”கொரோனா கொள்ளை நோய் தொற்றத் தொடங்கியதிலிருந்து (கொச்சியா) தரகர் எங்கள் ஊருக்கு வருவதையே நிறுத்திவிட்டார்” என்கிற ஜமுனா பாய் மண்டவி, ” பூக்கூடைகளை வாங்கிச் செல்ல அவர் இங்கு வந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. அதனால் எங்களால் எதையும் விற்கவும் முடியவில்லை; வேறு பொருள்களை வாங்கவும் எங்களிடம் பணம் இல்லை.” என வெதும்புகிறார்.
நான்கு குழந்தைகளுடன் தாயான ஜமுனா பாய், தம்தாரி மாவட்டத்தின் நாக்ரி வட்டாரம், கௌகபாரா கிராமத்தில் வாழ்ந்துவருகிறார். கிட்டத்தட்ட 40 வயதான இவர், கமர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். சத்திஸ்கரில் இந்த சமூகமானது, ’ பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட பழங்குடியினர் குழு (பிவிடிஜி)’ என மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றாகும். ஊரின் ஒரு மையத்தில் இவரின் குடும்பத்தைப் போல 36 கமர் குடும்பங்கள் இருக்கின்றன. ஜமுனாவைப் போலவே மற்ற எல்லாருமே சுற்றுப்புறக் காட்டுப் பகுதியிலிருந்து மூங்கில் எடுத்துவந்து, கூடைமுடைந்து அவற்றின் மூலம் வாழ்க்கைக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.
ஜமுனா பாய் குறிப்பிடும் 'கொச்சியா' அவருக்கு மட்டுமின்றி கூடைமுடையும் மற்றவர்க்கும் மிகவும் முக்கியம். அவர்கள்(கொச்சியா) இடைத்தரகர்கள் அல்லது வணிகர்கள், வாரம்தோறும் கிராமத்துக்கு வந்து மொத்தமாக கூடைகளை வாங்கிச் செல்வார்கள். பிறகு, அவற்றை நகரச் சந்தைகளிலும் கிராமங்களில் அவ்வப்போது கூடும் சந்தைகளிலிலும் சில்லறை விற்பனை முறையில் விற்பார்கள்.
கௌகபாராவுக்கு அவர்கள் கடைசியாக வந்துபோய் விரைவில் ஒரு மாதம் ஆகப்போகிறது. கோவிட் -19 ஊர்முடக்கத்துக்குப் பிறகு, இங்கு அவர்கள் வருவது இல்லை.
ஜமுனாவுக்கு நான்கு பிள்ளைகள் - இலாலேஸ்வரி, 12, ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை; துலேஷ்வரி, 8, லீலா, 6, மற்றும் இலக்மி, 4. அவருடைய இணையர் சியாராம் தன் 40-களின் நடுக்கட்டத்தில் இறந்துபோனார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததை அடுத்து, குழந்தைகளை வைத்துக்கொண்டு உயிர்வாழவே கடுமையாகப் போராடிவருகிறார், ஜமுனா. ஊர்முடக்கமானது அவர்களின் கூடைவிற்பனை வருமானத்தை மட்டுமன்றி, வேறு ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் பாதிக்கச் செய்துள்ளது.
இப்போது, உள்ளூர் அளவிலான மது தயாரிப்பதற்குப் பயன்படும் காட்டுப்பகுதி மகுவா மலர்களுக்கான பருவம் ஆகும். கையில் ஒன்றுமில்லாத காலங்களில் இங்குள்ள பழங்குடியினருக்கு இது ஒரு வருவாய் வழியாகும்.






