தபன் மொண்டலை பலர் 'அண்ணா' என்றே அழைக்கின்றனர், ஏனெனில், அவர் திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்தை போல இருப்பதாக சிலர் கூறுகின்றனர் (ரஜினிகாந்த்தும் பிரபலமாக, 'மூத்த சகோதரர்' என்று பொருள்படும் முறையில் அண்ணா என்றே அழைக்கப்படுகிறார்). ஆனால் மொண்டல் மற்றொரு வகையான சிலை செய்வதற்காக வதோதராவில் நன்கு அறியப்படுகிறார் - அநேகமாய் இந்நகரில் 5 முதல் 9 அடி உயர தெய்வச் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிசால் அல்லாமல் களிமண்ணால் செய்யும் ஒரே சிற்பி இவராகத்தான் இருப்பார்.

கணபதி மற்றும் பிற தெய்வங்களை வடிவமைக்கும் போது வங்கத்தின் சிலை தயாரிக்கும் நுட்பங்களையும் அத்துடன் அவர் இணைக்கிறார். "குமர்துளியின் - வங்கத்திலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள - முத்திரைகளான களிமண் சிலைகளை நான் வங்கத்திலிருந்து இங்கு கொண்டு வந்துள்ளேன்", என்று அவர் கூறுகிறார்.

ஸ்ரீ ராம் கிருஷ்ணா பிரதிமலை என்று அழைக்கப்படும் தபனின் பட்டறை - இந்நகரில் இருக்கும் சுமார் 30 பட்டறைகளுல் ஒன்று, இது மத்திய வதோதராவின் பஞ்சவதி பகுதியில் உள்ளது. இங்கு ஒரு சாய்வான ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் அச்சுகளும், வர்ணங்களும், களிமண் மற்றும் கருவிகள் ஆகியன நடைபாதையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. உச்ச பருவத்தில், சாலையின் மறுபுறத்தில் மூங்கில் களைகளால் ஆதரிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்ட பிளாஸ்டிக் கூரைகளும் வருகிறது, இங்கே தான் உயரமான கணபதி சிலைகள் செதுக்கப்படும்.

இந்த பட்டறை வருடம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது - பருவம் மற்றும் தேவையைப் பொருத்து, கணபதி, துர்கா, விஷ்வகர்மா, சரஸ்வதி மற்றும் பிற தெய்வங்களின் சிற்பங்கள் வடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தபன் மற்றும் அவரது சக ஊழியர்கள் 5 - 9 அடி உயரமுள்ள 10 கணபதி சிலைகளை உருவாக்குகின்றனர், இது  முன் பதிவு செய்யப்பட்ட சிலைகளின் எண்ணிக்கையைப் பொருத்து - ஒவ்வொன்றும் 20,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகும்,  என்று அவர் கூறுகிறார். அவர்கள் மூன்று அடி உயரமுள்ள 20 - 30 சிலைகளும் மற்றும் 40 - 50 சிறிய அளவிலான கணபதி சிலைகளையும் செய்கின்றனர் - அவற்றின் விலை ரூபாய் 2,000 தில் இருந்து ரூபாய் 10,000 வரை இருக்கிறது.

'The clay idols are imprints of Kumartuli, which I have brought here from Bengal', says Tapan Mondal
PHOTO • Aditya Tripathi

'குமர்துளியின் முத்திரைகளான களிமண் சிலைகளை, நான் வங்கத்திலிருந்து இங்கு கொண்டு வந்துள்ளேன்', என்று கூறுகிறார் தபன் மொண்டல்.

