ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஹர்சனா கலன் கிராம இளைஞர்கள் குளிர்கால மதிய வேளைகளில், வயலில் வேலை முடிந்த பிறகு மரத்தடி நிழலில் இளைப்பாறுவது அல்லது சீட்டுக்கட்டு விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அங்கு பெண்களை பார்க்கவே முடியாது.
“இங்கு ஏன் பெண்கள் வர வேண்டும்?" என்று கேட்கிறார் அவ்வூர் வாசியான விஜய் மண்டல். “அவர்களுக்கு எப்போதும் வேலை இருப்பதால் இதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. அதுவுமில்லாமல் இதுபோன்ற பெரிய மனிதர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை? " என்று கேட்கிறார் அவர்.
நாட்டின் தலைநகரான டெல்லியிலிருந்து வெறும் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை இக்கிராம பெண்கள் வெளியில் செல்லும்போது, கண்டிப்பாக முகத்தை துணியால் மூடிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
“ஊர் மத்தியில் ஆண்கள் கூடும் இடங்களை பெண்கள் பார்க்கவும் கூடாது” என்கிறார் மண்டல். ஆண்கள் கூடும் இந்த இடத்தில் தான் பிரச்சனைகளை தீர்க்க பஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெறுகின்றன. “அக்கால பெண்கள் எல்லாம் பாரம்பரியத்தை மதித்தார்கள்” என்று சொல்கிறார் ஹர்சனா கலனின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதிஷ் குமார்.
“அவர்களிடம் கண்ணியம், மரியாதை இருந்தது” என்று சொல்லும் மண்டல், “அவர்கள் பஞ்சாயத்து கூடும் இடங்களுக்குக் கூட முகத்தை மூடிக் கொண்டு தான் வருவார்கள்” என்று புன்னகை மலரச் சொல்கிறார்.
டெல்லிக்கு அருகே உள்ள மஜ்ரா தபாஸ் எனும் கிராமத்திலிருந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இக்கிராமத்திற்கு வந்த 36 வயதாகும் சாய்ராவிற்கு இந்தக் கட்டுப்பாடுகள் ஒன்றும் புதிதல்ல. ஆண்களைப் போல் குலப்பெயரை போட்டுக் கொள்ளாமல் முன்பெயரை மட்டும் வைத்துக் கொள்ளவே அவர் விரும்புகிறார்.
“திருமணத்திற்கு முன்பே என் கணவரை பார்த்திருந்தால், இதற்கு சம்மதித்திருக்க மாட்டேன். இக்கிராமத்திற்கு வருவதற்கும் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன்” என்று சொல்லும் சாய்ராவின் விரல்கள், தையல் இயந்திரத்தில் லாவகமாக ஊதா நிறத் துணியை செலுத்தி, திறன்பட தைத்துக் கொண்டிருக்கின்றன. (இக்கட்டுரையில் அவரது பெயர், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.)











