்டார். “2018ம் ஆண்டு நடந்த விவசாயிகளின் நெடும்பயணத்தில் கலந்து கொள்ள விரும்பினாள். அப்போது நாங்கள் ஒரு வாரம் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடந்தோம். இவள் சிறு பிள்ளையாக இருந்தாள். அந்த தூரத்தை இவள் நடக்க முடியுமா என தெரியவில்லை. இப்போது இவள் வளர்ந்துவிட்டாள். நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவசியமும் இல்லை,” என்கிறார் ஜிஜாபாய்.





