மோகன் சந்திர ஜோஷியின் கடைசித் தம்பி ராணுவத்துக்குத் தேர்வான செய்தி சில மாதங்களுக்கு முன்னால் அவருக்குத் தெரிய வந்தது. உடனடியாக அல்மோரா தபால் நிலையத்தில் வேலை பார்க்கும் தனக்குத் தெரிந்த தபால்காரரிடம் மோகன், “என் வீட்டுக்குக் கடிதத்தை அனுப்பி விடாதீர்கள்!” எனக் கேட்டுக்கொண்டார். தன்னுடைய தம்பி ராணுவத்தில் சேராமல் தடுக்கும் கெட்ட எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. பணி நியமனம் கடிதம் தாமதமாக வீட்டுக்குப் போய்ச் சேரக்கூடும், அல்லது வந்து சேரவே சேராது என்கிற அச்சத்திலேயே அவர் அப்படியொரு வேண்டுகோளை வைத்தார். பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பனோலி குந்த் கிரமாவாசிகளின் கடிதத்துக்கான காத்திருப்பு இப்படித்தான் வெகுகாலமாக இருக்கிறது. அவர்களுக்கு அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையம் அடுத்த மாவட்டத்தில் உள்ளது.

“எங்கள் ஊர்க்காரர்கள் பலர் நேர்முக அழைப்புக் கடிதம் தாமதமாக வந்து சேர்ந்ததால் தங்களுக்குரிய வேலையைப் பறிகொடுத்துள்ளார்கள். நேர்முகத் தேர்வு நாள் கடந்த பிறகே அழைப்புக் கடிதத்தைத் தபால்காரர் கொண்டுவந்து சேர்ப்பது பெரும்பாலும் நடக்கும். இப்படி யாரும் எட்டிப்பார்க்காத கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தில் வேலைவாய்ப்புகளும் இல்லை. இப்படிப்பட்ட மோசமான சூழலில் அரசாங்க வேலையை வழங்கும் கடிதத்தை யார் தொலைக்க விரும்புவார்கள்.” என்று கண்களில் ஆற்றாமை தேக்கியபடி பேசுகிறார் மோகன் சந்திரா.

அல்மோராவில் உள்ள தபால் நிலையத்தில் தம்பிக்கான அழைப்புக் கடிதத்தைப் பெற 70 கிலோமீட்டர்கள் பயணம் செய்தார் மோகன். “நாங்கள் தபால் நிலையத்தில் போய்க் கடிதத்தைப் பெறக்கூடாது என்று தெரியும். தபால்காரர் வீடுதேடி வந்து அதனைச் சேர்ப்பிக்க வேண்டும் என்று தெரியும். ஆனால், அப்படிக் கடிதம் வந்து சேர (வந்து சேர்ந்தால்) ஒரு மாதம் ஆகிவிடும். அதற்குள் என் தம்பி ராணுவத்தில் சேரவேண்டிய நாள் கடந்து விட்டிருக்கும்.”என்கிறார் மோகன்

பித்தோரோகர் மாவட்டம் பனோலி குந்த் எனப்படும் பனோலி சேரா கிராமத்தில் உள்ள டீக்கடையில் மோகன் சந்திரா உள்ளிட்ட கிராமவாசிகள் எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிராமத்தை போலவே கடிதத்தைச் சரியான நேரத்தில் பெறமுடியாத சாபத்தை மேலும் ஐந்து கிராமங்கள் அனுபவிக்கின்றன. அந்தக் கிராமங்கள் சேரா உர்ஃ பதோலி, சர்தோலா, சௌனா படால், நெய்லி. இவற்றோடு பனோலி போலவே உச்சரிப்பைக்கொண்டிருக்கும் ஊரான பதோலி சேரா குந்த்தும் இந்தக் கிராமங்களில் அடக்கம்.



02-The last post – and a bridge too far-AC.jpg

பனோலி குந்த்தில் உள்ள  டீக்கடையில்  இடமிருந்து வலமாக: நீரஜ் துவால், மதன் சிங், மதன் துவால், மோகன் சந்திர ஜோஷி