தற்போது 46 வயதாகும் தபன், சிறுவனாக இருந்தபோது தனது தந்தை ஆதிர் மொண்டலிடமிருந்து சிலைகள் உருவாக்கும் கலையை கற்றுக் கொள்ள துவங்கினார். மேற்கு வங்கத்தின் உலுபெரியா தாலுகாவிலுள்ள கௌரிபூர் கிராமத்தில் இக்குடும்பம் வாழ்ந்து வந்தது, இது குமர்துளியில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இதுவே கொல்கத்தாவின் பழைய குயவர்களின் காலனி ஆகும். "1984 ஆம் ஆண்டில், ஒரு குடும்ப நண்பர், என்னையும் எனது தந்தையையும் இங்கு (சிலை தயாரிக்கும் பட்டறைகளில் உதவியாளராக பணியாற்ற) அழைத்து வந்தார். ஒவ்வொரு வருடமும் ஒரு மாதத்திற்கு நாங்கள் இங்கு வருவோம்", என்று தபன் நினைவு கூர்கிறார். மேற்கு வங்கத்தில் பருவம் முடிந்த பிறகு அவர்கள் இங்கு வருவர் மேலும் துர்கா பூஜைக்கான ஆர்டர்கள் வரத் துவங்கும் நேரத்தில் மீண்டும் திரும்பி விடுவர்.

1992 ஆம் ஆண்டில், அவரது தந்தை வீடு திரும்பிய பிறகும், தபன் வதோதராவில் ஒரு கட்டுமான தளத்தில் சில மாதங்கள் தங்கியிருந்து வேலை செய்தார். "நான் கனமான பொருட்களை தூக்குவதை விரும்பவில்லை, ஆனால் துர்கா பூஜை நாட்களைத் தவிர வேறு நாட்களில் நான் அங்கு என்ன செய்ய முடியும்? இது வயிற்றை பற்றிய ஒரு கேள்வி..." மேலும் அவர் கூறுகிறார், ஒரு நாள், "குஜராத்தி சாஹேப் ஒருவர் நான் தொழிலாளர்களின் குடியிருப்பில் கடவுள்களின் ஓவியங்களை வரைவதைக் கண்டார். அவர் என்னிடம் உன்னால் கணேசரை வரைய முடியுமா என்று கேட்டார்". அதன் பின்னர் அவர் மத்திய வதோதராவில் உள்ள  மாண்டுவியில் ஒரு சிலை தயாரிப்பாளரிடம் என்னை அழைத்துச் சென்றார். அந்த சிற்பி இளம் தபனை தனது பட்டறையில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார், அங்கு 10 - 12 கைவினைக் கலைஞர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நான் ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருந்தேன் (கட்டுமான தளத்தில்), எனவே நான் அவரிடம் ஒரு நாளைக்கு 35 ரூபாய் சம்பளமாக கேட்டேன் அவரும் சம்மதித்து விட்டார். எனக்கு வேறு என்ன தேவை? எனது ஆர்வத்தை (சிலைகளை உருவாக்குவது) நான் வருமானத்துடன் கற்றுக் கொண்டிருந்தேன்", என்று கூறினார்.

The process of Ganapati making
PHOTO • Aditya Tripathi

மனோரஞ்சன் கரம்கார் (மேல் இடது) குல்கட்சியா கிராமத்தில் சிலை தயாரிக்கும் பட்டறை ஒன்றை வைத்திருக்கிறார், அதே வேளையில் அருண் ருய்தாஸ், கமலா சக்கில் தினசரி கூலி தொழிலாளியாகவும் மற்றும் திருமண இசைக்குழுவில் இசைக் கலைஞராகவும் பணியாற்றுகிறார்; கணபதி பண்டிகைக்கு சில மாதங்களுக்கு முன்பு வதோதராவில் உள்ள மொண்டலின் தனித்துவமான களிமண் சிலைகளை தயாரிக்கும் வேலையில் இருவரும் பணியாற்றுகின்றனர்.

