காலை 9 மணி, வட மும்பை புறநகரின் போரிவலி ரயில் நிலையத்தை அடைவதற்காக பயணிகள் முட்டித்தள்ளிக்கொண்டு செல்லும்போது, கடைகள் அனைத்தும் திறக்கும் நேரம், 24 வயதான லட்சுமன் கட்டப்பாவிற்கு அவரது வேலையை துவங்குவதற்கான நேரம்.

அவரது தோளில் ஒரு கருப்பு நிற பையை சுமந்துகொண்டு, வெறுங்காலுடன் தனது மனைவி ரேகா மற்றும் தனது தம்பி 13 வயதான எல்லப்பாவுடன் நடந்து பூட்டியிருக்கும் கடைக்கு முன் நிற்கிறார். அந்தப்பையை திறந்து அவர் காக்ரா எனப்படும் நீளமான பச்சை நிற பாவாடை, தலைக்கு கட்டும் நாடா, குங்குமம் மற்றும் மஞ்சள் நிற பொடி, கழுத்தில் அணிந்துகொள்ளக்கூடிய பாசிமணிகள் அடங்கிய பெட்டி, சிறிய கண்ணாடி, கசை(சாட்டை) மற்றும் காற்சலங்கை ஆகியவற்றை எடுக்கிறார்.

மூடிய கடைக்கு முன்னால் நின்றுகொண்டு, லட்சுமண் தனது பேன்ட்க்கு மேலே பாவாடையை அணிந்துகொள்கிறார். மேலே அணிந்திருக்கும் டீசர்ட்டை கழற்றிவிடுகிறார். அவரது வெற்று நெஞ்சுப்பகுதி மற்றும் முகத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பசையை வைத்து வரைந்துகொள்கிறார். ஆபரணங்களை அணிந்துகொள்கிறார். எல்லப்பாவும் அதையே செய்கிறார். பெரிய மணிகள் பொருத்திய ஒட்டியாணத்தை இடுப்பிலும், காலில் சலங்கைகளையும் வேகமாக அணிந்துகொள்கிறார்கள். ரேகா அவர்களுக்கு பின்னால் டோலக் என்ற மேளம் போன்ற இசைக்கருவியை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

அவர்களின் நிகழ்ச்சி துவங்கியது. இது ஊரடங்கு துங்குவதற்கு முன்னர் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தது.

PHOTO • Aakanksha

லட்சுமண் (நடுவில்) மற்றும் எல்லப்பா இருவரும் ஊரடங்குக்கு முன்னர் ஒருநாள் தங்களின் நிகழ்ச்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். லட்சுமணின் மனைவி ரேகா டோலக்குடன் காத்திருக்கிறார்

ரேகா, 22 வயதானவர், டோலக்கை குச்சிகளை வைத்து வாசிக்கத்துவங்குகிறார். லட்சுமண் மற்றும் எல்லப்பா அந்த இசைக்கு ஏற்றவாறு நடனமாட துவங்குகிறார்கள். அவர்கள் வேகமாக ஆடுவதற்கு ஏற்றவாறு அவர்களின் சலங்கை சத்தமாக ஒலிக்கிறது. தனது முதுகில் அடித்துக்கொள்வதற்கு முன் கசையை (சாட்டை) சத்தம் எழும் வகையில் காற்றில் சுழற்றுகிறார். அது வேகமாக சத்தம் எழுப்புகிறது. அவரது சகோதரருக்கு இது புதிது என்பதால் அவர் தரையில் அடித்து அந்த சத்தத்தை ஏற்படுத்துகிறார்.

