“அவற்றை நீங்கள் கொஞ்சம் தேன் அல்லது வெல்லம் போன்ற இனிப்புகளுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் கிராமப்புற சுகாதார அலுவலரான உர்மிளா டுக்கா, பாட்டியின் மடியில் இருக்கும் மூன்று வயது சுகானியை பார்த்துக் கொண்டே.

குழந்தையின் பாட்டி, இன்னொரு சுகாதார அலுவலரான சாவித்ரி நாயக் மற்றும் ஆரம்ப சுகாதார ஊழியரான மங்கி கஞ்ச்லான் ஆகிய மூன்று பெண்களின் கூட்டு திறன் விடாமுயற்சி மற்றும் அன்பில்தான் கசப்பான மலேரியா மாத்திரைகள் குழந்தையால் விழுங்க முடிகிறது.

மூத்த கிராமப்புற சுகாதார அலுவலரான 39 வயது உர்மிளா குழந்தை பற்றிய தகவல்களை பெரிய பதிவேட்டில் அவருக்கு முன் விளையாடும் குழந்தைகள் எழுப்பும் சத்தத்துக்கு மத்தியில் குறித்துக் கொள்கிறார். அவருடைய தற்காலிக மருத்துவ மையம் சட்டீஸ்கரின் நவுமுஞ்ச்மேடா கிராமத்தின் அங்கன்வாடியின் முற்றத்தின் ஒரு பகுதிதான்.

மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் அங்கன்வாடியில் இரு வேலைகள் நடக்கும். ஒரு பக்கம் குழந்தைகள் எழுத்துகளை கற்றுக் கொண்டிருக்கையில் மறுபக்கம் தாய்களும் கைக்குழந்தைகளும் பிறரும் பரிசோதனைக்காக வரிசையில் நிற்பார்கள். உர்மிளாவும் அவரின் குழுவினரும் காலை 10 மணி அளவில் வருவார்கள். அவர்களின் பைகளை திறந்து பதிவேடுகளையும் தடுப்பு மருந்து உபகரணங்களையும் பரிசோதனை உபகரணங்களையும் எடுத்து வைப்பார்கள். ஒரு மேஜையையும் பெஞ்ச்சையும் முற்றத்தில் போட்டு நோயாளிகளை  பார்க்க தயாராவார்கள்.

சுகானிக்கு அன்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனை, உர்மிளாவும் 35 வயது சுகாதார அலுவலரான சாவித்ரி நாயக்கை உள்ளடக்கிய குழுவினரும் ஆறு கிராமங்களில் ஒரு வருடத்தில் நடத்தும் 400 மலேரியா பரிசோதனைகளில் ஒன்றாகும்.

”மலேரியா நமது மிகப் பெரிய சுகாதார பிரச்சினை,” என்கிறார் நாராயண்பூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அலுவலரான டாக்டர் ஆனந்த் ராம் கோடா. “ரத்த அணுக்களையும் கல்லீரலையும் அது பாதித்து ரத்தசோகையை உருவாக்குகிறது. விளைவாக நலிந்த ஆரோக்கியமே கிட்டும். அதன் காரணமாக வருமானமும் பாதிக்கப்படும். குழந்தைகள் குறைந்த எடையில் பிறப்பார்கள். மொத்தமும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நடக்கும்.”

At a makeshift clinic in an anganwadi, Urmila Dugga notes down the details of a malaria case, after one of the roughly 400 malaria tests that she and her colleagues conduct in a year in six villages in Narayanpur block
PHOTO • Priti David

அங்கன்வாடியில் இருக்கும் தற்காலிக மருத்துவ மையத்தில் உர்மிலா டுக்கா மலேரியா பற்றிய தகவல்களை குறித்துக் கொள்கிறார். நாராயண்பூர் ஒன்றியத்தின் ஆறு கிராமங்களில் ஒரு வருடத்துக்கு அவரும் அவரின் குழுவினரும் சுமாராக 400 மலேரியா பரிசோதனைகள் செய்கின்றனர்

2020ம் ஆண்டில் சட்டீஸ்கரில் மலேரியாவில் 18 பேர் உயிரிழந்தனர். நாட்டிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமும் அதுதான். மகாராஷ்டிரா 10 மரணங்களுடன் இரண்டாவது இடம் வகிக்கிறது. தேசிய நோய் கட்டுப்பாடு திட்ட நிறுவனத்தின்படி 80 சதவிகித மலேரியா பாதிப்புகள் ‘பழங்குடி, மலைவாழ் பகுதிகளிலும் கடினமான சுலபத்தில் செல்ல முடியாத பகுதிகளிலும்”தான் காணப்படுகிறது.

