நெடுந்தூர ஓட்டப்பந்தய வீராங்கனையான லலிதா பாபர் (25) தேசிய அளவிலான ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொள்ள 2௦௦5-ல் வெறுங்காலோடு வந்தார். ஓட்டப்பந்தயத்தில் அவரைக் கலந்து கொள்ள மறுத்தார்கள். அப்பொழுது தான் அவர் ஒரு ஜோடி ஷூவை வாங்கினார். அவர் பிறந்து, வளர்ந்த சத்தாரா மாவட்டத்தில் உள்ள ஷூ கடையில் அதை வாங்கினார். சக வீராங்கனைகள் என்ன பிராண்ட் ஷூ போடுகிறார்கள் என்று தெரியாமல், பொதுவாக மக்கள் வாங்கும் ஷூவை 1,2௦௦ ரூபாய் கொடுத்து வாங்கினார். ஷூ வாங்குவதற்கு ஆன செலவு அவர் கையைக் கடித்தது எனச் சொல்லவேண்டியதில்லை.
“ எனக்கு அப்போ எல்லாம் அடிடாஸ், பூமா, ரீபுக் பத்தில்லாம் ஒன்னும் தெரியாது. அந்த ஷூ இன்னமும் மனசில இருக்கு. பாமா அப்படின்னு ஒரு உள்ளூர் கம்பெனி ஷூ அது. ஓடுறதுக்கு வசதியான ஷூவை நான் வாங்க அதுக்கப்புறம் பல வருஷம் ஆச்சு.” என்று நினைவுகளில் லலிதா மூழ்குகிறார். ஜனவரி 2௦14-ல் மும்பை மாரத்தானில் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று லலிதா ஹாட்ரிக் அடித்தார். அதேபோல நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையான 2:50:31-ஐ படைத்தார். இந்த வெற்றியின் எந்தச் சுவடும் இல்லாமல், பணிவும், அமைதியும் ததும்ப அவர் வாழ்த்து அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். தனக்குக் கிடைத்த பரிசுப்பணத்தைத் தன்னுடைய கடைசித் தம்பியின் படிப்பு செலவுக்குப் பயன்படுத்தவேண்டும் என விரும்புகிறார்.
சத்தாரா மாவட்டத்தின் வறட்சி மிகுந்த மான் தாலுகாவின் மொஹி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் லலிதா பிறந்தார். வாட்டி எடுக்கும் வறிய வாழ்க்கையிலேயே அவர் வளர்ந்தார். அவரின் பெற்றோர் தங்களுடைய மகளின் ஓட்டப்பந்தயக் கனவுகளுக்குத் தடையாக வரும் எல்லாவற்றையும் தகர்த்தெறிய தங்களால் முடிந்ததைத் தொடர்ந்து கண்ணும், கருத்துமாகச் செய்தார்கள். “நாலு பசங்க இருந்த என் குடும்பத்தில நான் நல்ல ஓடணும்னு அவங்க வயித்தை காயப்போட்டு எனக்குச் சாப்பாடு போட்டாங்கனு அப்ப எனக்குத் தெரியாது.” என்கிறார் குடும்பத்தின் மூத்த பெண்ணான லலிதா.
ஓட்டப்பந்தயத்தின் மீதான காதல் பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர்கள் தினமும் ஓடத்துவங்கிய காலத்தில் ஏற்பட்டது. “எனக்குச் சின்ன வயசிலே இருந்தே விளையாட்டுனா அவ்வளவு ஆசை. முதல்ல கோகோ தான் விளையாடினேன். அப்புறம் தனியா ஆடி ஜெயிக்கணும்னு தோணுச்சு. ஸ்கூலுக்கு நாலு கிலோமீட்டர் ஓடிட்டு, திரும்ப வீட்டுக்கு விர்ர்னு ஓடி வர்றது ரொம்பப் பிடிச்சு இருந்தது. எங்க அம்மா-அப்பாவுக்குப் பெருசா விளையாட்டுப் பத்திலாம் தெரியாது. ஆனா, நல்ல பண்ணும்மான்னு என் பெரியப்பா ஊக்கம் கொடுத்து, பயிற்சிலாம் தந்தார்.” என்கிறார் லலிதா.
