எந்த நேரத்திலும் அகமதாபாத்தின் ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து அவை வானேறும். வானின் பிற எந்த அணிவகுப்பைக் காட்டிலும் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் இருக்கும். அவற்றின் பைலட்களும் உரிமையாளர்களும் தரையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பறக்க விட்டிருக்கும் கலம் வருடம் முழுக்க உழைக்கும் தரைக் குழுக்களால் தயார் செய்யப்பட்டவை என்பது அவர்களுக்குத் தெரியாது. குழுக்களில் பெரும்பாலானோர் பெண்கள். கிராமம் அல்லது சிறு டவுன்களில் வசிப்பவர்கள். சிக்கலான நுட்பமான கடினமான பணியை அற்பமான சம்பளத்துக்காக செய்கிறார்கள். உயர பறக்க இயலாதவர்கள்.
இது மகர சங்கராந்தி காலம். இந்த இந்து மதத் திருவிழாவை நகரத்தில் கொண்டாடுவதற்கான பல வண்ணக் காற்றாடிகள் அகமதாபாத்திலும் குஜராத்தின் கம்பத் தாலுகாவிலும் இஸ்லாமியப் பெண்களாலும் இந்து சுனாரா சமூகத்தினராலும் உருவாக்கப்படுகிறது. காற்றாடி பறக்க விடுபவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.
ஜனவரி 14 அன்று வானை அலங்கரிக்கும் வண்ண வண்ணக் காற்றாடிகளை தயாரிக்க இப்பெண்கள் வருடத்தில் 10 மாதங்களுக்கும் மேலாகக் குறைவான ஊதியத்துக்கு உழைக்கின்றனர். குஜராத்தின் 625 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இத்துறையில் பணிபுரியும் 1.28 லட்ச மக்களின் 10 பேரில் 7 பேர் பெண்கள்.
“ஒரு காற்றாடி தயாரிக்கப்பட ஏழு ஜோடி கைகளை அது கடக்க வேண்டும்,” என்கிறார் 40 வயது சபின் அப்பாஸ் நியாஸ் ஹுசேன் மாலிக். கம்பத் லால் மகால் பகுதியின் சிறு தெரு ஒன்றில் வீடாகவும் கடையாகவும் இருக்கும் 12 x 10 அடி அறைக்குள் நாங்கள் அமர வைக்கப்பட்டிருந்தோம். காற்றாடிகள் கட்டப்பட்ட பளபளப்பான பெட்டிகளின் பின்னணியில் அமர்ந்து அவர், வெளித்தோற்றத்தில் அழகாக தெரியும் துறையின் அறியாப் பக்கத்தை பற்றி எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.


