சிலை தயாரிப்பாளரான கோவிந்த் அஜ்மேரி, காளி தேவியை சிற்பமாக செய்ய முடியுமா? என்று தபனிடம் கேட்டார். தபன் ஒரு சிலையை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்தார். அவரது திறமையால் ஈர்க்கப்பட்ட அஜ்மேரி, ஆர்டர்களைை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அவரை ஒப்பந்தத்தின் மூலம் தக்கவைத்துக் கொண்டார் - இதன் பொருள் அவருக்கு கூடுதல் வருமானம் என்பதே. "அங்கேயே நான் 1996 வரை இருந்தேன். இதற்கிடையில் சமூக கணபதி பண்டிகைளை ஏற்பாடு செய்யும் பல யுவக் மண்டல்களைப் (இளைஞர் சங்கங்கள்) பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு மண்டல் என்னை ஒரு வாய்ப்புடன் அணுகியது. அவர்களே எனக்கு களிமண், புல், மூங்கில் மற்றும் வர்ணங்கள் ஆகியவற்றை வழங்கினர். மாண்டுவியில் உள்ள தாண்டியா பஜாரில் அவர்கள் வழங்கிய இடத்தில் நான் அவர்களுக்கு ஒரு சிலையை செய்து கொடுத்தேன்", என்று தபன் கூறினார். “1996 ஆம் ஆண்டில் வதோதராவில் மிகப் பெரிய சிலையான - எட்டு அடி உயர சிலையை - நான் பௌவா வாலா கல்லியில் உள்ள ஒரு மண்டலுக்கு செய்து கொடுத்தேன். அதற்கு நான் 1,000 ரூபாய் சம்பளமாக பெற்றேன்”, என்று அவர் கூறுகிறார்.

2000 ஆம் ஆண்டு வரை தபன் வேலை மற்றும் வருமானத்திற்காக சிரமப்பட்டு வந்தார்.  நான் களிமண்ணை பயன்படுத்துகிறேன் என்று வார்த்தை பரவியதால் சில உள்ளூர் கலைஞர்கள், (உயரமான) களிமண் சிலைகள் எளிதில் உடைந்துவிடும் என்று வதந்தியைப் பரப்பினர், என்று தபன் கூறுகிறார். ஆனால் வங்காள சிலைகள் தாக்குப்பிடிக்கும் தன்மை உடையவை - ஏனெனில் காய்ந்த வைக்கோல் மற்றும் தென்னைநார் கயிறுகளையும் கொண்டே அதன் அடி உருவம் உருவாக்கப்படுகிறது. வைக்கோல் மற்றும் களிமண்ணை கலந்து பிசைந்து அதன்மீது பூசப்படுகிறது இது விரிசலை தடுக்கிறது. "வங்காளத்தில் நாங்கள் துர்கா தேவி சிலைகளையும் இதே வழியில் தான் செய்கிறோம், மேலும் நான் புதியதாக எதையும் முயற்சிக்கவில்லை", என்று அவர் கூறுகிறார்.

material of painting
PHOTO • Aditya Tripathi

தபன் மொண்டலின் படைப்புகள் வங்கத்தின் சிற்பக் கலையினையும், மேற்கு இந்தியாவின் வர்ணங்களையும் மற்றும் அம்சங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

தபன் மெதுவாக உதவியாளர்களை கொண்ட ஒரு குழுவினை அமைத்தார், மேலும் 2002 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு யுவக் மண்டலிற்கு 9 அடி களிமண் சிலை ஒன்றையும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு பல சிறிய சிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தனர். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை நீர்நிலைகளில் மூழ்கடிப்பதால் ஏற்படும் நீர் மாசுபாடு குறித்த அக்கறை வளர்ந்து வருவதால், படிப்படியாக, இவருக்கு வாடிக்கையாளர்கள் வளரத் துவங்கினார். அவரும் அவரது சக ஊழியர்களும் கொல்கத்தாவில் கங்கை ஆற்றின் கரையில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், என்று தபன் கூறுகிறார். "ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு பிறகு, நான் ஹவுராவிற்குச் சென்று அங்குள்ள மண்ணை லாரிகளில் இங்கு கொண்டு வருகிறேன். சில நேரங்களில் இந்த மண் தீர்ந்த பிறகு நாங்கள் பாவ்நகர் (குஜராத்தில் உள்ள) பகுதியில் இருந்தும் மண்ணை பெறுகிறோம். ஆனால் கங்காவின் மண் தான் மிகச் சிறிய துகள்களைக் கொண்டது மேலும் இது சிலைகளுக்கு மென்மையான பூச்சினை அளிக்கிறது. மேலும் இந்த மண் புனிதமானதாகவும் கருதப்படுகிறது", என்று அவர் கூறுகிறார்.