வழக்கமாக இங்கிருக்கும் மக்கள் வேப்பிலைகளை எரித்து கொசுவை விரட்ட விரும்புவார்கள் என்கிறார் உர்மிளா. “அவர்கள் கொசுவலையை பயன்படுத்த வேண்டுமென நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம். வீடுகளுக்கு அருகே இருக்கும் நீர் தேங்கல்களை அப்புறப்படுத்தவும் சொல்கிறோம். வேப்பிலை புகை கொசுக்களை விரட்டுவதில்லை. புகை மறைந்தவுடன் அவை திரும்ப வந்து விடுகின்றன.”

பிறகு உர்மிளா இரண்டாம் முறையாக பெரிய பதிவேடுகளில் ஹலாமிமுன்மேதாவின் துணை சுகாதார மையத்தில் தகவல்கள் குறித்துக் கொள்வார். பதிவேடுகளில் பதிவு செய்யும் வேலையே அவரின் நாளில் மூன்று மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு பரிசோதனையும் பதியப்பட வேண்டும். பலதரப்பட்ட தடுப்பூசிகள், பேறுகாலம் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய பரிசோதனைகள், மலேரியா மற்றும் காசநோய் பரிசோதனைகள், காய்ச்சல், உடல்வலி மற்றும் வலிக்கான முதலுதவிகள் யாவும் பதியப்பட வேண்டும்.

உர்மிலா பேறுகால துணை செவிலியராகவும் இருந்திருக்கிறார். அதற்காக இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார். கிராமப்புற சுகாதார ஊழியராகவும் அவர் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்கிறார். ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் பயிற்சி முகம் வருடத்தின் ஐந்து முறை மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் நடத்தப்படும்.

ஆண் கிராமப்புற சுகாதார ஊழியர்கள் பல தேவைகளுக்கான சுகாதார ஊழியர்களாக வருடத்துக்கு ஒருமுறை மட்டும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். “அது சரியல்ல,” என்கிறார் உர்மிலா. “நாங்களும் அதே வேலையைதான் செய்கிறோம். பயிற்சியும் அதே அளவுதான் இருக்க வேண்டும். என்னை மட்டும் நோயாளிகள் ‘சிஸ்டர்’ என்றும் ஆண் கிராமப்புற சுகாதார ஊழியர்களை ‘டாக்டர்’ என்றும் ஏன் அழைக்கிறார்கள்? இதை உங்களின் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட வேண்டும்!”

Once a month the Naumunjmeta school doubles up as an outpatient clinic for Urmila, Manki (middle), Savitri Nayak and other healthcare workers
PHOTO • Priti David
Once a month the Naumunjmeta school doubles up as an outpatient clinic for Urmila, Manki (middle), Savitri Nayak and other healthcare workers
PHOTO • Priti David

மாதத்துக்கு ஒருமுறை நவுமுஞ்ச்மேதா பள்ளி மருத்துவம் மையமாக உர்மிலாவுக்கும் மங்கி (நடுவே), சாவித்ரி நாயக் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு மாறுகிறது

இச்சமயத்துக்கெல்லாம் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் திரும்பியிருப்பார்கள். சுகானி மருந்து எடுத்துக் கொண்டு உறங்கியதும் பாட்டியிடம் திரும்பி உர்மிலா மலேரியா சிகிச்சை மற்றும் உணவு குறித்து கோண்ட் மொழியில் பேசுகிறார். நாராயண்பூர் மாவட்டத்தின் 78 சதவிகித மக்கள் கோண்ட் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

”நானும் கோண்ட்தான். கோண்டி, ஹால்பி, சட்டீஸ்கரி மற்றும் இந்தி ஆகிய மொழிகளை நான் பேசுவேன். சரியாக மக்களுக்கு விளக்க பேச வேண்டும்,” என்கிறார் உர்மிலா. “ஆங்கிலம் பேசுவதில் சிறு சிக்கல் இருக்கிறது. ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.”.

