கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின் சூரியன் மறையும் வேளையில், அருகே இருக்கும் காடுகளுக்குள் இருந்து எழும் மைனாவின் குரலை அடங்கச் செய்கின்றன துணை ராணுவப்படையின் காலடி சப்தங்கள். கிராமங்களை சுற்றி அவர்கள் மீண்டும் ரோந்து வருகிறார்கள். மாலை நேரங்கள்தாம் அவளுக்கு அச்சத்தை கொடுக்கின்றன.
தேமதி என தனக்கு ஏன் பெயர் சூட்டப்பட்டது என்பது அவளுக்கு தெரியாது. “அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த வீரம் நிறைந்த பெண். ஒற்றையாய் நின்று பிரிட்டிஷ் படையை விரட்டி அடித்தவர்,” என ஆர்வத்துடன் தாய் கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவள் தேமதியை போல் கிடையாது. எல்லாவற்றுக்கு பயம் கொள்பவள்.
வயிற்று வலி, பசி, குடிநீர் தட்டுப்பாடு, பணத்துக்கு தட்டுப்பாடு, சந்தேகப் பார்வை, மிரட்டும் பார்வை, கைதுகள், துன்புறுத்தல்கள், இறப்புகள் போன்ற விஷயங்களுடன் வாழ அவள் பழகிக் கொண்டாள். அவளுக்கென காடும் மரங்களும் வசந்தகாலமும் எப்போதும் இருக்கிறது. தாயின் மணத்தை குங்கிலியப் பூவில் அடைகிறாள். பாட்டி பாடிய பாடல்களின் எதிரொலிகளை காடுகளில் கேட்கிறாள். அவை எல்லாமும் இருக்கும் வரை அவளுக்கு பிரச்சினைகளே இல்லை.
ஆனால் இப்போது அவளை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். அவளின் குடிசையிலிருந்து, கிராமத்திலிருந்து, நிலத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். வெளியேறாமல் இருக்க ஒரு துண்டு காகிதத்தை காட்டச் சொல்கிறார்கள். குணப்படுத்தும் சக்தி கொண்ட பல்வேறு மரங்கள், மூலிகைகள், மரப்பட்டைகள், இலைகள் ஆகியவற்றை பற்றி அவளின் தந்தை சொல்லிக் கொடுத்திருந்தது போதவில்லை. பழங்களையும் சுள்ளிகளையும் சேகரிக்க ஒவ்வொரு முறை காட்டுக்குள் செல்லும்போதும் அவள் பிறந்த இடத்தை தாய் காட்டியிருக்கிறார். காடுகள் பற்றிய பாடல்களை பாட்டி கற்று கொடுத்திருக்கிறார். மொத்த இடத்தையும் சகோதரனுடன் ஓடியாடி சுற்றியிருக்கிறாள். பறவைகளை வேடிக்கை பார்த்திருக்கிறாள். அவை கத்தும் விதங்களை திரும்ப கத்தியிருக்கிறாள்.
இந்த அறிவும் இத்தகைய கதைகளும் பாடல்களும் பால்யகால விளையாட்டுகளும் எதற்கேனும் ஆதாரமாக இருக்க முடியுமா? அங்கே அமர்ந்து அவளுக்கு சூட்டப்பட்டிருந்த பெயரை பற்றி யோசித்தாள். அப்பெயருக்குரியவரை பற்றியும் சிந்தித்தாள். காடுகளுக்கு உரியவள் என்பதை தேமதி எப்படி உறுதிபடுத்தியிருப்பார்?



