அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முக்கிய தலைவரான அஜித் நாவ்லே கூறுகையில், `தில்லியில் சங்கமித்துள்ள விவசாயிகளில் 3000 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள்`, என்றார். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலியாக ரூ.150/ பெறும் விவசாய தொழிலாளர்களாவர்.
தேசம் முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கும் விவசாய நெருக்கடியால் தன்னை போன்றோரின் வருமானம் நேரடியாக பாதிப்பதாக சொல்கிறார் கையில் செங்கொடியை பிடித்துக்கொண்டே சிவப்பு நிற உடையில் இருந்த யமுனா. `விவசாய நிலங்களில் விவசாய பணிகள் அதிகமாக நடைபெறும் போதுதான் எங்களுக்கு வேலையும், வருமானமும் கிடைக்கும்`, என்கிறார். `தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் பருவமழைக்கு பிந்தைய சாகுபடிக்கான பணிகள் எதுவும் துவங்கவில்லை. அதனால் எங்களுக்கு வேலை எதுவும் கிடைப்பதில்லை`, என வருந்துகிறார்.
நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீ பாலா சாகிப்ஜி குருத்வாராவில்தான் பெரும்பாலான விவசாயிகள் ஓய்வெடுத்தனர். அங்கு தயாரிக்கப்பட்டிருந்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு பேரணிக்கு தயாராகியிருந்தனர். மகாராஷ்டிராவின் கங்காவரே கிராமத்திலிருந்து பேரணிக்கு வந்துள்ள துல்ஜாபாய் படாங்கே உணவிற்காக பாக்ரியும் சட்னியும் எடுத்து வந்ததாகவும், முதல் நாள் இரவுக்கு அது போதுமானதாக இருந்தது எனவும் ஆனால் இரண்டாவது நாளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தார். `எங்கள் பயண செலவாக ரூ.1000/ வைத்திருந்தோம். நாசிக் ரயில் நிலையம் வந்தடைய ரிக்க்ஷாவிற்கு செலவு செய்தோம். இந்த பேரணிக்கு வருவதால் 5 நாட்களுக்கு வேலைக்கு (கூலியும் கிடைக்காது) செல்ல இயலாது என அறிந்து தான் இங்கு வந்துள்ளோம். இந்த பேரணி மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். ஏற்கனவே மும்பையில் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தினோம். இங்கும் அவ்வாறே நடத்துவோம்`, என கூறினார்.
பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் நாசிக் பகுதியில் `வன உரிமைகள் அமலாக்க சட்டம்(2006)` அமலில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய கவலைக்குரிய செய்தியாகும். இந்த சட்டம் பழங்குடி மக்களுக்கு அவர்கள் பல ஆண்டுகளாக சாகுபடி செய்யும் நிலத்தின் மீது உரிமை வழங்க வழிவகை செய்கிறது. பல ஆண்டுகளாக தாங்கள் உழுது, விவசாயம் செய்யும் நிலத்தின் மீது இதுவரை எந்த உரிமையும் இல்லை என்பதை கவலையோடு தெரிவித்தார். `எனக்கு சொந்தமாக அதிக அளவிலான நிலம் இல்லை, மற்ற விவசாயிகளின் நிலத்தில் வேலை செய்கிறேன்`, என்கிறார் 35 வயதான இந்த பெண் விவசாய தொழிலாளி. `எங்கள் நிலத்தின் மீதான உரிமையை நாங்கள் இழந்து விட்டால், எங்கள் வாழ்வாதாரத்திற்கு எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகும்`, என கவலையோடு கூறுகிறார்.