இவ்வாறு செய்து கொண்டே மக்களிடம் காசு கேட்டுக்கொண்டு அவர்கள் நகர்ந்து செல்கிறார்கள். அவர்கள் “ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எங்களுக்கு காசு கொடுங்கள், கடவுள் உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்“ என்று கூறிக்கொண்டே செல்கிறார்கள். மக்கள் நின்று பார்க்கிறார்கள். ஆனால், அருகில் வரத்தயங்குகிறார்கள். சிலர் அவர்களை கவனிக்காமல் நடந்து செல்கிறார்கள். சிலர் சில்லறை அல்லது பண நோட்டுகளை அவர்களிடம் போடுகிறார்கள, சில குழந்தைகள் அச்சத்தில் ஓடுகிறார்கள்.

லட்சுமண் மற்றும் எல்லாப்பா கடைக்காரர்கள் மற்றும் காய்கறி விற்பவர்களிடம் கையேந்தி யாசகம் கேட்கிறார்கள். சிலர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். ரேகா ஒரு கடைக்காரர் வழங்கும் டீயைப் பெற்றுக்கொள்கிறார். “சிலர் எங்களுக்கு உணவு கொடுப்பார்கள். ஆனால், நான் கடவுளுக்காக நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும்போது உணவு உட்கொள்ள மாட்டேன். நாங்கள் வீடு திரும்பும் வரை உணவருந்தமாட்டோம்“ என்று லட்சுமண் கூறுகிறார். அவர்கள் மாலை 5 மணியளவில் வீட்டை அடைகிறார்கள்.

தெருக்களில் இதுபோன்ற கசையடி நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் பாட்ராஜ் அல்லது போத்துராஜ் அல்லது கடக் லட்சுமி (பெண் தெய்வத்திற்கு பின்னால், மாரியம்மா என்றும் அழைக்கப்படுபவர்) என்று அழைக்கப்படுகிறார்கள். லட்சுமணை போன்ற அவரது சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அவர்களின் பெண் தெய்வத்திற்கு நோய் தீர்க்கும் சக்திகள் இருப்பதாகவும், தீமைகளை தடுக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

அவர்கள் குடும்பம் கர்நாடகாவின் பிடார் மாவட்டத்தின் ஹோம்நபாத் வட்டத்தில் உள்ள கொடம்பாள் கிராமத்தில் உள்ளது. அவர்கள் தேகு மேகு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பட்டியல் இனத்தினர். பெண்கள் மேளத்தை வாசிக்கும்போது அல்லது சிலையை கையில் வைத்திருக்கும்போது அல்லது பெண் தெய்வத்தின் புகைப்படத்தை கையில் வைத்திருக்கும்போது அல்லது அலுமினியம் அல்லது இரும்பு தகட்டில் தெய்வத்தின் படத்தை வைத்துக்கொண்டு நிற்கும்போது ஆண்கள் ஆடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் ஒரு சிறிய மரப்பெட்டியில் அல்லது மரச்சட்டத்தில் சிலையை வைத்து தலையில் சுமந்து வருவார்கள்.

வீடியோவைப்பாருங்கள்: வாழ்வாதாரத்திற்காக மும்பையில் தெருக்களில் கசையடிகளுடன் வழிபாடு

தொற்று துவங்குவதற்கு முன்னரே, அவர்கள் செய்த வேலை பிழைக்க போதியதாக இல்லை. அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். “முன்னர் எங்களின் மூதாதையர்கள் நோய்களை தீர்க்கவும், மக்களின் பாவங்களை போக்கவுமே இதை செய்து வந்தார்கள். ஆனால், நாங்கள் இப்போது எங்களின் வயிற்றை நிரப்புவதற்காக இதை செய்கிறோம்“ என்று லட்சுமணின் தாய் எல்லம்மா, நாம் ஊரடங்கிற்கு முன்னர் அவர்களை சந்தித்தபோது கூறினார். எனது கொள்ளு தாத்தா மற்றும் எனது தாத்தா இருவரும் இந்த நிகழ்ச்சியை செய்வதற்காக ஊர் ஊராக சுற்றினார்கள். மாரியம்மா எங்களை இவ்வாறு ஆடச்சொல்லியிருக்கிறார். அவர் எங்களை பார்த்துக்கொள்வார்“ என்று லட்சுமண் மேலும் கூறுகிறார்.