மக்களுடனான இத்தகைய கலந்துரையாடல்கள்தான் இந்த வேலையில் அவருக்கு பிடித்தமான விஷயம். “மக்களை சந்திப்பதும் அவர்களின் வீடுகளுக்கு நான் செல்வதும் எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு நாளிலும் 20லிருந்து 60 பேரை சந்திக்கிறேன். அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அவர்களின் வாழ்க்கைகளை பற்றி தெரிந்து கொள்வது பிடித்திருக்கிறது. நான் அதிகம் பேச மாட்டேன். அல்லது நான் அப்படி நினைக்கிறேன்,” என சொல்லி சிரிக்கிறார்.

பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆகிவிட்டது. உர்மிலா அவருடைய உணவை எடுக்கிறார். காலையில் செய்த ரொட்டியும் காய்கறி கூட்டும் இருந்தது. அவரின் குழுவினர் அடுத்து வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால் வேகமாக உணவை முடித்துக் கொண்டார். ஒருநாளில் உர்மிலா 30 கிலோமீட்டர் அவரின் ஸ்கூட்டரில் பயணிக்கிறார். அவருடன் சாவித்ரியும் (ஹால்பி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்) செல்கிறார். பெரும்பாலான பயணங்கள் அடர் காடுகளுக்குள் இருக்கும். இருவராக செல்வது பாதுகாப்பு என்கிறார்கள்.

தொடர்ந்து இப்படி இயங்கி உர்மிலாவும் அவரது குழுவினரும் 10லிருந்து 16 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் ஆறு கிராமங்களின் 2500 பேரின் சுகாதார தேவைகளை தீர்த்து வைக்கின்றனர். அவர்கள் செல்லும் 390 வீடுகளில் பெரும்பாலானவை கோண்ட் மற்றும் ஹால்பி பழங்குடி சமூகங்களை சார்ந்தவை. சில குடும்பங்கள் தலித் சமூகங்களை சார்ந்தவை.

Savitri pricking Suhani’s finger for the malaria test. Right: Manki, Savitri and Bejni giving bitter malaria pills to Suhani
PHOTO • Priti David
Savitri pricking Suhani’s finger for the malaria test. Right: Manki, Savitri and Bejni giving bitter malaria pills to Suhani
PHOTO • Priti David

சுகானியின் விரலை மலேரியா பரிசோதனைக்காக குத்துகிறார் சாவித்ரி. வலது: சாவித்ரியும் பெஜ்னியும் கசப்பான மலேரியா மாத்திரைகளை சுகானிக்கு கொடுக்கிறார்கள்

கிராமப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நாள் என குறிப்பிடப்படுகிற அவர்களின் மாதாந்திர வருகை மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும். இந்த நாளில், உர்மிலாவும் அவரின் சக ஊழியர்களும் (ஒரு ஆண் மற்றும் பெண் கிராமப்புற சுகாதார ஊழியர்கள்) தடுப்பூசி பணி, பிறப்பு பதிவுகள், பேறுகால சுகாதாரம் உள்ளிட்ட 28 தேசியத் திட்டங்களின் களநிலவரத்தை பரிசோதிக்கிறார்கள்.

நீண்ட வேலை பட்டியல் இருக்கிறது. உர்மிலாவும் பிற கிராமப்புற சுகாதார ஊழியர்களும்தான் பொது சுகாதார அமைப்பை களத்துக்கு கொண்டு சேர்ப்பவர்கள். அவர்களுக்கும் மேலே மேற்பார்வையாளர்கள், பகுதி மருத்துவர்கள், ஒன்றிய சுகாதார அலுவலர் மற்றும் தலைமை சுகாதார அலுவலர் என ஒரு அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது.

