"எல்லோரும் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நாங்களும் அதையே செய்கிறோம்", என்று ஒருவித நிச்சயமற்ற தன்மையுடன் கூறுகிறார் ரூபா பிரிகாகா.
'இது' ஒரு மரபணு மாற்றப்பட்ட (GM) பிடி பருத்தி விதைகள், இப்போது அதை உள்ளூர் சந்தையிலோ அல்லது ஒருவரின் சொந்த கிராமத்திலேயே கூட எளிதாக வாங்க முடிகிறது. தென்மேற்கு ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மற்றும் இவரது கிராமத்திலும் உள்ள அவரைப் போன்ற எண்ணற்ற பிற விவசாயிகளே அந்த 'எல்லோரும்' என்பவர்கள்.
"அவர்களுக்கு கை மேல் பணம் கிடைக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
பிரிகாகா 40 களில் இருக்கும் ஒரு கோண்டு ஆதிவாசி விவசாயி. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும், இவர் மலைச் சரிவை - 'டோங்கர் சாஸிற்கு' - 'மலை வேளாண்மை' - (இடம்பெயரும் விவசாய முறை) தயார் செய்கிறார். பல நூற்றாண்டுகளாக பிராந்திய விவசாயிகளால் பட்டை தீட்டப்பட்ட மரபுகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டு குடும்ப அறுவடையில் இருந்து சேமித்த விதைகளை பிரிகாகா விதைப்பார். இவை பல வகை உணவு பயிர்களை கொடுக்கும்: தினை மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும், துவரை மற்றும் கருப்பு உளுந்து போன்ற பருப்பு வகைகளையும், அத்துடன் பாரம்பரிய வகை காராமணி, கருஞ்சீரகம் மற்றும் எள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
இந்த ஜூலை மாதம் முதன்முறையாக, பிரிகாகா பிடி பருத்திக்கு மாறினார். அந்த சமயம் தான் நாங்கள் அவரைச் சந்தித்தோம். அப்போது அவர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ரசாயனம் கலந்த விதைகளை பிஷமகட்டக் வட்டத்திலுள்ள அவரது கிராமத்தில் மலைச் சரிவில் உள்ள தனது வயலில் விதைத்துக் கொண்டிருந்தார். ஆதிவாசிகளின் இடம்பெயர் விவசாய முறையில் இந்தப் பருத்தியின் ஊடுருவல் வியக்கத்தக்கதாய் இருந்தது. எனவே அவரிடமே அதைப் பற்றி கேட்டோம்.
"மஞ்சள் போன்ற பிற பயிர் வகைகளும் நல்ல பணத்தை ஈட்டித் தருகின்றன", என்று பிரகாகா ஒப்புக்கொள்கிறார். "ஆனால் அதை யாரும் செய்யவில்லை. எல்லோரும் தினையை (சிறுதானியம்) விட்டுவிட்டு பருத்தியையே பின் தொடர்கிறார்கள்", என்று கூறினார்.
ராயகடா மாவட்டத்தில் பருத்தியின் கீழ் உள்ள பகுதி வெறும் 16 ஆண்டுகளில் 5,200 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 2002 - 03 ஆம் ஆண்டில் பருத்தியின் கீழ் வெறும் 1631 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் 86,907 ஏக்கராக இருக்கிறது என்று மாவட்ட விவசாய அலுவலகம் தெரிவிக்கிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ராயகடா, கோராபுட் பிராந்தியத்தின் ஒரு பகுதி. இது உலகின் சிறந்த உயிரினப் பன்மை வள மையங்களில் ஒன்று.தவிர இது பல்வேறு வகையான நெற்பயிர்களை கொண்ட வரலாற்றுப் பகுதி. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 1959ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இப்பகுதியில் 1,700 க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன. அது இப்போது வெறும் 200 ஆக குறைந்துள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் இதையே நெல் சாகுபடியின் பிறப்பிடமாக கருதுகிறார்கள்.