தபனின் பணி இப்போது மேற்கு இந்தியாவின் சிலை தயாரிக்கும் பாணியையும் பங்காள சிற்பக் கலை ஆகிய இரண்டின் இணைப்பாகும். பங்காள பாரம்பரியத்தைப் போலன்றி, கணபதி சிலைகளின் கண்கள் சிறியதாக வைக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் பல சிலை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் இயற்கை வர்ணங்களைப் போல் அல்லாமல், இவர் பயன்படுத்தும் வர்ணங்கள் அக்ரலிக் மற்றும் நீர் சார்ந்தவையாக இருக்கின்றன. தபனின் பட்டறையில் செதுக்கப்படும் தெய்வங்கள் பெரும்பாலும் மராட்டிய ஆட்சியின் பேஷ்வா காலத்தை ஒத்த நகைகளால் அலங்கரிக்கப் படுகின்றன.

An artist decorating an idol
PHOTO • Aditya Tripathi
An artist decorating an idol
PHOTO • Aditya Tripathi

சதீஷ் பார்மர், மொண்டலின் பட்டறையில் ஒரு சிலையை அலங்கரித்து கொண்டிருக்கிறார்: வங்காள கைவினை கலைஞர்கள் பெரும்பாலும் பேஷ்வா காலத்தை ஒத்த நகைகளையே வடிவமைக்கின்றனர்.

2002 ஆம் ஆண்டில், வதோதராவுக்கு வந்த தபனின் சகோதரர் ஷ்வப்பன், அவரது தந்தை மற்றும் சகோதரருக்கு பிறகு இந்த பட்டறையை ஒருங்கிணைக்கிறார். "நான் இதில் ஆர்வமாக இருந்ததால் 8 ஆம் வகுப்புக்கு பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியை விட்டு வெளியேறினேன். கலையை பயிற்சி செய்வதற்கு, யாருக்கும் பட்டம் தேவையில்லை", என்று அவர் கூறுகிறார். உலுபெரியா தாலுகாவில் இருந்து சுமார் 15 கைவினைக் கலைஞர்கள் மொண்டல் சகோதரர்களுக்கு உச்ச பருவத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் கணபதி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, மாதத்திற்கு தலா 9,000 ரூபாயும் மற்றும் உணவும் பெறுகின்றனர் - அதன் பின்னர் அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவோ, வீட்டிற்கு வர்ணம் பூசுபவர்களாகவோ, குறு விவசாயிகளாகவோ அல்லது பிற வேலைகள் செய்வதற்கோ தங்கள் ஊருக்கு திரும்புகின்றனர்.

சிலர் தபனிடமிருந்து சிலை தயாரிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்கின்றனர், சிலர் தங்கள் சொந்த திறன்களை கொண்டு வந்து அதை செயல்படுத்துகின்றனர். அவர்களுல்,  தனது 60 களில் இருக்கும் மனோரஞ்சன் கரம்கார், மற்றும் தனது 40 களில் இருக்கும் அவரது மருமகன் ஷியாமல் கரம்கார், ஆகிய இருவரும் குல்கட்சியா கிராமத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்தில் சிற்பக்கலை பட்டறையை வைத்திருக்கின்றனர். கணேஷ் சதுர்த்திக்கு மறுநாளான செப்டம்பர் 13 ஆம் தேதி, நான் அவர்களை சந்தித்த அன்று, அவர்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். "நாங்கள் கணேசர் பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வருகிறோம் ஏனெனில் அது வங்கத்தில் எங்களுக்கு பருவமற்ற காலம்", என்று கூறுகிறார் மனோரஞ்சன். "இந்த வழியில் நாங்கள் சிறப்பாக சம்பாதிக்கின்றோம். யாரால் பயிர்களை மட்டுமே சார்ந்து இருக்க முடியும்?", என்று கேட்கிறார்.