“கிராமப்புற சுகாதார அலுவலர்கள் முன்களப் பணியாளர்கள். சுகாதார அமைப்பின் முகம் அவர்கள்தான். அவர்களின்றி நமக்கு உதவியும் கிடையாது. நம்பிக்கையும் கிடையாது,” என்கிறார் தலைமை சுகாதார அலுவலரான டாக்டர் கோட்டா. நாராயண்பூரின் 74 பெண் மற்றும் 66 ஆண் கிராமப்புற சுகாதார அலுவலர்களும் “குழந்தை மற்றும் பேறுகால சுகாதாரம், மனநலம், காசநோய், தொழுநோய், ரத்தசோகை முதலியவற்றை கவனிக்கிறார்கள். அவர்களின் வேலை நிற்பதே இல்லை,” என்கிறார் அவர்.

சில நாட்கள் கழித்து மேலெச்சூர் கிராமத்தின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நாளில், உர்மிலா 15 பெண்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். அவர்களில் பெரும்பாலானோர் இளம் குழந்தைகளை கொண்டிருக்கின்றனர்.

காத்திருப்பவர்களில் ஒருவரான ஃபுல்குவார் கராங்கா காண்டா சமூகத்தை (சட்டீஸ்கரின் பட்டியல் சாதி) சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் உர்மிலா கள ஆய்வுக்கு அங்கு சென்றிருந்தபோது ஃபுல்குவார் அவரிடம் தான் பலவீனமாக உணர்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு ரத்தசோகை இருக்கலாம் என யூகித்து இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்திரைத்தார் உர்மிலா. அவற்றை வாங்குவதற்காக அவர் வந்திருக்கிறார். பிற்பகல் 2 மணி ஆகிவிட்டது. அவர்தான் இன்றைய கடைசி நோயாளி.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (2015-16) சட்டீஸ்கரின் 15-49 வயது பெண்களில் கிட்டத்தட்ட பாதி அளவு (47 சதவிகிதம்) ரத்தசோகை கொண்டிருக்கின்றனர். விளைவாக மாநிலத்தின் 42 சதவிகித குழந்தைகளுக்கும் ரத்தசோகை இருக்கிறது.

Savitri pricking Suhani’s finger for the malaria test. Right: Manki, Savitri and Bejni giving bitter malaria pills to Suhani
PHOTO • Priti David

உர்மிலா ஒருநாளில் சுமாராக 30 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பயணிக்கிறார். வாகனத்தின் பின்னிருக்கையில் சாவித்ரி அமர்ந்து கொள்கிறார். கிராமங்களுக்கு செல்லும் அவர்களின் பெரும்பாலான பயணங்கள் அடர்காடுகளின் வழியே செல்லும். இருவராக செல்வது பாதுகாப்பு என்கின்றனர்

இளம்பெண்களில் இத்தகைய குறைபாட்டை அவர்களின் திருமணத்துக்கு முன்பே தீர்ப்பது கடினமானது என்கிறார் உர்மிலா. “பெண்கள் பெரும்பாலும் 16, 17 வயதுகளிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். ஒரு சில மாதவிடாய் காலம் தப்பினால் மட்டுமே எங்களிடம் அவர்கள் வருகிறார்கள். அச்சமயத்தில் அவர்கள் கர்ப்பமாக இருப்பார்கள். பிரசவத்துக்கு முன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இரும்புச் சத்து மாத்திரைகள் முதலியவற்றை நான் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது,” என்கிறார் அவர் பதிவேட்டில் கடைசி விவரங்களை எழுதியபடி.

கருத்தடை ஆலோசனை வழங்குவதுதான் உர்மிலாவின் வேலையிலேயே முக்கியமான பகுதி. அது இன்னும் அதிக தாக்கம் கொடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். “திருமணத்துக்கு முன் அவர்கள் என்னை பார்ப்பதில்லை. எனவே கரு தரிக்க அவகாசம் எடுப்பதை பற்றியோ இடைவெளி விடுவதை பற்றியோ பேச முடிவதில்லை,” என்கிறார் அவர். எனவே உர்மிலா மாதத்தில் ஒரு பள்ளிக்கேனும் சென்று இளம்பெண்களிடம் பேச முயலுகிறார். தண்ணீர் எடுக்க வருவது போன்ற தருணங்களில் இளம்பெண்களுக்கு சொல்லுவார்கள் என்கிற நம்பிக்கையில் முதிய பெண்களிடம் பேசி ஆலோசனைகள் வழங்கவும் முயலுகிறார்.

