பதர் கான் எனும் பாடலை உருவாக்குவதே படச்சித்திரத்தின் முதல் படி. “ஓவியம் தீட்டுவதற்கு முன், பாடல் பத்தியை நாம் தயார் செய்ய வேண்டும்... அதன் தாளம் ஓவியத்திற்கான வடிவத்தை அளிக்கும்” என்கிறார் மமோனி சித்ரகார். எட்டாவது தலைமுறை ஓவியரான அவர் தனது வீட்டில் அமர்ந்தபடி மேற்கு வங்கத்தின் கிழக்கு கொல்கத்தா சதுப்பு நிலங்களை படச்சித்திரமாக உருவாக்குகிறார்.
துணி என்ற அர்த்தம் கொண்ட ‘படா’ எனும் சமஸ்கிருத சொல் மற்றும் சித்திரம் என்ற அர்த்தம் கொண்ட ‘சித்ரா’ என்ற சொல் ஆகியவற்றிலிருந்து இக்கலைக்கு இப்பெயர் கிடைத்தது. சதுப்பு நிலங்களால் செழுமையுற்ற சிக்கலான சுற்றுச்சூழல் அமைப்பை மமோனி வர்ணிக்கும்போது, படச்சித்ராவின் நடிப்புடன் வரும் படர் கானை பாடுகிறார். அவரே எழுதி இசையமைத்த இந்தப் பாடல், “கேளுங்கள், எல்லோரும் கேளுங்கள், கவனமாக கேளுங்கள்”என்ற அழைப்போடு தொடங்குகிறது.
“பல உயிர்களுக்கு உயிர்நாடியாக” இருக்கும் கிழக்கு கொல்கத்தா சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை இப்பாடல் விளக்குகிறது. படாவில் மீனவப் படங்கள், விவசாயிப் படங்கள், அகண்ட விளைநிலங்கள் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. அது காகித சுருள்களாக துணிகளில் ஒட்டப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின்போது இறுதி படா சுருள் விரியும்போது அந்த ஓவியத் தொகுப்பும், பாடல் பத்தியும் இசைந்து போகிறது. இவ்வகையில் மமோனி ஓவியம், இசை மூலம் சதுப்புநிலங்களின் கதையை சொல்கிறார்.
பஷ்சிம் மேதினிபூரில் பிங்கலா தாலுக்காவில் உள்ள நயா, மமோனியின் பூர்வீக கிராமம். இங்கு 400 கைவினை கலைஞர்கள் வரை வசிப்பதாக அவர் மதிப்பீடு செய்கிறார். இத்தாலுக்காவில் வேறு எந்த கிராமத்திலும் இத்தனை கலைஞர்கள் படசித்திரத்தை பயிற்சி செய்யவில்லை. “கிராமத்தில் இருக்கும் கிட்டதட்ட 85 வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன,” என்கிறார் அப்பகுதியில் வசிக்கும் 32 வயது ஓவியரான அவர். அப்பகுதியின் வன விலங்குகள், பூக்கள், செடிகள் ஒளிரும் வண்ணங்களில் ஓவியங்களாக சுவர்களில் தீட்டப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார் அவர். “எங்கள் கிராமமே அழகாக காட்சியளிக்கிறது,” என்றார்.