லட்சுமண், மும்பையில் வீதிகளில் தனது தந்தையுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் செய்ய துவங்கியபோது அவருக்கு 6 வயது. அவரது தாய் மாரியம்மன் சிலை  மரச்சட்டத்தை தலையில் சுமந்து செல்வார். “நான் கசையை (சாட்டை) பயன்படுத்துவதற்கும், அதை வைத்து என்னை தாக்கிக்கொள்வதற்கும் முதலில் பயந்தேன். முதலில் தரையில் அடித்து சத்தத்தை ஏற்படுத்துவேன்“ என்று அவர் கூறுகிறார். “நாங்கள் முதுகுப்புறத்தில் எதுவும் தடவிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் அந்த வலி எங்கள் தெய்வத்திற்கானது. சில நேரங்களில் எனது முதுகு வீங்கிவிடும். ஆனால், மாரியம்மன் எங்களை காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். தினமும் அவ்வாறு செய்யும்போது அது குணமாக துவங்கியது. தற்போது எனக்கு வலி அவ்வளவாக தெரிவதில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஊரடங்குக்கு முன்னதாக, வட மும்பையில் பாண்ட்ரா ரயில் நிலையத்திற்கு எதிரில் அவர்கள் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதே கிராமத்தையும், அதே சமுதாயத்தையும் சார்ந்த கிட்டத்தட்ட 50 குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் வசித்தனர். அனைவரும் இதே வேலையை செய்பவர்கள். நகரின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்கள் 8 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.

அவர்களின் வீடுகள், (தொற்றைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது) தார்ப்பாய், பிளாஸ்டிக் அல்லது துணியால் மூங்கில்களின் துணையோடு நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டிற்குள் படுத்துக்கொள்வதற்கு ஒரு தரைவிரிப்பு, கொஞ்சம் பாத்திரங்கள் மற்றும் துணிகள் உள்ளன. கசை (சாட்டை) மற்றும் டோலக் ஆகியவை ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. லட்சுமண், ரேகா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் ஒரு டென்ட்டிலும், அருகில் உள்ள மற்றொரு டென்டில் அவரின் பெற்றோர், தம்பிகள் எல்லப்பா மற்றும் ஹனுமந்தாவுடன் வசிக்கின்றனர்.

ரேகாவை நாம் முதல்முறை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்தித்தபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரால் வெறுங்காலுடன் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. அவர் சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டு, ஓய்வுக்காக ஆங்காங்கே அமர்ந்து கொண்டார். “நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், சில நேரங்களில் சோர்வாக உள்ளது. இது எனது மூன்றாவது குழந்தை. எனக்கு இந்த வேலை பழகிவிட்டது. நான் நிறுத்தினால், யார் எனது குழந்தைகளுக்கு உணவிடுவார்கள்?“ என்று அவர் கேட்கிறார்.

PHOTO • Aakanksha

மும்பையில் பாண்ட்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சேரி குடியிருப்பில் லட்சுமண் மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினரும் வசிக்கின்றனர்

அந்த குடும்பத்தினரின் வருமானத்தை நாம் அறுதியிட்டுக்கூற முடியாது. விழாக்காலங்களில், குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி மற்றும் தீபாவளி நாட்களில், மக்கள் கடவுளின் பெயரில் நிறைய கொடுப்பார்கள். ஒரு முழு நாள் நிகழ்ச்சிக்கு சில நேரங்களில் இந்த குடும்பத்தினர் ரூ.1,000 வரை ஈட்டுவார்கள். மற்ற சாதாரண நாட்களில் ரூ.150 முதல் ரூ.400 வரை சம்பாதிப்பார்கள்.

சில நேரங்களில், லட்சுமண் மற்றும் அவரது குடும்பத்தினர் தினக்கூலிகளாக வேலை செய்வார்கள். “குப்பை அள்ளுவது மற்றும் கட்டிட வேலைக்கு ஒப்பந்தக்காரர்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படும்போது, எங்களைப்போன்ற ஆண்கள் தயாராக இருப்போம் என்று அவர்களுக்கு தெரியும், அவர்கள் எங்களை அழைப்பார்கள்“ என்று அனுமந்தா கூறுகிறார். “நாங்கள், நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரத்தைப்பொறுத்து ரூ.200-ரூ.400 வரை சம்பாதிப்போம். எங்களுக்கு இந்த வேலை இருக்கும் வரை நாங்கள் இதை தொடர்ந்து செய்வோம். பின்னர் நாங்கள் எங்கள் தொழிலை செய்வதற்கு வந்துவிடுவோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவர்கள் அருகில் உள்ள மளிகை கடையில் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வார்கள். (அவர்களுக்கு குடும்ப அடையாள அட்டை வாங்குவதற்கு போதுமான ஆவணங்கள் கிடையாது) அவர்கள் குடியிருப்பில் தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. ரயில் நிலையத்தில் இருக்கும் குழாயையோ அல்லது அருகில் உள்ள சந்தில் இருக்கும் குழாயையோ தண்ணீருக்காக சார்ந்திருக்கிறார்கள். அந்த குழாய்கள் திறந்திருக்கும் காலை 5 முதல் 9 மணி வரை அவர்கள் தண்ணீர் பிடித்துக்கொள்கிறார்கள். அருகில் உள்ள ரயில் நிலைய கழிவறையை ஒருமுறை ஒரு ரூபாய் கொடுத்து உபயோகித்துக்கொள்கிறார்கள். குளிக்கவும், துணி துவைக்கவும் தலா ரூ.5 கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் திறந்தவெளிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அவர்களின் குடிசையில் மின் இணைப்பு இல்லை. அவர்களின் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கு அவர்கள் அருகில் உள்ள கடைக்காரர்களை சார்ந்திருக்கிறார்கள். கடைக்காரர்கள் ஒரு போனுக்கு ரூ.10 வசூலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், பாண்ட்ரா ரயில் நிலையம் அருகில் வசிக்கும் தேகு மேகு சமுதாய மக்கள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு செல்கிறார்கள். அப்போது, அவர்கள் குடியிருக்கும் தெருக்குள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சுவரில் சில துணிகள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

PHOTO • Aakanksha

குடும்ப படம் (இடமிருந்து வலம்) கட்டப்பா (லட்சுமணின் தந்தை), எல்லப்பா, ரேகா, மகள் ரேஷ்மா, லட்சுமண், மகன் ராகுல் (குடியிருப்பை சேர்ந்த 2 குழந்தைகள்)

ஊரடங்கு காலத்தில் லட்சுமணின் குடும்பத்தினர் மற்றும் அந்த குடியிருப்பில் உள்ள பல்வேறு குடும்பத்தினர் வேலையின்றியும், வருமானமின்றியும் திண்டாடினார்கள். மீண்டும் அவர்கள் கிராமத்திற்கு திரும்பினார்கள். அங்கும் அவர்கள் நிகழ்ச்சிகள் செய்தார்கள். ஆனால், 50 அல்லது 100 ரூபாயோ தான் ஈட்டினார்கள். ஊரடங்கு காலத்தில் இரவில் பட்டினி கிடந்தாதாக அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூறினார். பாண்ட்ரா ரயில் நிலைய குடியிருப்பு அருகில் வசித்து வந்த சில குடும்பத்தினர் இன்னும் திரும்பி வரவில்லை. லட்சுமண் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இன்னும் கிராமத்தில் தான் வசிக்கிறார்கள். மார்ச் மாதத்தின் இறுதியில் அவர்கள் வருவார்கள்.

