அதிகாலையில் சுனிதா சாகு சிரமப்பட்டு திரும்பி, தனது கணவரிடம் “நமது குழந்தைகள் எங்கே?“ என்று கேட்கிறார். அதற்கு அவரது கணவர் போத்ராம், அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதாக கூறுகிறார். அவர் பெருமூச்சு விடுகிறார். இது அவருக்கு உறக்கமில்லாத இரவு. போத்ராமுக்கு அது கவலையளித்தது. அவர் எப்போதும், சுனிதாவை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உறங்குபவர் என்று கேலி செய்வார்.
ஆனால், ஏப்ரல் 28ம் தேதி இரவு, போத்ராம் மற்றும் சுனிதாவின் மூன்று மகன்கள் (அவர்களின் வயது 12 முதல் 20 வரை இருக்கும்) ஒவ்வொருவராக தங்களது தாய்க்கு கை, கால், தலை மற்றும் வயிற்றில் சூடான கடுகு எண்ணெய் வைத்து தேய்த்து மசாஜ் செய்துகொண்டிருந்தனர். அவர் வலியால் முனகிக்கொண்டிருந்தார். “எனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது“ என்று அவர் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். இவை போத்ராம் காலையில் நம்மிடம் நினைவுபடுத்திக்கூறியவை.
லக்னோ மாவட்டத்தில் உள்ள கர்காபூர் ஜாகிரில் ஒரு குடிசையில் சாகுவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சட்டிஸ்கரில் உள்ள பிமேட்ராவில் உள்ள மாரோ கிராமத்தில் உள்ள சின்ஹாட் வட்டத்திலிருந்து, அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்திற்கு வந்தனர். போத் ராம் (42), கட்டிடங்களில் கொத்தனாராக வேலை செய்கிறார். சுனிதா (39), இல்லத்தை பராமரிப்பவராக உள்ளார்.
ஏப்ரல் மாதத்தில்தான் கோவிட் – 19 தொற்றின் இரண்டாவது அலை உத்ரபிரதேசத்தை கடுமையாக தாக்கியது. ஏப்ரல் 24ம் தேதி மாநிலத்தில் 38 ஆயிரத்து 55 புதிய கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதுவே எப்போதும் இருந்திராத அளவு உச்சத்தை தொட்ட எண்ணிக்கை. உத்ரபிரதேசம் எண்ணிக்கையை குறைத்து காட்டிதையும் மனதில் கொள்ள வேண்டும்.
“உண்மையான எண்ணிக்கை, அரசு அறிவித்ததைவிட 4 முதல் 5 மடங்கு அதிகமாக இருக்கலாம். அச்சத்தால் மக்கள் பரிசோதனைகள் செய்ய முன்வராததால், எண்ணிக்கை குறைந்தது. எனவே உண்மை நிலையை கண்டறிவது மிகக்கடினம்“ என்று லக்னோவில் உள்ள ராம் மனோகர் லூகியா மருத்துவ அறிவியல் மையத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ரேஷ்மி குமாரி கூறுகிறார்.
கொரோனா வைரசின் அறிகுறிகளான காய்ச்சல், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தும், குடும்பத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பதால், சாகு குடும்பத்தினர் சுனிதாவிற்கு நிச்சயம் கோவிட் – 19 தொற்று ஏற்படவில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.