தற்போது 52 வயதாகும் ஃபுல்குவார்தான் உர்மிலா கிராமப்புற சுகாதார அலுவலராக 2006ம் ஆண்டில் பணிபுரிய தொடங்கியதற்கு பின் க்ருத்தடை செய்ய ஒப்புக் கொண்ட முதல் பெண். 10 வருடங்களில் அவர் நான்கு மகன்களையும் ஒரு பெண்ணையும் பெற்றெடுத்திருக்கிறார். வளர்ந்து வரும் குடும்பம் அவர்களின் சொற்ப நிலத்துக்கு எத்தனை பிரச்சினையாக மாறும் என்பதை புரிந்து கருத்தரிப்பதை நிறுத்த வேண்டுமென விரும்பினார். “அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது தொடங்கி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை என்னுடன் உர்மிலா எல்லா கட்டங்களிலும் இருந்தார். என்னுடன் தங்கி அடுத்த நாள் என்னை அழைத்து வந்தார்,” என அவர் நினைவுகூர்கிறார்.

இருவருக்குமான உறவு நீடித்ததன் விளைவாக ஃபுல்குவாரின் மகன்களுக்கு திருமணமானபோதும் அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபோதும் இரண்டு மருமகள்களையும் உர்மிலாவிடம் அவர் அழைத்து வந்தார். அடுத்தடுத்த கர்ப்பங்களுக்கு இடையே இடைவெளி விடுவதன் அவசியத்தை அவர் விளக்கினார்.

“ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நான் கருவுற்றேன். அதன் வலி என்னவென எனக்கு தெரியும்,” என்கிறார் ஃபுல்குவார் இரும்புச்சத்து மாத்திரைகளை இடுப்பில் இருக்கும் பையில் வைத்து புடவையை சரி செய்து கிளம்பிக் கொண்டே. அவரின் இரு மருமகள்களுக்கும் காப்பர் டி பொருத்தப்பட்டிருக்கிறது. 3லிருந்து 6 வருடங்கள் வரை அவர்கள் அடுத்த கர்ப்பத்துக்கு காத்திருந்தனர்.

Left: Phulkuwar Karanga says, 'I got pregnant every two years, and I know the toll it takes'. Right: Dr. Anand Ram Gota says, 'RHOs are frontline health workers, they are the face of the health system'
PHOTO • Urmila Dagga
Left: Phulkuwar Karanga says, 'I got pregnant every two years, and I know the toll it takes'. Right: Dr. Anand Ram Gota says, 'RHOs are frontline health workers, they are the face of the health system'
PHOTO • Courtesy: Dr. Gota

இடது: ’ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நான் கருவுற்றேன். அதன் வலி என்னவென எனக்கு தெரியும்,’ என்கிறார் ஃபுல்குவார் வலது: ‘கிராமப்பூற சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள். அவர்கள்தான் சுகாதார அமைப்பின் முகம்; என்கிறார் ஆனந்த் ராம் கோட்டா

ஒரு வருடத்தில் 18 வயதுக்கும் கீழ் வயது கொண்டிருக்கும் திருமணமாகாத பெண்களில் குறைந்தபட்சம் மூன்று தேவையற்ற கர்ப்பங்களை உர்மிலா பார்த்திருக்கிறார். அவர்களில் பெரும்பாலானோரை தாய்களே அழைத்து வந்திருக்கின்றனர். கருக்கலைப்பு செய்ய விரும்பியிருக்கின்றனர். கருக்கலைப்புகள் வழக்கமாக மாவட்ட மருத்துவமனையில்தான் நடக்கும். அவர்களின் நிலையை பற்றி சொல்ல தயங்கிக் கொண்டு தன்னுடன் கண்ணாமூச்சி ஆடுவார்கள் என்கிறார் உர்மிலா. “கர்ப்பத்தை பற்றிய என் பரிசோதனையை கோபமாக நிராகரித்துவிட்டு உள்ளூர் மருத்துவச்சியிடம் செல்வார்கள். அல்லது கோவில்களுக்கு சென்று மாதவிடாய் மீண்டும் வர வேண்டுமென வேண்டுவார்கள்,” என்கிறார். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் 45 சதவிகித கருக்கலைப்புகள் வீட்டில்தான் நடக்கின்றன.