Swapan Mondal, Tapan's brother, who coordinates the workshop, says, 'To practice art, no one needs a degree'
PHOTO • Aditya Tripathi
sculpture of rat
PHOTO • Aditya Tripathi

பட்டறையை ஒருங்கிணைக்கும் தபனின் சகோதரர் ஷ்வப்பன் மொண்டல், 'கலையை பயிற்சி செய்வதற்கு, யாருக்கும் பட்டம் தேவையில்லை', என்று கூறுகிறார்.

கமலா சக் கிராமத்தைச் சேர்ந்த, 35 வயதான, கணேஷ் தாஸ், களிமண்ணில் இதழ்கள் மற்றும் அலங்காரங்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார், "நான் எங்கள் கிராமத்தில் எம்பிராய்டரி (நுணுக்கமான ஊசி வேலை) போடும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். இந்தக் கலைத் துறையில் வேலை இருப்பதைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, நான் 2015 இல் இங்கு வந்தேன். நான் தபன் தாதாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்", என்று கூறினார்.

மொண்டலின் பட்டறையில், கமலா சக்கை சேர்ந்த ஒரு குழு, பணியாற்றி வருகிறது இவர்கள் ருய்தாஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இது ஒரு பட்டியலிடப்பட்ட இனம். தனது 50 களில் இருக்கும் ரவிராம் ருய்தாஸ், வேலை கிடைக்கும் போதெல்லாம், தனது கிராமத்தில் தினக்கூலியாக வேலை செய்கிறார்; மேலும் இவர் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையும் ஆதரித்து வருகிறார். "நான் இங்கு நன்றாக சம்பாதிக்கிறேன்", என்று அவர் கூறுகிறார். 40 வயதாகும் அருண் ருய்தாஸும் தனது கிராமத்தில் தினசரி கூலியாக வேலை செய்கிறார், மேலும் வங்கத்தில் பருவமற்ற காலத்தில் அவர் டெல்லிக்கு சென்று வேலை தேடுகிறார். அவர் திருமண இசை குழுக்களில் கீபோர்டு வாசிப்பவராகவும் இருக்கிறார், என்று அவர் கூறுகிறார். "எங்களின் பாரம்பரிய வேலை நல்ல நாட்களில் டோலக்கை இசைப்பது. ஆனால் எல்லா நேரங்களிலும் நாங்கள் அதை வைத்து சம்பாதிக்க முடியாது. எங்களைப் போன்ற ஒரு சிறிய கிராமத்தில், நாங்கள் எப்படி அடிக்கடி திருமணங்களை எதிர்பார்க்க முடியும்... மேலும் மற்ற கிராமங்களிலுள்ள  இசை குழுக்களிலும்  வெளி ஆட்களுக்கு இடம் கிடையாது", என்று அவர் கூறினார்.

praparing pandal and making ganpati idol
PHOTO • Aditya Tripathi

அருண் ருய்தாஸ் (மேல் இடது) முற்றிலும் தயாரான ஒரு சிலையை தூக்கி வருகிறார், அதே வேளையில் ரவிராம் ருய்தாஸ் (மேல் வலது) ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கீழ் வரிசை: அஜித் ருய்தாஸ் (இடது) மற்றும் நபோ ருய்தாஸ் (வலது, பின்புறம்) கணபதி பண்டிகையின் உச்ச பருவத்தில் நீட்டிக்கப்பட்ட பட்டறை இடத்திற்கான சாரக்கட்டுகளை அமைக்கவும் மற்றும் அகற்றவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

