மைதானத்தை பார்க்கையில் கைலாஷ் கந்தகாலேயின் கண்கள் விரிந்தன. “நிறைய விவசாயிகள் இங்கே இருக்கிறார்கள்,” என்றார் நிலமற்ற 38 வயது தொழிலாளர்.
தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரோடு ஜனவரி 24ம் தேதி கைலாஷ்ஷும் சேர்ந்து கொண்டார். “மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க இங்கு வந்துள்ளேன். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் என் குடும்பத்துக்கு கிடைக்கும் உணவை அவை பாதிக்குமென தெரிந்து கொண்டேன்,” என்கிறார் கைலாஷ். அவரின் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தக்காளி, வெங்காயம், நெல் முதலியவற்றை விளைவிப்பவர்கள்.
ஜனவரி 25லிருந்து 26ம் தேதி வரை சம்யுக்தா ஷேத்கரி கம்கர் மோர்ச்சா ஒருங்கிணைத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அகமத்நகர் மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் 500 கோலி மகாதேவ் ஆதிவாசிகளில் அவரும் ஒருவர். அகோலா, பார்னெர் மற்றும் சங்கம்னெர் தாலுகாக்களை சேர்ந்த ஆதிவாசி விவசாயிகள் தலா 200 ரூபாய் செலுத்தி மும்பை வரையிலுமான 300 கிலோமிட்டர் தூரத்தை கடக்க 35 வேன்களை அமர்த்தினர்.
காம்பே கிராமத்தை சேர்ந்த கைலாஷ்தான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். மனைவி பாவனா, முதிய பெற்றோர் மற்றும் மூன்று குழந்தைகள் குடும்பத்தில் இருக்கின்றனர். “நான் பிறருடைய நிலத்தில் வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் வருடத்தில் 200 நாட்களுக்கு மேல் வேலை செய்ய என் கால் ஒத்துழைப்பதில்லை,” என்கிறார் அவர். 13 வயதில் அவருடைய கால் உடைந்து போனது. போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாததால், முடமாகிவிட்டது. பாவ்னாவாலும் கடின வேலைகள் செய்ய முடியாது. அவரின் வலது கையில் குறைபாடு கொண்டது.
குறைவான நிலையற்ற வருமானம் கொண்ட கந்தாகலே குடும்பத்துக்கு பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் மிகவும் முக்கியம். 2013ன் உணவு பாதுகாப்பு சட்டப்படி 80 கோடி பேருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து கிலோ தானியங்களை மாதந்தோறும் மானிய விலையில் கிடைக்க வழி செய்கிறது இச்சட்டம். அரிசி ஒரு கிலோ 3 ரூபாய். கோதுமை ஒரு கிலோ 2 ரூபாய். பருப்பு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்.
ஆனால் கைலாஷ்ஷின் 7 பேர் குடும்பத்துக்கு 15 கிலோ கோதுமையும் 10 கிலோ அரிசியும் மட்டும்தான் கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை விட 10 கிலோ குறைவு. காரணம், இரு குழந்தைகளின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இல்லாமல் போனதுதான்.
“இந்த 25 கிலோவும் 15 நாட்களில் தீர்ந்துவிடும். பிறகு எங்களுடைய பசியை நாங்கள் அடக்க வேண்டும்,” என்கிறார் கைலாஷ். ஒவ்வொரு மாதமும் பொது விநியோக உணவுப் பொருட்களை வாங்க அவர் நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று வருகிறார். “எண்ணெய், உப்பு மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டும். விலையுயர்ந்த அரிசியை சந்தைக் கடையிலிருந்து வாங்க யாரிடம் பணம் இருக்கிறது?”