லலிதா பள்ளிக்காலத்தில் தடகளத்துக்குள் நுழைந்தார், பின் மாவட்ட, மாநில, தேசிய அளவில் கலக்கினார். 2௦௦5-ல் புனேவில் நடந்த இருபது வயதுக்கு உட்பட்டோருக்காண ஓட்டப்பந்தயப் போட்டியில் தங்கப்பதக்கம் தட்டினார். அப்பொழுது தான் இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக ஆகும் வாய்ப்பு வந்தது. “வீட்டுக்கு அனுப்ப நிலையான வருமானம் வேணும்னு நானும் வேலையில சேர்ந்துட்டேன்” என்கிற லலிதா பெங்களூருவில் உள்ள தேசிய கேம்ப்பில் அடுத்த வருடத்தில் இருந்து இன்றுவரை பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறார். இந்த வருடம் (2௦14) காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கண் வைத்திருக்கிறார். இவரின் தங்கை ஜெயஸ்ரீ மும்பை ரயில்வேயில் காவலராகப் பணியாற்றுகிறார். “என்னுடைய அக்காவைப் பற்றி நினைக்கிற பொழுதே சிலிர்க்கிறது. அவள் களத்தில் பாய்ந்து ஓடுவது தான் என் நினைவுக்கு வருகிறது. அவரைப்பார்த்து நானும் ஓட்டப்பந்தயத்தில் உத்வேகம் பெற்றேன். காவல்படை நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறேன்.” என்கிறார் ஜெயஸ்ரீ.
லலிதாவின் பெற்றோர் வயலில் பாடுபடுகிறார்கள். தங்களுடைய மகள் பதக்கங்களையும், எக்கச்சக்க பாராட்டுக்களையும் உலகம் முழுக்கப் பெறுவதை நேரில் காணமுடியாமல் அவர்களின் வறுமை தடுக்கிறது. “நான் எப்போ டிவியில் வந்தாலும் வெச்ச கண்ணு வாங்காம பாத்துடுவாங்க. செய்தித்தாளில வர என்னப்பத்திய கட்டுரையை எல்லாம் எங்க அம்மா சேமிச்சு வெச்சிருக்காங்க. வீட்டுக்கு ஒன்றரை வருஷத்துக்கு ஒரு முறை போவேன். ஒரு ரெண்டு நாள் தங்க முடிஞ்சா அதிகம். கிராமத்துக்குப் போன குடும்பத்தோட இருக்கத்தான் ஆசை. ஆனா, எல்லாரும் ஊரில பாக்க வந்துருவாங்க.” என்று ஊர் நினைவுகளில் கரைகிறார் லலிதா.
மும்பை மாரத்தானில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது நாள் லலிதா பாபர் கட்கோபர் தொடர்வண்டி நிலைய பயணச்சீட்டு பரிசோதகராக மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்
நேர்முகத்துக்குப் பின்பு:
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் லலிதா பாபர் கலந்து கொள்வதற்கு முன்பு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ( June 2015) லலிதா தங்கப்பதக்கம் வென்றார். மேலும், நியூ ஸ்டீப்பில்சேஸ் எனும் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையாக – 9:34.13 எனும் இலக்கை எட்டினார். அது அவரை ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற வைத்தது. அவர் மாரத்தான் போட்டிக்கும் தகுதி பெற்றார். 15-வது தடகள கூட்டமைப்பின் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பிஜிங்கில் அவர் எட்டாவது இடம் பிடித்தார். அந்த ஓட்டப்பந்தயப் போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெற்றதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குத் தேர்வு பெற்ற முதல் இந்திய வீரர் ஆனார்.
இந்தக்கட்டுரை முதன்முதலில் ஜனவரி 22, 2014 The Hindu நாளிதழில் வெளிவந்தது .