யமுனா ஜாதவைப் பார்த்தால் இரண்டு நாள்களாக அவர் அறவே தூங்கியதாகவே தெரியவில்லை. புடைத்தபடியான கையை உயர்த்தி லால் சலாம் என முழக்கமிட்டவர், “அடுத்த இரண்டு நாள்கள் நாங்கள் முன்னேறிச் செல்வோம்” என நம்பிக்கையோடு சொன்னார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் துட்கான் கிராமத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு முன்னர்தான் டெல்லியை வந்துசேர்ந்தார். ”நவம்பர் 27 இரவு நாசிக்கிலிருந்து தொடர்வண்டியைப் பிடித்தோம். முன்பதிவெல்லாம் செய்யவில்லை. வழிமுழுக்க கதவையொட்டி உட்கார்ந்து வந்தோம். 24 மணி நேரம் அசையாமல் உட்கார்ந்துவந்ததால் முதுகு வலிக்கிறது” என்றார்.
சில்லென இருக்கும் குளிர்காலைப் பொழுதில் நவ.29 அன்று டெல்லிக்கு வந்துசேர்ந்த பத்தாயிரக்கணக்கான உழவர்களில் யமுனாவும் (முகப்புப் படத்தில் மேலே இருப்பவர்) ஒருவர். 150-200 விவசாயக் குழுக்கள் மற்றும் சங்களைக் கொண்ட அனைத்திந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவே, இந்த இரண்டு நாள் போராட்டத்துக்காக நாடு முழுவதும் உழவர்களைத் திரட்டியது. இன்று நவ.30-ம் தேதி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்கின்றனர். விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக 21 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்பதை முதன்மையாக வலியுறுத்தியே அவர்களின் போராட்டம்!
மகாராஷ்டிரத்திலிருந்து குறைந்தது 3 ஆயிரம் பேர் வந்திருப்பார்கள்; மற்ற மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வந்துள்ளனர் என்றார் அனைத்திந்திய விவசாயிகள் சபையின் ஒரு தலைவரான அஜித் நாவலே. யமுனாவைப் போன்ற ஏராளமானவர்கள் ரூ.150 நாள்கூலி ஈட்டும் உழவுத் தொழிலாளர்களே.
தீவிரமடைந்துவரும் வேளாண் நெருக்கடியானது நேரடியாக தங்களின் வருவாயை பாதிப்பதாகக் கூறுகிறார், யமுனா. ”பெரும்பாலான தோட்ட வேலைகள், பணம் சம்பாதிப்பதற்கான பிற வேலைவாய்ப்புகள்..” எனும் அவரின் தலையில் சிவப்புநிற விவசாயி சபைத் தொப்பி பளிச்சிடுகிறது. ”இப்போது மகாராஷ்டிரத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. (பருவமழைக்குப் பின்னர்) ராபி பருவத்துக்கு உழவர்கள் இன்னும் விதைக்கவேயில்லை. நாங்கள் வேலைக்கு எங்கே போவது?” என்றார் யமுனா.
அஸ்ரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் உள்ள சிறி பாலசாகிப்ஜி குருத்வாராவில்தான், டெல்லிக்கு வந்த உழவர்களில் பெரும்பாலோர் தங்கியிருந்தனர். அங்குதான் அவர்களுக்கு 11 மணிவாக்கில் காலை உணவாக அரிசி, பருப்பு சோறு வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. நாசிக் மாவட்டத்தில் உள்ள கங்கவரே கிராமத்தைச் சேர்ந்த துல்ஜாபாய் படாங்கே,35, முந்திய நாள் இரவுக்கு பக்ரியும் சட்னியும் கொண்டுவந்ததாகக் கூறினார். ஆனால் இரண்டாவது முறை அதையே உண்ணமுடியவில்லை.” இந்தப் பயணத்துக்காக ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளோம். நேற்று உணவுக்கு மட்டும் 200 ரூபாய் செலவு. நாசிக் தொடர்வண்டி நிலையத்துக்கு வந்துசேர ரிக்சாவுக்கு செலவாயிற்று. ஐந்து நாள்களுக்கு வேலையையும்(கூலியையும்) இழக்கவேண்டியிருக்கும் என்கிற யதார்த்தத்தை ஏற்றுதான் வந்திருக்கிறோம். இந்தப் பேரணி என்பது ஒரு நிலையை வெளிப்படுத்துவது. மும்பையில் முன்னர் நடத்திக்காட்டினோம்; இப்போது மீண்டும் நடத்துகிறோம்.” என்றார் யமுனா.