லட்சுமண், அவரது குழந்தைகள் கிராமத்திலே படிக்க வேண்டும் என்று விரும்புகிறார். “எனது மகன் இடையில் நின்றுவிடாமல் ஒழுங்காக பள்ளி சென்று படித்தால், அவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்“ என்று தனது தம்பி ஹனுமந்தா பள்ளியில் இருந்து வீட்டுக்கு ஓடிவந்து விடுவதை எடுத்துக்காட்டி கூறுகிறார். பெரும்பாலான பிள்ளைகள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்லாமல் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். அந்தப்பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். வகுப்புகளும் முறையாக நடைபெறுவதில்லை. “எங்கள் கிராமத்தில் அவர்கள் படித்து கடையிலோ அல்லது கால்சென்டரிலோ வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்“ என ரேகா கூறுகிறார். “காவல் துறையினர் எங்களை துரத்தினால், மும்பையில் நாங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறோம். இந்நிலையில் எங்கள் குழந்தைகள் எங்கு சென்று படிப்பார்கள்?“ என்று ரேகா கேட்கிறார்.

லட்சுமண் மற்றும் ரேகாவின் மகள் ரேஷ்மாவுக்கு தற்போது வயது 5, ராகுலுக்கு வயது 3 மற்றும் அவர்களிக் கடைசி மகன் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் பிறந்தான். அவர்கள் இன்னும் பள்ளி செல்ல துவங்கவில்லை. ரேகாவும், லட்சுமணும் பள்ளி சென்றதில்லை. எல்லப்பா அவர்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். ஆனால், அவர் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மும்பை வந்துவிடுகிறார். “உண்மையில் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் பெரிய ஆளாக ஆக வேண்டும்“ என்று எல்லப்பா கூறுகிறார்.

ஒரு குழந்தை தெருக்களில் கசையடி நிகழ்ச்சிகள் செய்யத்துவங்குவதற்கு முன், அவர்கள் கிராமமான கொடம்பாளில், அந்த குடும்பத்தினர் பெண் தெய்வமான மாரியம்மனை வணங்குகிறார்கள். அவரின் ஆசிர்வாதங்களை பெறுகிறார்கள். அதை திருவிழாபோல் சடங்குகள் செய்து ஆட்டுக்கிடாய் பலி கொடுத்து கொண்டாடுவதாக கூறுகிறார்கள். “நாங்கள் தேவியிடம்,  மும்பைக்கு சென்று சம்பாதித்து வாழப்போகிறோம். எங்களை காப்பாற்றும்படி வேண்டிக்கொள்வோம்“ என்று லட்சுமண் கூறுகிறார். “எங்கள் தேவி எங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு வந்து வேலை செய்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவரும் அவரது குடுத்பத்தினரும் இன்னும் கிராமத்தில் இருந்து திரும்பவில்லை. மார்ச் மாத இறுதியில் அவர்கள் நகரத்திற்கு வருவார்கள்.

PHOTO • Aakanksha

கருப்பு நிற பருத்தியாலான பையை தோளில் சுமந்துகொண்டு, வெறுங்காலுடன், அவரது மனைவி ரேகா மற்றும் தம்பி 24 வயதான எல்லப்பாவுடன், மூடியிருந்த கடையின் முன்புறம் நிற்கிறார். அன்றைய நாளின் வேலையை துவங்குவதற்காக பையை திறந்து தயாராகிறார். முதலில் தனது வெற்று மார்பில் பெயின்ட் பூசிக்கொள்கிறார். முகத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மையை தடவிக்கொள்கிறார்

PHOTO • Aakanksha

பின்னர் அவர் காற்சலங்கைகளை அணிந்து கொள்கிறார்

PHOTO • Aakanksha

13 வயதான எல்லப்பாவும் இதையே செய்கிறார். அவரும் வண்ண மை பூசி, பாவாடை அணிந்து, கால்களில் சலங்கை மாட்டிக்கொள்கிறார்