இந்தக் கிராமங்கள் அல்மோரா, பித்தோராகர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இருக்கின்றன. இந்த இரு மாவட்டங்களைச் சரயூ நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் இரும்புப் பாலம் சேராகாட்டில் பிரிக்கிறது. இந்த ஆறு கிராமங்களும் பித்தோராகர் மாவட்ட கங்கோலிஹாட் தாலுகாவில் வந்தாலும், இவற்றுக்கான தபால் நிலையம் பாலத்துக்கு அந்தப் பக்கம் உள்ள மாவட்டத்தில் இருக்கிறது. அதாவது இவர்களுக்கான தபால் நிலையம் அல்மோரா மாவட்டத்தின் பாஷியசானா தாலுகாவில் உள்ளது. அந்தத் தாலுகாவில் இருந்து வரும் கடிதம் இவர்களை வந்தடைய பத்து நாட்கள் ஆகும். இவர்கள் மாவட்டத் தலைநகரில் இருந்து வரும் கடிதம் வந்து சேர குறைந்தது ஒரு மாதமாகும். மதன் சிங் கையில் டீ கிளாஸை ஏந்தியபடி ”எங்களைப் பித்தோராகர் மாவட்டத்தின் அங்கமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நாங்கள் இந்த மாவட்டத்தில் தான் வாழ்கிறோம். எங்களுக்கான முகவரியோ அல்மோராவில் இருக்கிறது. எவ்வளவு வேடிக்கையானது இது?” என்று விரக்தியோடு அவர் கேட்கிறார்.

பித்தோராகர் தனி மாவட்டமாக உருவெடுத்து 56 வருடங்கள் ஆகியும், இந்த ஆறு கிராமங்களின் 2,003 மக்கள் தங்களின் வீடு என்று ஒரு காலத்தில் அழைத்த அல்மோராவை விட்டுப் பிரிக்கப்படாமல் பரிதவிக்கிறார்கள். அல்மோராவில் இருந்து இவர்கள் எழுபது கிலோமீட்டர் தள்ளியுள்ளார்கள். அதேசமயம் தங்களின் மாவட்டத் தலைநகரான பித்தோராகர் மற்றும் இவர்களுக்கு இடையே உள்ள தொலைவு 130 கிலோமீட்டர்கள். இம்மக்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்மோராவின் பாஷியாசானா தான்.

இந்தக் கிராமவாசிகளின் ஆதார் அட்டைகள் 2014-ல் வழங்கப்பட்ட பொழுது இவர்களின் அஞ்சல் நிலைய முகவரி பாஷியாசானா, பித்தோராகர் என்று அச்சிடப்பட்டு இருந்தது. “கடுப்பான நாங்கள் புகார் செய்த பிறகு, எங்களுக்கு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கானாய் தபால் நிலையத்திற்கு ஆதார் அட்டைகளை அனுப்பிவத்தார்கள். ஆனால், அந்தத் தபால் நிலையத்தில் இருந்து ஒருவரும் எங்கள் ஊரை எட்டிப்பார்ப்பதும் இல்லை. எங்கள் ஆதார் அட்டைகளைப் பெற நாங்கள் கானாய் தபால் நிலையம் வரை செல்ல வேண்டி இருந்தது.” என்கிறார் சர்தோலா கிராமத்தை சேர்ந்த சந்தன் சிங் நுபால்.


03-The last post – and a bridge too far-AC.jpg

ஒரே ஒரு கடிதத்தை கண்ணில் பார்க்க படாத பாடு படவேண்டி இருக்கிறது என்கிறார் சந்தன் சிங். அவர் தன்னுடைய குடும்பத்தோடு சர்தோலா கிராமத்தில் வசிக்கிறார். அவர் சொல்வது உண்மை என்று பனோலி கிராமத்தின் சுரேஷ் நியுலியா, மோகன் ஜோஷி ஆமோதிக்கிறார்கள்


பதோலி சேரா குந்த் கிராமத்தில் இன்னமும் நிலைமை மோசமானது. வெறும் பதினான்கு குடும்பங்கள் இந்தக் குக்கிராமத்தில் வசிக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள், முதியவர்களே இங்கே இருக்கிறார்கள். ஊரில் உள்ள பத்து பெண்களோடு நாங்கள் பேசினோம். அவர்கள் பிள்ளைகள், கணவன்மார்கள் வெளியூரில் வேலை பார்க்கிறார்கள். பெரிய நகரங்களான அல்மோரா, ஹல்த்வானி, பித்தோராகர் மாநகர்களான லக்னோ, டேராடூனில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் வாழ்க்கையை இவர்கள் நடத்த வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை வரும் இவர்களின் உறவுகள் அனுப்பும் பணம் மாதத்துக்கு ஒருமுறை அனுப்புகிறார்கள். “மணி ஆர்டர்கள் எங்களைத் தாமதமாகவே வந்து சேருகின்றன. அவசரமாகப் பணம் வேண்டும் என்றாலும் தபால்காரர் வருகிறாரா என்று நாங்கள் தவங்கிடக்க வேண்டும்.” என்கிறார் இந்தக் கிராமவாசியான விவசாயி கமலா தேவி.


04-The last post – and a bridge too far-AC.jpg

பதோலி சேரா குந்த்தின் பார்வதி தேவிக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகிறது. இந்த தள்ளாடும் வயதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே அவரால் அஞ்சல்நிலையம் போக முடிகிறது


கமலாதேவியின் பக்கத்து வீட்டுபெண்ணான எழுபது வயதைக் கடந்த பார்வதி தேவி நடக்கவே கஷ்டப்படுகிறார். அவருக்கான கைம்பெண் ஓய்வு ஊதியமான எண்ணூறு ரூபாயை பெற அவர் கானாய் தபால்நிலையம் வரை போய் வரவேண்டும். அவசரமாகப் பணம் தேவை என்றாலும் மோசமான உடல்நிலை அவர் மாதாமாதம் போய்ப் பணம் பெறமுடியாமல் தடுக்கிறது. இன்னும் இரு மூதாட்டிகளுடன் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். “ஒருமுறை கானாய் வரை ஜீப்பில் போகவே முப்பது ரூபாய் ஆகும். போய்வர மாதாமாதம் அறுபது ரூபாய் தண்டம் அழுதால் நான் எப்படி வாழமுடியும்?” என்று சலித்துக் கொள்கிறார் பார்வதி தேவி. தன்னுடைய வயதுக்கு அதீத பொறுமையோடு கடிதங்கள், ஓய்வு ஊதியத்துக்குப் பார்வதி தேவி தபால் துறையைக் குறைசொல்லாமல் காத்திருந்தாலும் பலர் பொறுமையற்றுக் காணப்படுகிறார்கள். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சுரேஷ் சந்திர நியுலியா “ஒரு கடிதம் மின்னஞ்சலில் நொடியில் வந்துவிடுகிற பொழுது நாங்கள் ஏன் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.” என்று கேள்வி கேட்கிறார்.

இந்த ஆறு கிராமங்களுக்கான பாஷியாசானா தபால்காரரான மெஹர்பான் சிங் “இந்தக் கிராமங்களுக்குத் தினமும் வந்து செல்வது இயலாத காரியம். சிலவற்றுக்குச் சாலைகள் இல்லை. தினமும் பத்து-பன்னிரண்டு கிலோமீட்டர்கள் நான் நடக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வது என் வழக்கம்.” என்கிறார். பதினான்கு வருடங்களாகத் தபால்காரராக வேலை பார்க்கும் மெஹர்பான் சிங் க்கு இப்போது வயது 46.

காலையில் ஏழு மணிக்கு தன்னுடைய வேலையை அவர் துவங்குகிறார். “கடிதங்களை விநியோகித்த பிறகு நண்பகல் தபால் நிலையம் செல்வேன். அங்கே மதியம் மூன்று மணிவரை காத்திருந்து வரும் கடிதங்களைப் பெற்றுக்கொள்வேன்.” என்கிறார். அவற்றை வீட்டுக்குக் கொண்டு போய்விடுவார். காரணம் காலையில் பத்து மணிக்கு திறக்கும் தபால் நிலையத்தை அடைய அவர் மூன்று மணிநேரம் நடக்க வேண்டும். ஒட்டுமொத்த பாஷியாசானா தபால் நிலையத்துக்கே ஒரே தபால்காரராகச் சமீப காலத்துக்கு முன்னர்வரை அவர் இருந்தார். பதினாறு கிராமங்களுக்கு அப்பொழுது மெஹர்பான் சிங் கடிதங்களைக் கொண்டு சேர்த்தார். இப்பொழுது இன்னொருவரை நியமித்து இருப்பதால் அவரின் பணிச்சுமை பகிரப்பட்டு உள்ளது.


05-The last post – and a bridge too far-AC.jpg

கங்கோலிஹாட் தாலுகா சர்தோலா கிராமத்தில் உள்ள கேட்பாரற்று கிடக்கும் குமாவோனி  வீடு


நியுலியா பித்தோராகர் மாவட்ட பொதுத் தபால் நிலைய கண்காணிப்பாளரிடம் பல தடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார். “பெரிநாக் தபால் நிலையம் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்ட பொழுது எங்கள் கிராமங்களை அந்தக் குழு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.” என்கிறார் அவர். “எங்களிடம் குடிநீர் இல்லை, வேலை இல்லை, மோசமான அஞ்சல் சேவையே வாய்த்திருக்கிறது. இங்கே யார் வாழ விரும்புவார்கள்?” என்று நியுலியா இறைஞ்சுகிறார். சில வருடங்களுக்கு முன்வரை பதோலி பகுதியில் இருபத்தி இரண்டு குடும்பங்கள் குடியிருந்தன. சர்தோலா கிராமத்தில் கேட்பாரற்று கிடக்கும் பல்வேறு பாரம்பரிய குமாவோனி வீடுகளே அன்றாட வாழ்க்கை எத்தனை அவதிகள் நிறைந்த ஒன்றாக இவர்களுக்கு உள்ளது என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது.