நபோ ருய்தாஸ் பெரிய சிலைகள் அனைத்தும் விற்கப்பட்ட பின்னர் சாலையோர பந்தலில் மூங்கில் கட்டைகள் அவிழ்த்துக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் கைவினை கலைஞர்களுக்கு வர்ணங்களை எடுத்துச் செல்வது, சிலைகளை நகர்த்துவது, களிமண்ணை பிசைந்து கொடுப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுகிறார். "ருய்தாஸ் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்போம், என்று அவர் கூறுகிறார். நான் பன்சூரியாவை (புல்லாங்குழல்) வாசிப்பேன். ஆனால் புல்லாங்குழலை வாசிப்பதற்கு பதிலாக இப்போது நான் பாண்களுடன் (மூங்கில்) இருக்கிறேன்", என்று கூறுகிறார்.

மொண்டல்களைப் பொருத்தவரை அவர்களது கஷ்ட காலங்கள் முடிந்து விட்டது, இப்போது அவர்கள் நன்றாக உள்ளனர். தபன் மற்றும் அவரது மனைவி மமோனி மற்றும் அவர்களது மூன்று பெண் குழந்தைகள் ஆகியோர் வதோதராவில், அவரது தம்பி ஷ்வப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் குடி பெயர்ந்து விட்டனர். தபனின் மூத்த மகளான 17 வயதாகும், தனிமா, 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் மேலும் அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக விரும்புகிறார்; அனிமா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் மேலும் அவர்களது இளைய மகள் மழலை பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் தனது வேலையை முன்னெடுத்துச் செல்வார்களா என்று தபன் வியப்படைக்கிறார். "இது ஒரு கடினமான கலை", என்று தனது பட்டறைக்கு முன்பு நின்று கொண்டு அவர் கூறுகிறார். "யாராவது ஒருத்தர் இதை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்", என்று கூறுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு யுவ மண்டலைச் சேர்ந்த, சின்தன் காந்தி, 2015 முதல் இங்கு சிலைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார், அவர் எங்களிடம், "தற்போது அண்ணாவின் சிலைகள் ஒரு வியாபாரக் குறி ஆகிவிட்டது", என்று கூறுகிறார்.

People welcoming ganpati
PHOTO • Aditya Tripathi

ஆதித்யா திரிபாதி குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் ஆகிய நிறுவனங்களுக்கு பங்களிப்பு செய்கிறார், மேலும் கூகுள் மேப்ஸுக்கு உள்ளூர்  புகைப்பட வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் பட்டம் படித்து வருகிறார்.


தமிழில்: சோனியா போஸ்

Ujjawal Krishnam

ਉਜਵਲ ਕ੍ਰਿਸ਼ਨਮ ਬੜੌਦਾ ਦੀ ਮਹਾਰਾਜਾ ਸਾਯਾਜੀਰਾਓ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਦੇ ਭੌਤਿਕ ਵਿਗਿਆਨ ਵਿਭਾਗ ਵਿੱਚ 2018 ਦੀ ਇੱਕ ਖੋਜਕਰਤਾ ਸਨ। ਉਹ Academia.edu ਅਤੇ ਵਿਕੀਪ੍ਰੋਜੈਕਟਸ ਦੇ ਸੰਪਾਦਕ ਸਨ, ਜਿਨ੍ਹਾਂ ਨੇ ਗੈਟੀ ਇਮੇਜਜ਼ ਵਿੱਚ ਯੋਗਦਾਨ ਪਾਇਆ ਅਤੇ ਭਾਰਤੀ ਰਾਜਨੀਤੀ ਅਤੇ ਨਿਆਂ ਸ਼ਾਸਤਰ ਬਾਰੇ ਲਿਖਿਆ।

Other stories by Ujjawal Krishnam