நாசிக் மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியைப் பொறுத்தவரை, நெடுங்காலமாக பயிர்செய்துவரும் நிலத்தை குறிப்பிட்ட பழங்குடியினருக்கே சொந்தமாக்கும் 2006 வனவுரிமைச் சட்டத்தைச் செயல்படுத்தவே இல்லை என்பது முதன்மையான கோரிக்கை. பல பத்தாண்டுகளாக பழங்குடியின விவசாயிகள் உழவுசெய்துவரும் நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை என்றார் படாங்கே.”எனக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றாலும் மற்ற உழவர்களின் நிலத்தில் வேலை செய்துகொள்கிறேன். அவர்களுக்கே நிலம் இல்லை என்றால் வேலைக்கு எங்கே போவது?” என்றும் கேட்கிறார்.
பழங்குடியினர் பகுதியைத் தாண்டிய மகாராஷ்டிரத்தின் உழவர்களுக்கும் வேளாண்மைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பாசன வசதியின்மை, தண்ணீர்த் தட்டுப்பாடு, நியாயமற்ற பயிர்க் காப்பீட்டுக் கொள்கை, கடன் தள்ளுபடி பிரச்னை ஆகியவை முதன்மையான இடர்கள். சொன்னது எதுவும் நடப்பில் இல்லை என்றார், அகமதுநகர், அம்பேவங்கன் கிராமத்தைச் சேர்ந்த தேவ்ராம் பாங்ரே,70. நண்பகல் 12.30 மணிக்கு பேரணியானது டெல்லியின் தெருக்களில் சென்றுகொண்டிருந்தபோது, அவரிடம் பேசினோம். ”உழவர்களுக்கு விதைப்புக் காலமான ஜூன் மாதத்தில் மிகவும் அரிதாகத்தான் பயிர்க்காப்பீடு கிடைத்திருக்கிறது. ஒரு உழவருக்கு பணம் கிடைக்காவிட்டால் கூலி ஆள்களைக் (உழவுத் தொழிலாளர்களை) குறைப்பார். குடிநீர்த் தட்டுப்பாட்டால் எங்கள் ஊரே பாதிக்கப்பட்டுள்ளபோதும், எந்த உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. மோடி அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கோபமாக இருக்கிறோம் என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும்.” என்றார் தேவ்ராம்.
வெள்ளம்போல டெல்லியின் தெருக்களை நிறைத்த உழவர்கள், சிவப்புக் கொடிகளுடனும் டி-சட்டைகளுடனும் மோடி சர்க்கார் ஹோஷ் மெய்ன் ஆவோ என முழக்கமிட்டனர். சுற்றியிருந்தவர்களும் பயணிகளும் பார்த்துக்கொண்டிருக்க, உழவர்கள் மேலும் உரத்தகுரலில் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்டபடியும் விசையோடும் உழவர்கள் இராமலீலை மைதானத்தை நோக்கி நடைபோட்டனர். நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒன்பது கி.மீ. டெல்லியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள அங்குதான் அன்றைய இரவை அவர்கள் கழிக்கப்போகின்றனர். ஐந்து கி.மீ. நடைக்குப் பின்னர் ஒரே இடத்தில் இடைவேளைவிட்ட பிறகு மாலை 4.30மணிக்கு பேரணி சென்றவர்கள் மைதானத்தை அடைந்தனர்.

தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்