PHOTO • Aakanksha

இது நிகழ்ச்சி துவங்கும் நேரம். இரண்டு பேரும் தயாராகிவிட்டார்கள். ரேகாவும் விரைவில் டோலக்கை எடுத்து அவர்களின் நடனத்திற்கு ஏற்ப வாசிப்பார்

PHOTO • Aakanksha

டிசம்பர் 2019ம் ஆண்டு 8 மாத கர்ப்பிணியான ரேகா, “நான் சில நேரங்களில் சோர்வாக உணர்கிறேன். இது எனது மூன்றாவது குழந்தை. இந்த வேலைக்கு நான் பழகிவிட்டேன். நான் நிறுத்திவிட்டால் எனது குழந்தைகளை யார் காப்பாற்றுவர்கள்“ என்று கேட்கிறார்

PHOTO • Aakanksha

எல்லப்பா இதற்கு மிகவும் புதுமையானவர். அதனால், அவர் கசையை தரையில் அடித்து ஒலியை எழுப்புகிறார்

PHOTO • Aakanksha

லட்சுமண் கசையை காற்றில் சுழற்றி தனது முதுகுப்புறத்தில், பெரிய ஓசையுடன் அடித்துக்கொள்கிறார். “நாங்கள் இந்த வலிக்கு எந்த மருந்தையும் உபயோகிக்க மாட்டோம். இந்த வலி எங்கள் தேவிக்கானது. அவர் எங்களை பாதுகாக்கிறார். சில நேரங்களில் எனது முதுகில் வீக்கம் ஏற்படும். தினமும் தொடர்ந்து வேலை செய்ய துவங்கியவுடன், அது சரியாகத்துவங்கிவிட்டது. இப்போது எனக்கு அதிக வலி ஏற்படுவதில்லை“ என்று அவர் கூறுகிறார்

PHOTO • Aakanksha

அவர்கள் மக்களிடம் யாசகம் கேட்டுக்கொண்டே தொடர்ந்து நகர்கிறார்கள். “எங்களுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுங்கள். கடவுள் உங்களை அனைத்து துயரங்களில் இருந்தும் காப்பார்“

PHOTO • Aakanksha

லட்சுமண் மற்றும் எல்லப்பா இருவரும் கடைக்காரர்கள் மற்றும் காய்கறி விற்பவர்களிடம் கேட்கிறார்கள. “சிலர் எங்களுக்கு உணவு கொடுப்பார்கள். கடவுளுக்காக நாங்கள் இதை செய்துகொண்டிருக்கும்போது சாப்பிட முடியாது. நாங்கள் வீடு திரும்பும் வரை உணவு உட்கொள்ள மாட்டோம்“ என்று லட்சுமண் கூறுகிறார்.

PHOTO • Aakanksha

சிலர் நின்று பார்க்கிறார்கள். சிலர் பார்க்காமல் கடந்து செல்கிறார்கள். சிலர் சில்லறை அல்லது பணத்தை போடுகிறார்கள். சில குழந்தைகள் பயந்து ஓடுகிறார்கள்

PHOTO • Aakanksha

எட்டு மாத கர்ப்பிணியான ரேகா ஒரு கடைக்காரர் கொடுக்கும் டீயை வாங்கிக்கொள்கிறார்

PHOTO • Aakanksha

‘எனது கொள்ளுத்தாத்தாவும், அவரது அப்பாவும் நிகழ்ச்சி நடத்துவதற்காக சுற்றித்திரிந்திருக்கிறார்கள். மாரியம்மா எங்களை ஆட பணித்துள்ளார். அவர் எங்களை பராமரிக்கிறார்“ என்று லட்சுமண் கூறுகிறார்