ஆண்களையே சுகாதார மையங்களில் பார்க்காத அவர், ஆண்களை பற்றிய கடும் விமர்சனங்களை தவிர்க்கிறார். “மிகவும் அரிதாகதான் அவர்கள் இங்கு வருகிறார்கள். கர்ப்பம் என்பது பெண்களின் பிரச்சினை என ஆண்கள் கருதுகின்றனர். சில ஆண்கள் கருத்தடைக்கு ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதை பெண்கள்தான் செய்து கொள்ள வேண்டும். கணவன்மார்கள் ஆணுறைகளை பெற்றுவரக் கூட அவர்களின் மனைவிகளைதான்  துணை மையத்துக்கு அனுப்புவார்கள்!”

உர்மிலாவின் கணக்குப்படி அவர் வேலை பார்க்கும் பகுதியில் வருடத்தில் ஒரு ஆண் கருத்தடை செய்து கொண்டிருக்கலாம் என்கிறார். “இந்த வருடம் (2020) கிராமத்திலிருந்து ஒரு ஆண் கூட கருத்தடை செய்து கொள்ளவில்லை,” என்கிறார் அவர். “நாங்கள் அறிவுறுத்ததான் முடியும். கட்டாயப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் அதிக பேர் முன் வருவார்களென நம்புவோம்.”

காலை 10 மணிக்கும் முன்பே தொடங்கிய அவரின் நீண்ட வேலை நாள் மாலை 5 மணி அளவில் முடிவுக்கு வருகிறது. ஹலாமிமுன்மேதாவில் இருக்கும் வீட்டுக்கு அவர் திரும்பும் அதே நேரத்தில் காவலரான அவரின் கணவர் 40 வயது கன்னையா லால் துக்காவும் வந்துவிடுவார். பிறகு ஆறு வயது மகள் பாலக்குடன் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்ய வைக்க வேண்டும். வீட்டுவேலைகளும் செய்ய வேண்டும்.

வளர்ந்தபோது மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பியதாக உர்மிலா கூறுகிறார். இந்த வேலை சிரமமாக இருந்தாலும் மிகவும் பிடிப்பதாகவும் அவர் சொல்கிறார். “இந்த வேலை எனக்கு அதிக மதிப்பை பெற்று தருகிறது. எந்த ஊருக்கு சென்றாலும் மக்கள் என்னை வரவேற்று நான் சொல்வதை கேட்பார்கள். இதுதான் என் வேலை,” என்கிறார் அவர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Priti David

ਪ੍ਰੀਤੀ ਡੇਵਿਡ ਪੀਪਲਜ਼ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਇੰਡੀਆ ਦੇ ਇਕ ਪੱਤਰਕਾਰ ਅਤੇ ਪਾਰੀ ਵਿਖੇ ਐਜੁਕੇਸ਼ਨ ਦੇ ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਪੇਂਡੂ ਮੁੱਦਿਆਂ ਨੂੰ ਕਲਾਸਰੂਮ ਅਤੇ ਪਾਠਕ੍ਰਮ ਵਿੱਚ ਲਿਆਉਣ ਲਈ ਸਿੱਖਿਅਕਾਂ ਨਾਲ ਅਤੇ ਸਮਕਾਲੀ ਮੁੱਦਿਆਂ ਨੂੰ ਦਸਤਾਵੇਜਾ ਦੇ ਰੂਪ ’ਚ ਦਰਸਾਉਣ ਲਈ ਨੌਜਵਾਨਾਂ ਨਾਲ ਕੰਮ ਕਰਦੀ ਹਨ ।

Other stories by Priti David
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan