70 ஆண்டுகள் விவசாய தொழிலாளியாக இருந்த கங்கப்பாவிற்கு இப்போது சுமார் 83 வயதிருக்கும். அவர் தன்னை மகாத்மா காந்தியைப் போன்று வேடமிட்டுக் கொள்கிறார். மேற்கு ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் நகரெங்கிலும் 2016 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் இவ்வாறு உடையணிந்து வருகிறார். விவசாயத் தொழிலாளியாக கிடைத்ததை விட இப்போது சிறப்பான உதவிகளும், வருவாயும் அவருக்கு கிடைக்கின்றன.
“உங்கள் வயது வந்தவுடன் உங்களைப் போன்று உடையணிவேன், சுவாமி,” என்று அனந்தபூருக்கு காந்திஜி வந்தபோது அவரைச் சந்தித்து தெரிவித்ததாக கங்கப்பா கூறுகிறார். “அச்சமயத்தில் என் பெற்றோர் பெருரு தொட்டியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.” கங்கப்பா பிறந்த சென்னம்பள்ளி பெருருவிலிருந்து மிக தொலைவில் இல்லை. காந்திஜி தான் விரும்பியதை அடைந்தது, அவரது வீரமிக்க கட்டளைத் திறன் போன்றவை இளம் கங்கப்பாவை ஈர்த்தது.
மகாத்மா காந்தியைச் சந்தித்ததாக கங்கப்பா கூறுவது அல்லது அந்த தேதியை கண்டறிவது என்பது கடினமானது. காந்தி குறித்த நினைவுகளே அவரை வாழ வைக்கின்றன. கங்கப்பாவிற்கு பயணம் செய்வது பிடிக்கும் – பயணங்களும், பொறுமையும் தான் காந்தியைப் போன்று ஆவதற்கு உதவும் என அவர் நம்புகிறார்.
கங்கப்பாவை (தனது பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) மக்கள் தவறுதலாக கங்குலப்பா என்று அழைப்பதால் அதுவே தனது இப்போதைய பெயர் என்கிறார் அவர். காந்தியைப் போன்ற தோற்றத்திற்காக அவர் பூணூல் அணிகிறார். நெற்றி, கால்களில் குங்குமம் அணிகிறார். காந்தியின் உடையில் சில சமயம் மக்களை சாமியாரைப் போன்று கைகளால் ஆசிர்வதிக்கிறார்.
சாதிய அடையாளம் தான் உள்ளூர் கோயிலின் கதவுகளை தனக்கு திறந்துவிட்டதாக அவர் கருதுகிறார். பகல் பொழுதுகளில் கோயில் வளாகத்திலுள்ள கல் மேடையில் அமர்ந்திருக்க அவர் அனுமதிக்கப்படுகிறார். கோயிலின் நீர்க் குழாயில் அவர் தனது வேடத்தை கழுவி குளிக்கவும் செய்கிறார்.
கங்கப்பாவிற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனான உறவு பத்தாண்டுகளாகவே சரியாக இல்லை. அப்போது என் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டாள். “காட்டில் குழி தோண்ட நான் கொல்லபள்ளி சென்றிருந்தேன். வீடு திரும்பியபோது என் மகள் இறந்து கிடந்தாள்,” என்று அவர் சொல்லும்போதே கண்களில் கண்ணீர் கரை புரள்கிறது. “என் மகள் ஏன் இறந்தாள் என இப்போதும் எனக்குத் தெரியாது. அதுபற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. என்னால் எப்படி அக்குடும்பத்துடன் செல்ல முடியும்?”
