அதிகாலை 2 மணி. அடர்த்தியான இருள். ‘இயந்திரப் படகு’ என அழைக்கப்படும் படகில் ராமநாதபுரக் கரையில் நாங்கள் ஏறியிருந்தோம்.
’இயந்திரப் படகு’ என்கிற அந்த விஷயம் அடிப்படையில் கைவிடப்பட்ட, ஓர் ஆதிகால படகுக்கு லேலண்ட் பேருந்தின் எஞ்சினை (அதுவும் 1964ம் ஆண்டிலேயே செயலிழந்து, பிறகு இந்தப் படகுக்காக பழுது பார்த்து பொருத்தப்பட்டு, இப்பயணத்தை நான் மேற்கொண்ட 1993ம் ஆண்டிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது) பொருத்தி இயக்கப்படுவதாகும். உள்ளூரிலுள்ள மீனவர்கள் போலல்ல நாங்கள். எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அதிகபட்சமாக வங்காள வளைகுடா கடலின் ஏதோவொருப் பகுதியில் இருப்பதாகதான் என்னால் சொல்ல முடியும்.
கடலுக்கு நாங்கள் வந்து 16 மணி நேரங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் ஐந்து பேர் கொண்ட குழுவின் முகங்களில் புன்னகை மறையவேயில்லை. அவர்களின் பெயர்கள் யாவும் ‘ஃபெர்னாண்டோ’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. இங்கிருக்கும் மீனவர் மத்தியில் இயல்பாக வழங்கப்படும் பெயர் அது.
இயந்திரப் படகில் விளக்கு இல்லை. ஃபெர்னாண்டோக்களில் ஒருவர் பிடித்திருக்கும் தீப்பந்தம் மட்டும்தான் வெளிச்சம். எனக்கு ஒரு கவலை இருந்தது. இந்த இருட்டுக்குள் எப்படி நான் புகைப்படங்கள் எடுப்பது?
அந்தப் பிரச்சினையை மீன்கள் தீர்த்து வைத்தன.
அவை வலைக்குள்ளிருந்து ஒளிர்ந்தபடி மேலே வந்தன (எதனால் ஒளிர்ந்தன எனத் தெரியவில்லை). படகுக்குள் அவை இருந்த பகுதிக்கு வெளிச்சம் பாய்ச்சின. அந்த வெளிச்சத்தை பிரதிபலித்ததில் விரும்பிய வேலை நடந்தது. சில புகைப்படங்களை நான் ‘ஃப்ளாஷ்’ (எனக்கு பிடிக்காத உபகரணம்) இல்லாமலே கூட எடுக்க முடிந்தது.
ஒரு மணி நேரம் கழித்து, இதுவரை நான் உண்ணாத அளவுக்கான புது மீன் எனக்கு வழங்கப்பட்டது. ஒரு பெரிய தகரம் கவிழ்க்கப்பட்டு, அடிப்பகுதி துளையிடப்பட்டு மீன் சமைக்கப்பட்டது. அந்த தகரத்துக்கு அடியில் எப்படியோ அவர்கள் தீ மூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் நாங்கள் கடலில் இருந்தோம். ராமநாதபுரக் கரையிலிருந்து 1993ம் ஆண்டில் மூன்று முறை கடலுக்கு சென்றிருக்கிறேன். எல்லா நேரங்களிலும் மீனவர்கள் சந்தோஷத்துடனும் சிறந்த திறனுடனும் மிகவும் அடிப்படையான உபகரணத்துடன் கடுமையான சூழல்களில் பணிபுரிந்தனர்.