PHOTO • Aakanksha

அவர்களின் நிகழ்ச்சி ஒரு நாளைக்கு தேவையான அளவு பணம் கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், அவர்களின் வருமானத்தை அறுதியிட்டுக் கூற முடியாது. பெரிய விழாக்கள் நடைபெறும் நாட்களில், கடவுளின் பெயரால் மக்கள் பணம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். நாள் முழுவதும் நிகழ்ச்சி நடத்தினால், ஒரு குடும்பத்தினர் சில நேரங்களில் ஆயிரம் ரூபாய் வரை (ஊரடங்க்குக்கு முன்னர்) ஈட்டுவார்கள். மற்ற சாதாரண நாட்களில் அது ரூ. 150 முதல் ரூ.400 வரை கிடைக்கும்

PHOTO • Aakanksha

தெய்வத்திற்காக நிகழ்ச்சி நடத்தும் நாளின் இறுதியில், லட்சுமண் தனது முகத்தில் உள்ள பூச்சுகளை கலைகிறார்

PHOTO • Aakanksha

பாண்ட்ரா ரயில் நிலையம் அருகே உள்ள தங்களது குடியிருப்புக்கு அந்த குடும்பத்தினர் திரும்புகிறார்கள். அங்கு அவர்களை சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் மூங்கில்களின் உதவியுடன் தார்ப்பாய், பிளாஸ்டிக் அல்லது துணியாலான தற்காலிக டென்ட்கள் அமைத்து அதில் வசிக்கிறார்கள்

PHOTO • Aakanksha

இந்த சேரி குடியிருப்பில் தண்ணீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இங்குள்ள குடும்பத்தினர் ரயில் நிலையத்தில் அல்லது அருகில் உள்ள சந்தில் உள்ள குழாய் திறந்திருக்கும் காலை 5 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்களின் குடிசைகளில் மின்சார வசதி கிடையாது. அவர்களின் போன்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து சார்ஜ் போட்டுக்கொள்கிறார்கள்

PHOTO • Aakanksha

ரேகா, அவரது மகள் ரேஷ்மா, மாமியார் எல்லம்மா மற்றும் ரேகாவின் மகன் ராகுல். இந்தக்குழந்தைகள் இன்னும் பள்ளி செல்ல துவங்கவில்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். “எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் அவர்கள் படிக்க வேண்டும் என விரும்புகிறேன்“ என்று ரேகா கூறுகிறார். “என் மகன் படித்துவிட்டால் அவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்“ என்று லட்சுமண் மேலும் கூறுகிறார்

தமிழில்: பிரியதர்சினி. R.

Aakanksha

ਆਕਾਂਕਸ਼ਾ ਪੀਪਲਜ਼ ਆਰਕਾਈਵ ਆਫ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਦੀ ਰਿਪੋਰਟਰ ਅਤੇ ਫੋਟੋਗ੍ਰਾਫਰ ਹਨ। ਉਹ ਐਜੂਕੇਸ਼ਨ ਟੀਮ ਦੇ ਨਾਲ਼ ਇੱਕ ਸਮੱਗਰੀ ਸੰਪਾਦਕ ਵਜੋਂ ਅਤੇ ਪੇਂਡੂ ਖੇਤਰਾਂ ਵਿੱਚ ਵਿਦਿਆਰਥੀਆਂ ਨੂੰ ਉਹਨਾਂ ਦੇ ਆਲ਼ੇ-ਦੁਆਲ਼ੇ ਦੀਆਂ ਚੀਜ਼ਾਂ ਨੂੰ ਦਸਤਾਵੇਜ਼ੀਕਰਨ ਲਈ ਸਿਖਲਾਈ ਦਿੰਦੀ ਹਨ।

Other stories by Aakanksha
Editor : Sharmila Joshi

ਸ਼ਰਮਿਲਾ ਜੋਸ਼ੀ ਪੀਪਲਸ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਦੀ ਸਾਬਕਾ ਸੰਪਾਦਕ ਹਨ ਅਤੇ ਕਦੇ ਕਦਾਈਂ ਲੇਖਣੀ ਅਤੇ ਪੜ੍ਹਾਉਣ ਦਾ ਕੰਮ ਵੀ ਕਰਦੀ ਹਨ।

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.