இந்தப் பெரிய பிரச்சனையை நான் டேராடூன் The Times of India பதிப்பில் டிசம்பர் 17, 2015-ல் செய்தியாக எழுதிய பொழுது உத்தரகாண்ட் மாநில மனித உரிமைகள் ஆணையம் (UHRC) தன்னிச்சையாகச் சிக்கலை அன்றே கையில் எடுத்துக்கொண்டது. டேராடூன் தலைமை பொதுத் தபால் அதிகாரிக்கு பிரச்சனையைத் தீர்க்கும்படி ஒரு பரிந்துரையை வழங்கியது. மேலும் பித்தோராகர், அல்மோரா மாவட்ட நிர்வாகங்களைத் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மாவட்டம் உருவாகி ஐம்பது வருடங்களுக்கு மேலான சூழலில் இந்நேரம் இந்தப் பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது ஆணையம். ஆணையத்தின் உறுப்பினரான ஹேமலதா தவுன்தியால் கையெழுத்திட்ட அறிக்கையில்,”பித்தோராகர் மாவட்டத்தின் எல்லையில் வாழும் இந்த மக்கள் இந்த மாநில மக்கள் மட்டுமில்லை. அவர்கள் இந்தத் தேசத்தின் குடிமக்கள். கடைக்கோடி பகுதியில் வாழும் இம்மக்கள் வெளியுலகத்தோடு தொடர்புகொள்ள உள்ள ஒரே வழி தபால் நிலையம் தான். அந்த உரிமையை மறுதலிக்கக் கூடாது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது .


06-The last post – and a bridge too far-AC.jpg

பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட இந்த கிராமங்கள், குக்கிராமங்களின் குறிக்கும் கையால் வரையப்பட்ட வரைபடம். வலது: சில இடங்களின் பட்டியல், மக்கள் தொகை, தபால் நிலையத்தில் இருந்து இவற்றின் தொலைவு


மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கின் முதல் விசாரணையை மேற்கொண்ட மே 3, 2016 அன்று பித்தோராகர் தபால் அலுவலகக் கண்காணிப்பாளரான G.C.பட் கிராம மக்கள் இந்தப் பிரச்சனையைத் தன்னிடம் அதுவரை கொண்டுவரவே இல்லை என்று சாதித்தார். “சீக்கிரமே பதோலி சேரா குந்த்தில் ஒரு தபால் நிலையத்தைத் திறக்கிறோம்.” என்று வாக்களித்தார். மாநில மனித உரிமைகள் ஆணையம் டேராடூன் தலைமை பொதுத் தபால் அதிகாரி உடனடியாகத் தீர்வை தராவிட்டால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தது.

ஒருமாதம் கழித்துப் பித்தோராகர் பொதுத் தபால் நிலையத்துக்கு ஒரு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. புதிய தபால் நிலையம் ஜூன் 30, 2016 அன்று பதோலி சேரா குந்த்தில் திறக்கப்பட உள்ளது. தபால் நிலைய தலைமை அதிகாரி, தபால்காரர் ஆகிய இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மெஹர்பான் சிங் இனிமேல் கடிதங்கள் தாமதமாகச் சென்று சேராது என்பதால் உவகைப் பொங்க காணப்படுகிறார். “பாஷியாசானாவின் இன்னொரு தபால்காரர் புதுத் தபால்காரர் பொறுப்பெடுக்கும் வரை இந்த ஆறு கிராமங்களில் கடிதங்களைக் கொண்டு சேர்ப்பார்” என்று கடிதங்கள் நிரம்பிய பையைத் தோளில் தாங்கியபடி அவர் நெகிழ்ச்சியோடு புன்னகைக்கிறார்.

மோகன் சந்திரா, மதன் சிங், நியுலியா, கமலா தேவி ஆகியோரும் புதுத் தபால் நிலையம் திறப்பதில் ஆனந்தமாக உள்ளார்கள். என்றாலும், மற்ற அரசு அறிவிப்புகளைப் போல வெறும் அறிவிப்பாக மட்டும் இதுவும் நின்றுவிடக்கூடாது என்று அவர்கள் கவலையோடு காத்திருக்கிறார்கள்.


07-The last post – and a bridge too far-AC.jpg

சேராகாட்டின் பாலம் சரயு நதியின் மீது நின்றபடி பித்தோராகர், அல்மோரா மாவட்டங்களை பிரிக்கிறது. மெஹர்பான் சிங், வெகுகாலமாக அல்லல்படும் பாஷியாசானாவின் பாவப்பட்ட  தபால்காரர்


(தமிழில்: பூ.கொ.சரவணன்)

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில்
கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள
@PUKOSARAVANAN

அர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார். அவரைத் தொடர்பு கொள்ள : @eveningdrizzles

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

Other stories by P. K. Saravanan