அஞ்சனம்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக கங்கப்பாவிடம் பேசுவதில்லை. அவரது கணிக்க முடியாத வாழ்க்கை முறையை அவர் வெறுக்கிறார். அவர் இப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர் விரும்புகிறார். “அவரை தயவு செய்து திரும்ப வரச் சொல்லுங்கள். என்னிடம் கைப்பேசி கிடையாது, இம்மாதம் காபி பொடி வாங்க பணமில்லை. குழந்தைகள் [இளைய மகளின் இரண்டு மகன்கள்] கேட்டால் கொடுக்க சில்லறை காசுகூட இல்லை.” அனந்தபூரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரந்தலா கிராமத்தில் இளைய மகளுடன் வசிக்கும் அஞ்சனம்மாவை நான் சந்தித்தேன்.
வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு அவர் தொடர்ந்து வயல்களில் வேலை செய்துள்ளார். நிறைய மது குடிக்கத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு வயலில் அவர் மயங்கி விழுந்தார். “மாலா புன்னாமிக்கு [ஆண்டு திருவிழா] பிறகு விவசாய வேலை செய்வதை நான் நிறுத்திவிட்டேன்,” என கங்கப்பா நினைவுகூர்கிறார். “சில நாட்கள் கயிறு திரித்தேன், ஆனால் அதிக வருவாய் அதில் கிடைக்கவில்லை.”
அவர் தன்னை மறுஆய்வு செய்தபோது காந்தியின் நினைவு வந்துள்ளது.
அன்றாடம் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு கங்கப்பா தனது காந்தி வேடத்தை மேம்படுத்திக் கொள்கிறார். மகாத்மா காந்தியைப் போன்று “ஒளிர” கடையிலிருந்து 10 ரூபாய் பிளாஸ்டிக் பெட்டியில் பான்ட்ஸ் பவுடர் வாங்கி பயன்படுத்துகிறார். சாலையோர கடையில் மலிவான குளிர் கண்ணாடி வாங்கி காந்தி கண்ணாடி போன்ற தோற்றத்தைத் தருகிறார். சந்தையிலிருந்து 10 ரூபாய்க்கு கைத்தடி வாங்கி நடைக்கு பயன்படுத்துகிறார். தனது அலங்காரம், உடை இரண்டையும் இருசக்கர கண்ணாடியில் அவ்வப்போது பார்த்து சரிசெய்து கொள்கிறார்.
வயல்களில் வேலை செய்தபோது கங்கப்பா பெரும்பாலும் அரைகால் சட்டை அணிந்திருந்தார். “இப்போது வேட்டியணிந்து, தலையை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை மழித்துக் கொள்கிறேன்,” என்கிறார் அவர். புகைபிடித்தல், மது பழக்கம் உள்ளபோதும் காந்தி உடை அணிந்தவுடன் தூய்மையாக இருப்பதாக அவர் உறுதி அளிக்கிறார். சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்களில் நடைபெறும் திருவிழாக்கள், மாத சந்தைகளுக்குச் சென்று ஒரு நாளுக்கு 150-600 வரை சம்பாதிக்கிறார். “ஒரு திருவிழாவின் போது நான் ஒரே நாளில் 1,000 ரூபாய் சம்பாதித்தேன்,” என்கிறார் அவர் பெருமையுடன்.
“இன்று கதிரி புன்னாமி என்பதால் ஒரே இடத்தில் ஆறு மணி நேரம் நான் நின்றேன்,” என்கிறார் அவர். அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியில் உள்ள கிராமங்களில் ஆண்டிற்கு ஒருமுறை பவுர்ணமியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள புட்டபர்த்தி நகருக்குச் சென்றபோது குருபா புஜம்மாவை கங்கப்பா சந்தித்தார். வயது 70களில் உள்ள அவர் புட்டபர்த்தி முதல் பெனுகோண்டா வரை 35 கிலோமீட்டர் பயணம் செய்து பிச்சையெடுத்து வந்தார். “ஒரு மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் தனிமையில் அமர்ந்திருப்பதை கண்டேன்,” என்கிறார் அவர். “என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். என்னுடன் வருகிறாயா என கேட்டார், நானும் ஒப்புக் கொண்டேன். ‘என்னுடன் வா. நாம் செல்லும் இடமெல்லாம் உனக்கு சுற்றிக் காட்டுகிறேன்‘.” எனவே புஜம்மா கங்கப்பாவிற்கு உதவியாக, அவரது காந்தி ஆடைக்கு, முதுகிற்கு பவுடர் பூசுவதற்கு, அவரது துணிகளை துவைப்பதற்கு என உதவிகளை தொடங்கினார்.
கங்கப்பாவுடன் கூட்டு சேர்வது புஜம்மாவிற்கு எளிதாக அமையவில்லை. “ஓர் இரவு” அவர் சொல்கிறார், “அவர் எங்கோ சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. நான் தனியாக இருந்தேன், அச்சமாக இருந்தது. நான் தகர நிழலில் அமர்ந்து கொண்டேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது. எனக்கென்று யாரும் இப்போது கிடையாது. அவர் தாமதமாக இரவு உணவுடன் திரும்பினார்!”
நெடுஞ்சாலைக்கு அருகே அனந்தபூரின் புறநகரில் கங்கப்பாவும், புஜம்மாவும் வசிக்கின்றனர். காந்தியின் விரும்பியான உணவக உரிமையாளர் ஒருவரின் கடைக்கு வெளியே அவர்கள் உறங்குகின்றனர். கங்கப்பா பொதுவாக காலை 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். வயல்களில் வேலை செய்தபோது கடைபிடித்ததைப் போலவே இரவு 9 மணிக்கு உறங்கச் செல்கிறார்.
அவர் உறங்கும் உணவகத்திலேயே சில சமயம் உணவளித்து விடுகின்றனர். சாலையோர கடைகளில் சில சமயம் காலை உணவு உண்கிறார். மதிய உணவை தவிர்க்கிறார். புஜம்மா சாப்பிட்டாரா என்பதையும் கங்கப்பா உறுதி செய்கிறார். நல்ல உணவிற்கு ஆசைப்பட்டால் அவர் கேழ்வரகு, கோழிக்கறி, அரிசி வாங்கி வருகிறார். சாலையோரம் அடுப்பு அமைத்து புஜம்மா கோழிக்கறி குழம்பு கேழ்வரகு, அரிசி உருண்டை [ராயலசீமாவின் வழக்கமான உணவு] செய்கிறார்.
இது ஒரு எளிய வாழ்க்கை. இது வழக்கத்தைவிட சிறப்பானது. காந்தியாக அவர் இருக்கும் வரை உணவு, உறைவிடம் குறித்து அவர் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் இப்போதெல்லாம் காந்தியை எல்லோரும் நினைப்பதில்லை என கங்கப்பா கவலை கொள்கிறார். எப்படி அவர்கள் மறந்தார்கள்? “சில சிறுவர்கள் வந்து காந்தியைப் போன்று உடை அணிவதை நிறுத்துமாறு என்னிடம் சொன்னார்கள்,” என அவர் நினைவுகூர்கிறார். “இப்போதெல்லாம் ரூபாய் நோட்டுகளில் காந்தியை அகற்ற அரசு முயன்று வருவதால், நீங்கள் ஏன் அப்படி உடை அணி வேண்டும்? என்று என்னிடம் கேட்டனர்.”
கட்டுரைக்கு பிறகு: சில நாட்களுக்கு முன் கங்கப்பாவை பூஜம்மா விட்டுச் சென்றுவிட்டார். “உகாதி பண்டிகையின் போது அவர் விட்டுச் சென்றார்,” என்கிறார் அவர். “அவள் திரும்ப வரமாட்டாள். அவள் அங்கு பிச்சை எடுத்து வாழப் போகிறாள். நான் அவளுக்கு 400 ரூபாய் கொடுத்தேன். நான் இப்போது தனியாக இருக்க வேண்டும்.”
தமிழில்: சவிதா