ஆச்சித் மத்ரே தனது வகுப்பறையில் ஒரே மாணவராக இருந்துப் பழகிவிட்டார். ஆனால் முழுப் பள்ளியிலும் எஞ்சியிருக்கும் கடைசி மாணவராக இருப்பது நிச்சயமாக அவருக்குப் புதிது.
சுமார் 18 மாதங்கள் தொற்றுநோயால் மூடியிருந்த பிறகு, 12 வயதான ஆச்சித் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி காலை 11 மணியளவில் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அதுதான் நிலவரம். பள்ளியின் மூன்று அறைகளும் காலியாக இருந்தன. ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் அவரது ஆசிரியர் மட்டுமே அவருக்காகக் காத்திருந்தார்.
2015-ம் ஆண்டு ஆச்சித் 1-ம் வகுப்பில் சேர்ந்தபோது, அவருக்கு ஆறு வயது. அப்போது அவருக்கு வேறு வகுப்புத் தோழர்கள் இல்லை. "நான் மட்டுமே அங்கு இருந்தேன்," என்று அவர் கூறுகிறார். பள்ளியில் சேர்ந்தக் கடைசி மாணவரும் அவர்தான். அப்போதும் கூட சுமார் 25 மாணவர்கள் பள்ளியில் இருந்தனர். அவர்கள் கராபுரி கிராமத்தின் மூன்று குக்கிராமங்களில் இருந்து வந்தவர்கள். சுமார் 1,100 மக்கள் அக்கிராமங்களில் வசிக்கின்றனர். மஹாராஷ்டிராவின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள எலிபெண்டா குகைகளுக்கு பெயர் பெற்ற கராபுரித் தீவு ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தெற்கு மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து, படகில் ஒரு மணிநேரப் பயணம்.
ஆச்சித்தின் ஜில்லா பரிஷத் பள்ளியில், 1 முதல் 7 வரை வகுப்புகள் இருந்தன. பத்தாண்டுகளுக்கு முன்பு 55-60 மாணவர்கள் இருந்தனர். பல ஆண்டுகளாக எண்ணிக்கைக் குறைந்து கொண்டிருந்தது. 2019-ல் 13 மாணவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மார்ச் 2020-க்குள் இந்த எண்ணிக்கை ஏழாகக் குறைந்தது. மேலும் 2020-21 கல்வியாண்டில், மூன்று பேர் 7-ம் வகுப்பை முடித்துவிட்டு, இரண்டு மாணவர்கள் வெளியேறியபோது, இருவர் மட்டுமே மிஞ்சினர். 6-ம் வகுப்பில் ஆச்சித், மற்றும் 7 ஆம் வகுப்பில் கவுரி மத்ரே. "இங்கே கற்பித்தல் சரியாக நடக்கவில்லை," என்று அவர் கூறினார். "அதனால்தான் எல்லோரும் வெளியேற ஆரம்பித்தார்கள்" என்கிறார்.


















