மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேயிலை தோட்டத்தில் கரிமுல் ஹக் வேலை செய்கிறார். இவர் தலாபாரி மற்றும் அருகாமை கிராம மக்களை மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்கிறார். அளவான வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலாபாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கிராந்தியில் உள்ளது. இப்பகுதிக்கு என முறையான நான்கு சக்கர அவசர ஊர்தி சேவை கிடையாது.
கரிமுலின் தனித்துவமான ‘இருசக்கர அவசர ஊர்தி‘ மற்றும் கைப்பேசி எண் (மருத்துவ தேவையில் உள்ள மக்கள் அழைப்பதற்கு) ஆகியவை கிராமங்களில் மிகவும் புகழ்பெற்றது. வட்டார அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் மருத்துவர்களும் அவரது சேவையை நன்கு அறிந்துள்ளனர்.
தேயிலை தோட்ட வேலையில் கரிமுல் மாதந்தோறும் ரூ.4000 ஈட்டுகிறார். அதில் 25 சதவீதத்தை இருசக்கர வாகன எரிபொருள் மற்றும் பிற செலவுகளுக்கு ஒதுக்குகிறார். மற்றொரு 25 சதவீத பணத்தின் மூலம் வங்கிக் கடனை திருப்பி செலுத்துகிறார். கூடுதல் பணத்தை கரிமுல் தேடவில்லை. அவரது பணிக்கு அல்லா பரிசளிப்பார் என அவர் நம்புகிறார்.
மாணவரால் தயாரிக்கப்பட்ட இக்காணொலியில் இடம்பெறும் ‘கோல்ட்’ எனும் அழகான பின்னணி இசையை இசைக்க அனுமதித்த ஜோர்க் மென்டசுக்கு பாரி நன்றித் தெரிவிக்க விரும்புகிறது.
கரிமுல் ஹக்கிடம் குழுவை அறிமுகம் செய்ததுடன் இத்திரைப்படத்திற்கான இருப்பிட மேலாளராகவும் பங்காற்றியவர் அனுசுயா சவுத்ரி. திரைப்படத்தின் ஒலி மேலாளராக பணியாற்றியவர் மவுமிதா புரக்யஷ்தா.
இந்த இருவருடன் சேர்ந்து பணியாற்றிய மூன்று இயக்குநர்களும் (கீழே குறிப்பிடப்பட்டுள்ளது) சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் முதுநிலை நான்காவது செமஸ்டர் மாணவர்கள்.
தமிழில்: சவிதா